Thursday, May 07, 2009

புலம்பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களை குழப்ப சதி: விழிப்புடன் இருக்குமாறு கோரிக்கை

[வியாழக்கிழமை, 07 மே 2009] தாயகத்தில் இடம்பெறும் சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலைக்கு எதிராகப் புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களைக் குழப்பும் வகையில் சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் ஆதரவுடன் சில சக்திகள் செயற்படுவதாகவும் இதனையிட்டு விழிப்பாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா, இந்திய அரசுகளின் புலனாய்வு அமைப்புக்கள் அல்லது இராணுவத் துணைப்படைகளுடன் இணைந்து வெளிநாடுகளில் செயற்படும் சில தமிழர்கள், தமிழ் மக்களின் அரசியல் விருப்பங்களுக்கு எதிராக சில சதி நாசகாரத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு முயற்சி செய்துவருவதாக தகவல் கிடைத்திருப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்களின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. சிறிலங்காவின் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு எதிராக புலம்பெயர்ந்த நாடுகளில் கவனயீர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்திருக்கின்றது. இதனால் தாம் நினைத்தது போல தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் பயன்படுத்தி இந்த இனப்படுகொலையை முன்னெடுப்பதில் சிறிலங்கா படையினர் சங்கடத்தை எதிர்கொள்கின்றனர். சிறிலங்காவுக்கு உதவும் இந்திய அரசாங்கமும் புலம்பெயர்ந்த மக்களுடைய இந்தப் போராட்டங்களையிட்டு கடுமையாக அதிருப்தியடைந்திருக்கின்றது. புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களின்போது சிறிலங்காவின் இனப்படுகொலைகளின் பின்னணியில் இந்திய அரசும் செயற்படுவது அம்பலப்படுத்தப்படுவது இந்தியாவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தப் பின்னணியில்தான் சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் புலனாய்வுப் பிரிவுகள் தமக்கு விசுவாசமான சிலரைப் பயன்படுத்தி இந்தப் போராட்டங்களைக் குழப்புவதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றன. தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொது அமைப்புக்கள் என்ற பெயரில் சில அமைப்புக்களை புதிதாக அமைத்து, அந்தந்த நாடுகளில் உள்ள அரச பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தி, புலம்பெயர்ந்த மக்களின் போராட்டங்களைப் பலவீனப்படுத்துவது இவர்களின் சதித் திட்டத்தின் முதலாவது அம்சமாக இருக்கின்றது. தாயகத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்படுவதுடன், பட்டினி போட்டும் கொல்லப்படும் நிலையில் இவை அனைத்துக்கும் காரணமாகவுள்ள சிறிலங்கா மற்றும் இந்திய அரசுகளின் சதித்திட்டங்களுக்கு துணைபோகும் தமிழர்களையிட்டு புலம்பெயர்ந்த மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.