Thursday, May 28, 2009

விரக்தியுடன் உறவுகளை தேடும் அகதிகள்

[வியாழக்கிழமை, 28 மே 2009] இலங்கையின் வடபகுதியில் உள்ள புதிய முகாமொன்றில் கூடாரத்திற்கு வெளியே 3 பிள்ளைகள் நின்றுகொண்டிருந்தார்கள். பல வாரங்களாக இந்தப் பிள்ளைகள் தமது தாயைப் பார்த்திருக்கவில்லை. அவர்கள் தங்கியிருந்த பதுங்குகுழிக்குப் பக்கத்தில் செல் வீழ்ந்து வெடித்த பின்பு அவர்கள் தமது தாயைப் பார்க்கவில்லை. கள வைத்தியசாலைக்கு சாந்தி என்ற பெண்ணை (29 வயது) மருத்துவர்கள் கொண்டுசென்று சத்திரசிகிச்சை செய்துள்ளனர். சாந்தியின் கணவனான யோகேஸ்வரன் (33 வயது) பிள்ளைகள் துயந்தினி, குகந்தினி, துஷ்யந்தினி ஆகியோருக்கு தமது தாய் செஞ்சிலுவைச் சங்கத்தின் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டது தெரியும். அதன் பின்னர் தாயை அவர்கள் பார்க்கவில்லை. பல்லாயிரக்கணக்கானவர்களுடன் இப்போது மெனிக்பாம் முகாமில் அவர்கள் தங்கியுள்ளனர். அவர்களால் தமது தாய் தொடர்பாக ஏதேனும் செய்வதற்கு எந்த சக்தியும் இல்லை. மற்றொரு முகாமில் திருக்கந்தன் (27 வயது) என்ற அகதி இருந்தார். அவரும் அவருடைய அன்புக்குரியவர்களையும் காணாமல் அவர் ஏங்கிக்கொண்டிருந்தார். தனது மனைவியினதும் தனதும் திருமணத்திற்கு எடுத்த புகைப்படத்தை அவர் காட்டினார். கடந்த மாதம் அவர்கள் தனித்தனியே பிரிந்துவிட்டனர். இராணுவம் முன்னேறி வந்தபோது அவர்கள் வெவ்வேறு இடங்களுக்குப் பிரிந்து சென்றுவிட்டதாக கூறினார். இப்போது எனது மனைவி, மகளை பார்க்கமுடியாமல் உள்ளது. மகளுக்கு 4 வயது மனைவி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்களைக் கண்டுபிடிக்க எனக்கு உதவி தேவை என்று அவர் கூறியதாக லண்டன் கார்டியன் பத்திரிகையின் நிருபர் கீதின் சேம்பர் லைன் மெனிக்பாம் முகாமிலிருந்து இந்தச் செய்தியை எழுதியிருக்கிறார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; எண்ணிக்கையற்ற பொதுமக்கள் இலங்கையின் முகாம்களில் இதேமாதிரியான நிலையில் உள்ளனர். அவர்களால் தமது உறவினர்களிடம் தொடர்புகொள்ள முடியாமல் இருக்கின்றது. அத்துடன், பலர் குடும்பங்களைவிட்டுப் பிரிந்துவிட்டனர். மெனிக்பாமில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் உள்ளனர். 1400 ஏக்கர் கொண்ட இந்த முகாம் முட்கம்பி வேலியால் அடைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களுக்குள் சிலர் தமது உறவினர்களை கண்டுபிடிக்க முடியும் என்று அவர்கள் இப்போதும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால், ஏனையோர் தமது உறவினர்கள் புலி உறுப்பினர்கள் என வேறுபடுத்தப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். 9 ஆயிரம் புலி உறுப்பினர்களை அடையாளம் கண்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறுகிறது. அவர்களை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அவர்கள் புலிகளின் உறுப்பினர்கள் அல்ல என்று உறுதிப்படுத்திக்கொள்ளும் வரை அவர்களை முகாம்களுக்குள் வைத்திருப்பது தேவையானது என்று அரசாங்கம் கூறியுள்ளது. பாரிய நிலப்பகுதியில் இந்த முகாம்கள் அமைந்துள்ளன. எங்கும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்களுக்குள் 