Sunday, July 26, 2009

கிழக்கு மாகாண காணி தனியார்துறைக்கு பகிர்ந்தளிப்பு: மத்திய அரசுக்கும் மாகாண சபைக்கும் இடையில் புதிய சர்ச்சை

[ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2009] கிழக்கு மாகாண சபையைக் கலந்தாலோசிக்காமல் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள காணித் துண்டு ஒன்றை இரண்டு தனியார்துறை நிறுவனங்களுக்குக் கையளிப்பதற்கு சிறிலங்கா மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை கிழக்கு மாகாண சபை இரத்துச் செய்திருப்பது அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அரசுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இடையில் புதிய சர்ச்சை ஒன்றை உருவாகிகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 35 ஆயிரம் ஏக்கர் நிலப் பகுதியை இரண்டு தனியார்துறை நிறுனங்களுக்குக் கொடுப்பதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கையே இந்தச் சர்ச்சைகளுக்குக் காரணமாகவுள்ளது. காணி அதிகாரம் மாகாண சபைக்கு உட்பட்டதாகவே உள்ளது எனக் குறிப்பிட்டிருக்கும் முதலமைச்சர் சந்திரகாந்தன், மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்திருப்பதுடன், மத்திய அரசின் நடவடிக்கையை இரத்துச் செய்திருக்கின்றார். 13 ஆவது திருத்தத்தின்படி அரச காணிகள் மாகாண சபைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமா அல்லது மத்திய அரசுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டுமா என்பது தொடர்பில் இது அரசியலமைப்புச் சர்ச்சை ஒன்றைத் தோற்றுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின்படி காணி அதிகாரம் மாகாண சபைகளுக்கே வழங்கப்பட்டிருக்கின்றது. இருந்தபோதிலும் கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டபோது காணி அதிகாரம் அதற்கு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்தச் சர்ச்சை தொடர்பாகக் கருத்து வெளியிட்ட தேச நிர்மாணத்துறை அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாண சபை எவ்வாறான முடிவை எடுத்திருந்தாலும் தமது செயற்திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதில் தாம் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். அமைச்சரின் இந்த நிலைப்பாடு மத்திய மாகாண அரசுகளிடையே முறுகல் நிலையைத் தீவிரப்படுத்தலாம் எனத் தெரிகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு செயற்திட்டங்களை மேற்கொள்வதற்காகவே இந்தக் காணி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. முதலாவது திட்டத்தின் படி கந்தளாயில் 15 ஆயிரம் ஏக்கர் அரச காணி வாழைச் செய்கைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. மற்றைய 20 ஆயிரம் ஏக்கர் நிலம் குறிப்பிட்ட அதே நிறுவனங்கள் கஜூ செய்கையில் ஈடுபடுவதற்காக வழங்கப்படவிருக்கின்றது. இந்தக் காணியை குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏப்ரல் மாதத்தில் அங்கீகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்காக இறுதி அங்கீகாரம் இந்த மாதத்தில் அமைச்சரவையால் வழங்கப்பட்டது. இது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் கடந்த புதன்கிழமை கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், மாகாண சபையைக் கலந்தாலோசிக்காமல் அரச காணி மத்திய அரசால் பகிர்ந்தளிக்கப்படக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாகக் கொண்டுவரப்பட்ட பிரேரணை மாகாண சபையால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய முதலமைச்சர் சந்திரகாந்தன், "கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் தனியார்துறைக்கு வழங்கப்படுவது மாகாணத்தில் உள்ள அனைத்து இன மக்களையும் புண்படுத்துவதாக அமைந்திருக்கின்றது. அதிகார சக்தி இதில் தலையீடு செய்கின்றது. கிழக்கு மாகாணத்தில் காணிப் பிரச்சினை முக்கியமானது ஒன்றாகும்" எனத் தெரிவித்திருந்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.