Wednesday, April 29, 2009

இலங்கை தமிழர்களை காப்பாற்ற அமெரிக்காவின் உடனடி தலையீடுதான் ஒரே நம்பிக்கை: ஒபாமாவுக்கு வைகோ மீண்டும் வேண்டுகோள்

[புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009] இலங்கை தமிழர்களை காப்பாற்ற அமெரிக்காவின் உடனடி தலையீடுதான் ஒரே நம்பிக்கை என்று அமெரிக்க அரச தலைவர் பாரக் ஒபாமாவுக்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ மீண்டும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இது தொடர்பாக இன்று புதன்கிழமை அமெரிக்க அரச தலைவர் பாரக் ஒபாமாவுக்கு வைகோ அனுப்பியுள்ள மின்னஞ்சல் வருமாறு: அமெரிக்க குடியரசு தலைவர் மாண்புமிகு பாரக் ஒபாமா அவர்களுக்கு வணக்கம். இலங்கையில் நடைபெற்று வருகின்ற தமிழ் இனப்படுகொலைத் தாக்குதல்களை, கண்ணீருடனும் வேதனையுடனும் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். இருண்டு கிடக்கின்ற இலங்கைத் தமிழர்கள் வாழ்வில், அமெரிக்காவின் உடனடித் தலையீடுதான் ஒரே நம்பிக்கை ஒளிக்கீற்றாகத் தெரிகிறது. 1977 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் நடந்த முக்கிய நிகழ்வு ஒன்றைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். அமெரிக்காவின் மசாசூசெட் மாநிலச் சட்டமன்றத்தில் மேரி எலிசபெத் ஹோவே அம்மையார் அவர்கள், ஈழத் தமிழர்கள் பிரச்சனை குறித்து மிக முக்கியமான தீர்மானத்தைக் கொண்டுவந்தார்கள். அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மசாசூசெட் மாநில ஆளுநர் எட்வர்டு ஜெ கிங், 1977 மே மாதம் 22 ஆம் நாளை, 'தமிழ் ஈழம் நாள்' என்று அறிவித்தார். இலங்கையில் இருதரப்பினரும் போரை நிறுத்தவேண்டும் என்று தாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, விடுதலைப் புலிகள் உடனடியாக போர்நிறுத்தம் அறிவித்து விட்டனர். ஆனால், திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்துகின்ற இலங்கை அரசு தாக்குதலை நிறுத்தவில்லை. இலங்கை அரசின் தலைவர் மகிந்த ராஜபக்ச, உலக நாடுகளை ஏமாற்றி வருகிறார். விமானக் குண்டுவீச்சையும் கனரக ஆயுதத் தாக்குதலையும் பயன்படுத்த மாட்டோம் என்று ஏப்ரல் 27 ஆம் நாள் அவர் சொன்னார். ஆனால், அன்று மாலையிலேயே விமானங்கள் குண்டுகளை வீசியதிலும், 27, 28 ஆகிய இரண்டு நாட்களிலும் நடைபெற்ற கடுமையான தாக்குதல்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். நாற்பதுகளில் யூதர்களை நாஜிகள் இனப்படுகொலை செய்ததுபோல், இன்று இலங்கையில் தமிழ் இனத்தையே இலங்கை அரசு கரு அறுத்து வருகிறது. இந்தப் பிரச்சினையில் தாங்கள் நேரடியாக உடனே தலையிட்டு உலகின் தொன்மையான பழங்குடிகளுள் ஒருவரான தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டிக் கொள்கிறோம். தங்கள் அன்புள்ள வைகோ பொதுச் செயலாளர் (மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டு உள்ள அரசியல் கட்சி) (மற்றும்: ஆசிரியர் பாரக் ஒபாமாவின் வாழ்க்கை வரலாற்று நூல் "ஆம் நம்மால் முடியும்")

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.