Tuesday, November 24, 2009

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு; நவ.30 இல் பிரகடனம் வெளிவரும்..நேற்று நள்ளிரவு வர்த்தமானி அறிவித்தல்

நியமனப் பத்திரங்கள் டிசெம்பர் மத்தியில்

ஜனாதிபதித் தேர்தல் நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு உத்தியோக பூர்வமாக அறிவுறுத்தி உள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க தாம் நேற்று நள்ளிரவு வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரியப்படுத்தி உள்ளார்.

தேர்தல் விதிகளின் பிரகாரம் நவம்பர் 30 ஆம் திகதி அளவில் ஆணையாளரின் ஜனாதிபதித் தேர்தல் குறித்த பிரகடனம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசெம்பர் மத்தியில் தேர்தலில் போட்டியிடுவோர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கான காலத்தை நிர்ணயித்து ஆணையாளர் அறிவிப்பார். நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்வதற்குரிய கடைசி நாளில் இருந்து நான்கு வாரங்களில் பின்னரான ஒரு திகதியை நிர்ணயித்து அதனை ஜனாதிபதித் தேர்தலுக்குரிய நாளாக ஆணையாளர் பிரகடனப்படுத்துவார்.

நேற்றுக்காலை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி, நேற்றுப் பிற்பகல் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்து உத்தி யோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்தார். ஜனாதிபதியின் இந்த முடிவை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்துடன் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆணையிலும் அவர்கள் கைச்சாத்திட்டுள்ளனர் என்று கூட்டமைப்பின் செயலர் சுசில் பிரேம ஜெயந்த தெரிவித்தார்.

கூட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார் என்றும், அவருக்கு கூட்டமைப்பைச் சேர்ந்த சகல கட்சிகளும் ஆதரவு வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலா, பொதுத் தேர்தலா முதலில் நடைபெறும் எனக் கடந்த சில மாதங்களாகக் காணப்பட்ட குழப்பம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இவ்வாறிருக்க, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதியின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவே என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளர் லக்ஷ்மன் செனிவிரத்ன இணையத்தளச் செய்திச் சேவையொன்றுக்குக் குறிப்பிட்டுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.