Thursday, May 21, 2009

வன்னியில் பணியாற்றிய ஐ.சி.ஆர்.சியின் 19 உள்ளூர் பணியாளர்களைக் காணவில்லை: போல் கஸ்டெலா

[வியாழக்கிழமை, 21 மே 2009] வன்னியில் பணியாற்றிய செஞ்சிலுவை சர்வதேசக் குழுவின் (ஐ.சி.ஆர்.சி யின்) உள்ளூர் பணியாளர்கள் 19பேர் அவர்களது 3 குடும்பத்தவர்களுடன் காணாமற் போயுள்ளனர் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. செஞ்சிலுவைக் குழுவின் இலங்கைக்கான தலைவர் போல் கஸ்டெலா இதனைத் தெரிவித்துள்ளார். இவர்கள் பாதுகாப்பு வலயத்தில் காயப்பட்ட மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர் எனத் தெரிவித்துள்ள போல் கஸ்டெலா, அந்த மக்களுக்கு ஏற்பட்ட கதி இவர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாமல் நாங்கள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார். மோதல் நடைபெற்ற பகுதிகளில் எவராவது சிக்குண்டுள்ளனரா எனப் பார்ப்பதற்கு அங்கு செல்வதற்கான அனுமதியையும் அவர் கோரியுள்ளார். கடந்த வாரத்திலிருந்து நலன்புரி முகாம்களுக்குச் செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது எனவும் மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. முகாம்களுக்குச் செல்லும் பணி முடக்கம் அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் கவலை அதேவேளை, அரசு விதித்துள்ள தடை காரணமாக வவுனியாவின் சில அகதி முகாம்களுக்குச் சென்றுவர, கடந்த வாரத்திலிருந்து இலங்கை அரசு விதித்த தடை காரணமாக பெருமளவு மக்களுக்கு உதவியளிக்கும் பணிகள் பாதிப்படைகின்றன என அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் யூ.என்.எச்.சி. ஆர். விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விடயங்கள் வருமாறு: இடம்பெயரும் மக்களுக்கு உதவியளிக்க அரசு கடும் சவால்களை எதிர்கொள்கிறது. அத்துடன், அகதிமுகாம்களில் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய விடயங்கள் பல உள்ளன. பெருமளவு மக்கள் இடம்பெயர்ந்துள்ள தால் அகதிமுகாம்கள் நிரம்பி வழிகின்றன. அதேவேளை, அந்த அகதிமுகாம்களிலுள்ள மக்களுக்குத் தேவையான சேவைகளைக் குறிப்பிட்டளவே மேற்கொள்ளப்படுகிறது. மோதல் இடம்பெற்ற பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து வரும் மக்கள் நோய்வாய்ப்பட்டவர்களாகவும், பட்டினியால் வாடியவர்களாகவும் காணப்படுகின்றனர். அந்த மக்கள் பதியப்படும் மற்றும் சோதனையிடப்படும் இடங்களில் வசதிகள் போதுமானதாக இல்லை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.