[வெள்ளிக்கிழமை, 15 மே 2009,] வன்னி 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீது இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4:30 நிமிடமளவில் தரை, வான் மற்றும் கடல் வழியான கடுமையான தாக்குதலினை சிறிலங்கா தொடங்கியுள்ளன. தரையில் நான்கு முனைகள் ஊடாகவும், கடல் வழியாகவும் உள்ளே நுழையும் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மிக நெருக்கமான சண்டைகள் பலமுனைகளில் நடைபெறுகின்ற அதேவேளையில் கண்மூடித்தனமான குண்டுவீச்சில் சிறிலங்கா வான் படையினரும் ஈடுபட்டுள்ளனர். மிக நெருக்கமான சண்டைகள் நடைபெறுகின்ற சூழலில் - அந்தச் சண்டைகளில் சிறிய ரக தாக்குதல் துப்பாக்கிகள் தவிர பெரும் கனரக ஆயுதங்களைப் பாவிக்கக முடியாத நிலை இருந்தும் - நெடுந்தூர மற்றும் குறுந்தூர கனரக பீரங்கள், பல்குழல் வெடிகணை ஏவிகள் கொண்டு தரைப்படையினரும், மிகை ஒலி வேக போர் வானூர்திகள் மற்றும் தாக்குதல் உலங்குவானூர்திகள் கொண்டு வான் படையினரும், அதிவேக தாக்குதல் படகுகளின் கனரக பீரங்கிகள் கொண்டு கடற்படையினரும் - சாதாரண தமிழ் பொதுமக்களை இலக்கு வைத்து ஈவு இரக்கமற்ற கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 'இறுதி தாக்குதல்' இதேவேளையில் கொழும்பு படைத் தலைமையக உயர் வட்டாரங்களில் இருந்து மிக நம்பகமான ஒரு வழியில் தற்போது கசிந்த தகவலின் படி - தற்போதைய இந்த தாக்குதல் ஒர் 'இறுதித் தாக்குதல்' என்ற வகையில், அரச மற்றும் படை உயர் பீடங்களினால் சில நாட்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டதாகவும் - அத்தகைய ஒர் 'இறுதித் தாக்குதல்' மேற்கொள்ளப்படும்போது 30 ஆயிரம் பேரில் இருந்து 50 ஆயிரம் பேர் வரை தமிழர்கள் கொல்லப்படுவார்கள் என கணிக்கப்பட்டதாகவும் - அந்த அளவுக்குப் பெரும் தொகையில் மக்கள் கொல்லப்படும் நிலை இருந்தாலும், இந்த திட்டத்தை முன்னெடுத்து இந்த 'இறுதித் தாக்குதலை' மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டதாவும் தெரிய வருகின்றது. இந்தப் பின்னணியிலேயே - சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் - அடுத்து வரும் 48 மணிநேரத்தில் 'மக்கள் பாதுகாப்பு வலய'த்திற்குள் படையினர் நுழைவர் என்று கடந்த சில நாட்களுக்குள் அறிவித்திருந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போது 'பாதுகாப்பு வலய' பகுதிக்குள் நுழையும் தாக்குதலை அடுத்து வரும் 48 மணிநேரத்தில் படையினர் மேற்கொள்வர் என்று தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து - ஜோர்தானில், நேற்று நடைபெற்ற ஒரு ஊடகவியலாளர் சந்திப்பின் போது அடுத்த "48 மணி நேரத்தில் இந்த போர் முடிவுக்கு வந்துவிடும்" என சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். இத்தகைய பின்னணியிலேயே - 'மக்கள் பாதுகாப்பு வலயம்' மீதான மூர்க்கத்தனமான இன்றைய தாக்குதலை தமது மூன்று சிறப்புப் படையணிகளான - 53, 58, 59 ஆகிய படையணிகள் இணைந்து தொடங்கியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு வட்டாரங்கள் கொழும்பில் தெரிவித்துள்ளன. வரலாற்றின் உச்ச மனிதப் பேரவலம் வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் அனுப்பிய ஆகப்பிந்திய தகவலின் படி - கரையமுள்ளிவாய்க்கால், வெள்ளை முள்ளிவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் மிகக் கடுமையான நேரடிச் சண்டை நடைபெறுகின்றது. இவற்றுக்கு அப்பால் - ஏனைய பகுதிகளில் இருக்கும் மக்கள் மீது கனரக ஆயுதங்கள் கொண்டு வெறித்தனமான தாக்குதலை சிங்களப் படைகள் நடத்துகின்றன. இந்த தாக்குதல்களில் - கனரக ஆயுதங்களை மட்டுமன்றி - வீழ்ந்து வெடிக்கும் இடங்களைப் பற்றி எரிய வைக்கும் ஒருவிதமான இரசாயனக் குண்டுகளையும் சிறிலங்கா படையினர் பொதுமக்களை நோக்கி பெருமளவில் வீசுகின்றனர். 