Saturday, May 23, 2009

இறுதிப்போர் நடந்த பாதுகாப்பு வலயப் பகுதியில் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயமே இல்லை: பேரழிவை நேரில் பார்த்த விஜய் நம்பியார் அதிர்ச்சி

[சனிக்கிழமை, 23 மே 2009,] இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இறுதியாக உக்கிர மோதல் இடம்பெற்ற பாதுகாப்பு வலயப் பகுதிகளில் பேரழிவு ஏற்பட்டுள்ளதை தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார், அப்பகுதிகளில் மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்களையே காண முடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான தனது விஜயத்தின் இறுதியில் கொழும்பில் நேற்று செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு மேலாக விமானத்தில் சென்றவேளை மோசமாகச் சேதமடைந்த கூடாரங்களையும், கருகிய வாகனங்களையும், மரங்களையும் தாம் கண்டார் எனத் தெரிவித்துள்ள அவர், இது குறித்து மேலும் தெரிவித்ததாவது: தமிழ் மக்களின் துயரங்களுக்குத் தீர்வு காண்பதற்காக அவர்கள் அரசின் தலைவர்களுடன் பேச்சுகளை மேற்கொள்ள வேண்டும். தேசிய நல்லிணக்கம் அனைத்தையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டுமென்று நாங்கள் கருதுகிறோம். இதன்மூலம் மாத்திரமே தமிழ்மக்களினதும், ஏனைய சிறுபான்மையினரினதும் நியாயபூர்வமான அபிலாஷைகளுக்குத் தீர்வு காணலாம். வெற்றி என்பது எல்லோருக்கும் பொதுவானது வெற்றியென்பது அனைத்து இலங்கையர்களுக்கும் பொதுவானதாக அமையவேண்டும். மோதலால் பாதிக்கப்பட்டுள்ள தங்களது குடும்பத்தவர்கள் பலரை இழந்த தமிழ்ச் சமூகத்தின் துயரங்களை ஏற்றுக்கொள்ளவேண்டும். இராணுவ வெற்றியென்பது இந்த நாட்டின் வரலாற்றில் தீர்க்கமான விடயமென்பதில் சந்தேகமில்லை. இந்த முக்கியமான தருணத்தில் எடுக்கப்படும் முடிவுகளே நாடு எப்படி முன்னோக்கி நகரலாம் என்பதை தீர்மானிக்கும். மோதல் நடைபெற்ற பகுதிகளுக்கு மேலாக கடந்த வியாழக்கிழமை ஹெலிக்கொப்டரில் சென்றவேளை அங்கு பேரழிவு ஏற்பட்டுள்ளதை கண்டோம். தரையில் முற்றிலும் எரிந்த நிலையில் வாகனங்கள் காணப்பட்டன. மரங்கள் கருகியிருந்தன. கூடாரங்கள் மோசமாகச் சேதமடைந்திருந்தன. எங்களால் எந்த மக்களையும் காணமுடியவில்லை. மனிதர்கள் வாழ்ந்தமைக்கான தடயங்கள் எவற்றையும் முற்றாக காணமுடியாதமை எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.