Monday, June 29, 2009

ஆபத்தான நிலை இன்னும் தொடர்கின்றது: சிறிலங்கா செல்லும் அமெரிக்க குடிமக்களுக்கு இராஜாங்க திணைக்களம் மீண்டும் எச்சரிக்கை

[ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2009]

தமிழீழ விடுதலைப் புலிகளை அமைப்பை இராணுவ ரீதியாக முறியடித்துவிட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருக்கின்ற போதிலும் அந்நாட்டில் தொடர்ந்தும் ஆபத்தான நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்திருக்கும் அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம், அங்கு பயணம் செய்யும் தமது குடிமக்களை அவதானமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது.

 இது தொடர்பாக விரிவான அறிவித்தல் ஒன்றை அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டிருக்கின்றது. அதில் மேலும் முக்கியமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "சிறிலங்காவுக்குப் பயணம் செய்யும் அமெரிக்க குடிமக்கள் மற்றும் சிறிலங்காவில் வசிக்கும் அமெரிக்க குடிமக்களுக்கு அங்கு பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளமை உட்பட உறுதியற்ற நிலை அங்கு தொடர்வதையிட்டு எச்சரிக்கை விடுக்கின்றது.

25 வருடப் போரின் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பை வெற்றி கொண்டிருப்பதாக 2009 மே 19 ஆம் நாள் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. இருந்த போதிலும் அந்தக் கிளர்ச்சிக் குழு தொடர்ந்தும் இருக்கின்றது. சிறிலங்கா அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளன. இதனால் சிறிலங்காவுக்கு பயணம் செய்வதில் உள்ள ஆபத்தை கவனமாகப் பரிசீலனை செய்யுமாறு அங்கு செல்லவிரும்பும் அமெரிக்கக் குடிமக்களை இராஜாங்கத் திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிக்குச் செல்வதையிட்டு அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கப்படுகின்றது. இங்கு கண்ணிவெடிகள் இன்னும் அகற்றப்படாதிருப்பதுடன், கிளர்ச்சி நடவடிக்கைகள் மீண்டும் கிளர்ந்து எழக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பது தொடர்பாகவும் எச்சரிக்கப்படுகின்றது. ஆயுதம் தாங்கிய துணை இராணுவக் குழுக்கள் கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன.

 தடுத்துவைக்கப்படும் அமெரிக்கக் குடிமக்களுக்கான தூதரக உதவிகள் தாமதமாகலாம். வடபகுதிக்கு பயணம் செய்வது பாதுகாப்பற்றதாகவே உள்ளது. குறிப்பாக பின்வரும் பகுதிகளுக்கு பயணம் செய்வது பாதுகாப்பற்றதாகும். அநுராதபுர மாவட்டம், மதவாச்சிக்கு வடக்கே உள்ள பகுதிகள், ஏ- 14 வீதி, மதவாச்சியில் இருந்து ஹொரவப்பொத்தானைக்கான வீதி போன்றனவும், கிழக்கு மாகாணத்தில் ஏ-6 வீதி தவிர்ந்த ஏனைய பகுதிகளும் திருகோணமலை நகரப் பகுதி, அம்பாறை மாவட்டத்தில் ஏ-4 வீதிக்கு தென்பகுதியும் மகா ஓயாவின் மேற்குப் பகுதியும் தடை செய்யப்பட்டவையாகும்.

இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்கள் பெருமளவுக்கு அமைந்திருக்கும் பகுதிகளுக்குப் பயணம் செய்வதை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் தடை செய்திருக்கின்றது. விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக வெற்றி கொண்டுவிட்டதாக மே மாதத்தில் சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த பின்னர் பயங்கரவாதச் சம்பவங்கள் எதுவும் அங்கு இடம்பெறாத போதிலும், அந்த அமைப்பு மீண்டும் தாக்குதலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்ந்தும் உள்ளது. பொதுமக்கள் பெருமளவு கூடும் இடங்கள், அரசியல் பேரணிகள், படை முகாம்கள், அரசாங்க மற்றும் படையினரின் வாகனத் தொடர் அணிகள் பயணிக்கும் பகுதிகள், அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் போன்றவற்றைத் தவிர்க்குமாறு அமெரிக்கக் குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 இவைதான் விடுதலைப் புலிகள் அமைப்பின் தாக்குதல் இலக்குகளாக தொடர்ந்தும் இருந்துள்ளன. அமெரிக்கா குடிமக்கள் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் பயணம் செய்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிபவர்கள் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் செல்வதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

 கடந்த காலத்தில் இவை தாக்குதல் இலக்குகளாகியுள்ளன. சிறிலங்காவுக்கு பயணம் செய்யும் மற்றும் அங்கு குடியிருக்கும் அமெரிக்க குடிமக்கள் அனைவரும் இணையத்தளத்தின் மூலமாகவோ அல்லது கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நேரடியாகவோ தம்மைப் பதிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்" இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.