'மக்கள் பாதுகாப்பு வலயம்' எங்கும் நெருப்புப் பற்றி எரிவதுடன் - வான் பரப்பு புகை மண்டலமாகி இருக்கின்றது. இந்த கரும்புகை மண்டலத்திற்கு மேலே பறக்கும் சிங்களப் போர் வானூர்திகள் - கீழே எதனையும் தெளிவாகப் பார்க்க முடியாத நிலையில் - கண்மூடித்தனமாக குண்டுகளை வீசுகின்றன. தாக்குதலுக்கு அஞ்சி சிதறி ஓடிய மக்கள் மீது தொடர்ந்து குண்டுகள் வீழ்ந்து வெடிப்பதால் - தெருத் தெருவாக தமிழர்கள் கொல்லப்படுவதுடன், அவர்களது நூற்றுக்கணக்கான அவர்களது உடலங்கள் அந்த அந்த இடங்களிலேயே குவியல் குவியலாகக் கிடக்கின்றன. பல இடங்களில் - பதுங்குகுழிகள் மீது குண்டுகள் வீழ்ந்து வெடிப்பதால், பலர் அவற்றிற்குள் மூடுண்டும் கொல்லப்படுகின்றனர். பீரங்கி குண்டுச் சிதறல்களினாலும் இரசாயனத் திரவங்களாலும் - படுகாயமடைந்தும் உடல் அவயவங்களை இழந்தும் கொதிக்கும் எரிகாயங்களுடனும் ஆயிரக்கணக்கானவர்கள் தெருத் தெருவாகவும் பதுங்கு குழிகளுக்கு உள்ளேயும் வெளியேயும் அப்படி அப்படியே கிடந்து கதறுகின்றனர். இவர்களை தூக்கி எடுக்கவோ, சிகிச்சைகள் அழிக்கவோ எவரும் இல்லை. யாருக்கும் யாரும் உதவ முடியாமல் எல்லோர் மீதும் குண்டுகள் வீழும் பெரும் மனித அவலம் நிகழ்கின்றது. சில இடங்களில் படுகாயமடைந்து வீழ்ந்து கிடந்த மக்களுக்கு மேலாகவும் பதுங்கு குழிகளுக்குள் பாதுகாப்பு தேடி பதுங்கியிருந்த மக்களுக்கு மேலாகவும் சிங்களப் படையினர் தமது கவசப் போர் ஊர்திகளின் இரும்புச் சங்கிலிகளை ஏற்றிச் சென்றதை தாம் நேரில் கண்டதாக தப்பி வந்த மக்கள் சிலர் கதறலோடு கூறுகின்றனர். இதேவேளையில் எற்கெனவே அண்மைக்காலமாக குடிதண்ணீர், உணவு எதுவுமே கிடைக்காத நிலையில் பசிக்கொடுமையால் வாடிய மக்கள் பலர் இப்போது பட்டினியாலும் செத்துக்கொண்டிருக்கின்றனர். ஐ. நா.வும் நம்பியாரும் இதேவேளையில் ஐ.நா.வின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியாரையே கொழும்புக்கு அனுப்பிவைப்பதற்கு ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் - இவை எல்லாமே ஐ. நா. போன்ற ஒரு பெரும் அனைத்துலக தலைமை நிறுவனத்திற்குள் இருக்கும் செயற்திறனற்ற தன்மையை மூடி மறைக்கும் ஒரு கண்துடைப்பு முயற்சி என சில அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஐ.நா.வின் தூதுவராக நியமனம் பெற்ற நம்பியார் - ஐ.நா.வுக்கு உண்மையானவராக இல்லாமல், தனது சொந்த நாடான இந்திய அரசாங்கத்தின் ஒரு முகவர் போலவே செயற்படுகின்றார் என்ற கருத்து நோக்கர்கள் மத்தியில் நிலவுகின்றது. அத்தகைய ஒருவரை மீண்டும் சிறிலங்காவுக்கு அனுப்பும் பின்னணியிலேயே - இன்றைய 'இறுதித் தாக்குதல்' படையெடுப்பையும் பார்க்க வேண்டியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். புலிகளும் ஆயுதங்களும் இதேவேளையில் இந்த போரை முடிவுக்கு கொண்ட வருவதற்காக விடுதலைப் புலிகளை ஆயுதங்களைக் கீழே போட்டுவிடுமாறு அண்மையில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அவர்கள் கூறியிருந்தார். இது பற்றி கருத்து வெளியிட்ட அரசியல் நோக்கர்கள் சிலர் அவ்வாறு புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்ட பின்னர் தமிழர்களின் அடுத்த நிலை என்ன என்பதை அவர் விளக்கத் தவறிவிட்டார் என கருத்து வெளியிட்டனர். புலிகளிடம் இருக்கும் ஆயுதங்கள் தான் - தமிழர்களுக்கு அவர்களது அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கான ஒரே ஆதார சக்தியாக இப்போது இருக்கின்றன. அந்த ஆயுதங்களையும் புலிகள் கீழே போட்டுவிட்ட பின்னர் தமது அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கு தமிழர்களுக்கு இருக்கும் உத்தரவாதம் என்ன?... என கேள்வி எழுப்பிய அந்த நோக்கர்கள் - புலிகளின் ஆயுதங்கள் தொடர்பான விடங்கள் தமிழர் போராட்டத்தின் இறுதித் தீர்வு பற்றிய பேச்சுக்களின் போதே எடுக்கப்பட வேண்டும். அதற்கு முன்னால் அவை பற்றிப் பேசுவது, இத்தனை ஆண்டு காலப் போராட்டத்தையே அர்த்தமற்றதாக்கிவிடும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். ஆயுதங்களைக் கீழே போடுமாறு புலிகளிடம் கேட்பதற்குப் பதிலாக - உடனடிப் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான தனது உச்ச நடவடிக்கையையே அவர் இப்போது செய்ய வேண்டும் எனவும் அந்த நோக்கர்கள் மேலும் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.