Saturday, May 30, 2009

இலங்கையில் பொதுமக்களின் இழப்புக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது: ஐ.நா.

[சனிக்கிழமை, 30 மே 2009] இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருக்கின்றது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகத்தின் பேச்சாளர் எலிசபத் பையர்ஸ் தெரிவித்துள்ளதாவது: அண்மைய மாதங்களாக இலங்கையில் இடம்பெற்ற போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உயர்வாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் மீண்டும் வெளிப்படையாக தெரிவித்து வந்துள்ளது. எமது தரவுகளை அரசாங்கத்திற்கும், ஏனைய தரப்பினருக்கும் வழங்கியுள்ளோம். எமக்கு கிடைத்த தகவல்கள் மூலம் கணிப்பிடப்பட்ட எண்ணிக்கைகளே எம்மிடம் உள்ளன. நாம் பொதுமக்களின் இழப்புக்களையும், மக்களின் துன்பங்களையும் வெளியில் தெரிவிப்பதற்கு வெட்கப்படவில்லை. நீண்ட காலமாகவே நாம் எச்சரிக்கைகளை விடுத்து வந்துள்ளோம் என்றார் அவர். இறுதியாக நடைபெற்ற பாரிய மோதல்களில் 20 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தகவல் வெயிட்டிருந்ததை தொடர்ந்தே ஐக்கிய நாடுகள் சபையின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. இலங்கையில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்ட தகவல்கள் தமக்கு பாரிய அழுத்தங்களை ஏற்படுத்தி வருவதாக ஜெனீவாவை தளமாக கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புக்களும் தெரிவித்துள்ளன. இதனிடையே சிறிலங்காவுடனான தனது உறவுகளை முறித்துக்கொள்ள விரும்பாததாலேயே போரில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட தயங்குவதாக பிரான்ஸ் நாட்டில் இருந்து வெளிவரும் 'லு மொந்த்' என்ற பத்திரிகை தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.