Friday, November 13, 2009

மகசின் சிறையில் தமிழ் கைதிகள் மீது தாக்குதல்; பலர் காயம்


கொழும்பு மகசின் சிறைச்சாலையில் சிங்கள கைதிகளுக்கும், தமிழ் அரசியல் கைதிகளுக்கும் இடையிலான மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் போது பலர் காயமடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் பி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

எனினும், அவர்கள் வைத்தியசாலைகளுக்கு எடுத்துச்செல்லப்படவில்லை. மூவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை சிறைக்கைதிகள், எழுப்புகின்ற போதும், சிறைக்குள் சென்று தமக்கு பார்வையிட அனுமதிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மூன்று கைதிகளை 200க்கும் மேற்பட்ட சிங்கள கைதிகள் தாக்கிய நிலையில் அவர்கள், கொல்லப்பட்டிருக்கலாம் என கைதிகள் சந்தேகம் எழுப்புவதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் 92 பேர், இருந்த அறைக்கு வந்த புதிய அதிகாரி ஒருவர் தகாத வார்த்தைகளால், பேசியுள்ளார். இதன் போது அதனை எதிர்த்த அதேநேரம் தமிழ் சிறைக்கூடத்தில் இருந்து சிங்கள கூடத்தை நோக்கி கல் ஒன்று எறியப்பட்டுள்ளது. இதனையடுத்து சிங்கள கைதிகள் நூற்றுக்கணக்கானோர், தம்மை தாக்கியதாக தமிழ் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எந்த ஒரு சிங்கள கைதியும் கைதுசெய்யப்படாத நிலையில், ஐந்து தமிழ் கைதிகள், ஒழுக்காற்று விசாரணைக்காக சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.