Sunday, July 26, 2009

தமிழர் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டதற்காக கனடாவில் கைதான வேற்றினப் பெண் விடுதலை

[ஞாயிற்றுக்கிழமை, 26 யூலை 2009] கனடாவில் மே மாதம் 10ம் திகதி நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் கலந்துகொண்டதற்காக வேற்றினப் பெண் ஒருவரை கனடியப் போலீசார் கைதுசெய்தனர். தற்போது அவரை குற்றமற்றவர் என விடுதலைசெய்துள்ளனர். இலங்கையில் தமிழர்கள் 20,000 பேர் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசை வற்புறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் பங்குபற்றிய தமிழரல்லாத ஏஞ்செலா ரெக்னியரை போலீசார் கைது செய்தனர். பெண்கள் வரிசையில் அமைதியாக நின்ற ரெக்னியரை போலீசார் கைது செய்து ஓரிரவு தடுப்புக்காவலில் வைத்திருந்தனர். இவர் தவிர ரெறென்ஸ் லுஸ்கொம்பே என்பவரையும் போலீசார் கைதுசெய்ததால், இவர்கள் இருவராலும் அந்த பேரணியில் கலந்து கொள்ளமுடியாமல் போய்விட்டது. இனப்படுகொலைக்கு எதிராக தமிழரல்லாத மக்களும் ஆதரவு தர வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு லுஸ்கொம்பே மற்றும் ரெக்னியர் ஆகியோரை முன்னுதாரணமாக காண்பிக்க கனடா போலீசார் செய்த நாடகமா இது என்றும் அப்போதைய காலகட்டத்தில் கேள்வி வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவியின்மீது சுமத்தப்பட்ட குற்றத்தை நிரூபிக்கக்கூடிய சான்றுகளைப் போலீசார் சமர்ப்பிக்க முடியாததால் அவர் விடுதலை செய்யப்படுவார் என ரொரொன்ரோ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இவ்விடயமாக பேசிய ரெக்னியர் தமது சட்ட நடவடிக்கைகளுக்கான செலவுகளை ஈடுசெய்வதற்காக பல்கலைக் கழக ஒன்றியத்தினரால் சேகரித்து வழங்கப்பட்ட 3,000 அமெரிக்க டொலர்களுக்காக தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மனிதாபிமான சிக்கல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க கனடா வாழ் தமிழ் மக்கள் தமக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டுள்ளபோதும் கனடா மக்கள் பேசாமல் இருப்பது தமக்கு கவலையாக இருப்பதாகவும், ஆனால் சில ஆண்டுகளின் பின்னர், இலங்கை விடயத்தில் அமைதியாக இருந்தமைக்காக கனடா மிகவும் கவலை கொள்ளும் என்றும் மேலும் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.