Tuesday, May 26, 2009

"அரசியல் நீரோட்டத்தில் இணையும் புலிகளின் விருப்பத்தை ஏற்கமுடியாது": கோத்தபாய ராஜபக்ச

[செவ்வாய்க்கிழமை, 26 மே 2009] வடபகுதியில் இடம்பெற்ற போரில் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளதாகக் கருதப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்வதற்கு தெரிவித்திருக்கும் விருப்பத்தை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச திட்டவட்டமாக நிராகரித்திருக்கின்றார். விடுதலைப் புலிகள் தமது 'பயங்கரவாத நடவடிக்கைகளை'க் கைவிட்டுவிட்டார்கள் என்பதை நம்ப முடியாது எனவும் பி.பி.சி.க்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கும் கோத்தபாய, "பல வருடகாலமாக வன்முறைகளில் ஈடுபட்ட பின்னர் விடுதலைப் புலிகளால் ஒரு ஜனநாயக வழிமுறையில் இணைந்துகொள்ள முடியும் என நான் நம்பவில்லை" எனவும் தெரிவித்திருக்கின்றார். "வடபகுதியில் இடம்பெற்ற போரில் பாரிய இழப்புக்களைச் சந்தித்திருக்கும் நிலையில், வன்முறைகளைக் கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் இணைந்துகொள்ள விரும்புவதாக" விடுதலைப் புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாகக் கேட்டபோதே அதனை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திட்டவட்டமாக நிராகரித்தார். "விடுதலைப் புலிகள் தொடர்பாக நான் எந்தவகையிலும் அக்கறை காட்டவில்லை" எனவும் தெரிவித்த கோத்தபாய, "இந்த நாட்டில் ஜனநாயகப் பாதையில் செல்லும் பெருமளவு தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கின்றன" எனவும் சுட்டிக்காட்டினார். "சிலர் நினைக்கின்றார்கள் இராணுவத்தின் பணி முடிவடைந்துவிட்டது என்று. ஆனால் அவ்வாறு இல்லை. அந்தப் பகுதி முழுவதிலும் இருந்தும் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டும். அத்துடன், காட்டுப் பகுதிக்குள் விடுதலைப் புலிகள் யாராவது மறைந்திருக்கின்றார்களா என்பதையும் தேடிப்பார்க்க வேண்டியிருக்கின்றது" எனவும் கோத்தபாய ராஜபக்ச இந்தப் பேட்டியில் தெரிவித்தார். "விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுச் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்" என மேற்கு நாடுகளைக் கேட்டுக்கொண்ட அவர், "அங்குள்ள புலிகளின் தலைவர்கள்தான் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கொள்வனவு செய்து அனுப்பிவைப்பதற்கு பொறுப்பாக இருந்துள்ளார்கள் என்பதால் அவர்களைக் கைது செய்து ஒப்படைக்க வேண்டும்" எனவும் கோரிக்கை விடுத்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.