2 வருடத்திற்கும் மேலாக இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று அவர்கள் கூறுகின்றனர். மே 18 இல் மெனிக்பாம் முகாமுக்கு வந்த நவரெட்ணம் ராசபாலன் (31 வயது) கூறுகையில்; தனது மனைவி ஜகதா, 3 பிள்ளைகள் ஆகியோருடன் எந்தத் தொடர்பும் தற்போது இல்லை என்று கூறுகிறார். பிள்ளைகளுக்கு 7, 5, 3 வயதாகும். ஏப்ரல் 18 இற்குப் பின்னர் அவர்களை சந்திக்கவில்லை. நான் அவர்களை கண்டுபிடிக்க விரும்புகிறேன். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தயவுசெய்து உதவுங்கள் என்று அவர் கூறினார். இவரைப் போன்று பலர் அந்த முகாம்களில் இருந்தனர். உள்நாட்டு யுத்தத்தின் கொடூரத்தன்மைக்கான ஆதாரங்கள் எங்குமே காணப்பட்டன. பான்சி என்று தனது பெயரைக் குறிப்பிட்ட இளம் பெண் ஒருவர் தனது 18 மாதக் குழந்தையான உமாராணியை தூக்கி வைத்திருந்தார். அந்தக் குழந்தையின் தலையைச் சுற்றி கட்டு போடப்பட்டிருந்தது. வலது கையிலும் கட்டுப் போடப்பட்டிருந்தது. செல் சிதறல்கள் அக்குழந்தைக்கு பட்டதாக தாய் தெரிவித்தார். அந்தக் குழந்தையின் தலையை மாத்திரமன்றி, அந்தப் பெண்ணின் விரல்களையும் செல் சிதறல்கள் துண்டாடிவிட்டன. இந்த முகாம்களில் பொதுமக்களை வைத்திருப்பது தொடர்பாக பரந்தளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. நேற்று முன்தினம் அதிகாரிகள் முரண்பாடான விளக்கங்களை தெரிவித்தனர். பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே அவர்களை அங்கு வைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாட்டின் மக்களின் பாதுகாப்பு குறித்து அவர்களை இங்கே வைத்திருப்பதாகவும், அநேகமானோர் விடுதலைப்புலிகளுடன் சில விதத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர். முகாம்களுக்குள் அவர்களை சோதனையிடும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக சில அதிகாரிகள் தெரிவித்தனர். விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருந்தோரின் பட்டியல் தம்மிடம் இருப்பதாக ஏற்றுக்கொண்டிருந்த போதிலும், அவர்களை அடையாளம் காண்பதற்காக இன்னும் அதிக காலம் தேவைப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். நாங்கள் யாவருமே புலிகள் என அரசாங்கம் நினைப்பதே பிரச்சினையாகும். எங்களால் எதையுமே செய்ய முடியாது என்று கிளிநொச்சியை சேர்ந்த மருத்துவ அதிகாரியான சிவலிங்கம் (63 வயது) என்பவர் தெரிவித்தார். அவர் அண்மையில் இந்த முகாமுக்கு வந்தவர். யுத்தத்தின் இறுதி நாட்கள் தொடர்பாக சிலர் கதைக்க விரும்பினர். மோதலில் சிக்குண்ட பொதுமக்களின் நிலை குறித்து சிவலிங்கம் விபரித்தார். எம்மை சூழ சண்டை இடம்பெற்றுக்கொண்டிருந்தது. தமக்கு கையில் கிடைத்த உடுப்புகளுடன் ஆட்கள் ஓடினார்கள். ஷெல்கள் வந்து வீழ்ந்தன. சூடு இடம்பெற்றது. என்ன செய்வதென்று மக்களுக்கு தெரியவில்லை. அதிகளவானோர் ஷெல், வான் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். ஜெட் விமானங்கள் குண்டுபோட்டன. மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர் என்று அவர் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.