[திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009] இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள திருப்பூரில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி, இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை நடத்துவதே இந்திய இராணுவம் தான் என்ற குற்றச்சாட்டை உலகெங்கும் இருக்கும் தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி இன்று நடத்திய உண்ணாவிரத நாடகம் யாருடைய கவனத்தை ஈர்க்க? அல்லது யாரை ஏமாற்ற? உறுதியான நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அரசு தனக்கு வாக்குறுதி அளித்ததால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக கருணாநிதி கூறி இருக்கிறார். என்ன உறுதியான நடவடிக்கை? எப்போது அந்த நடவடிக்கை? இத்தனை நாளாக ஏன் இல்லை அந்த நடவடிக்கை?. இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இந்திய இராணுவம் தங்களுக்கு இந்தப் போரில் என்னென்ன உதவிகளைச் செய்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். இலங்கையின் வடபகுதியில் போர் நடைபெறும் இடங்களில் உள்ள விமானத் தளங்களை இந்திய இராணுவம் தான் செப்பனிட்டுத் தந்தது. தற்காப்பு ஆயுதங்கள் அனைத்தும் இந்திய இராணுவத்தால் தரப்பட்டன. போர் பகுதியில் உளவு வேலைகளை செய்யத் தேவையான நவீன கருவிகள் எல்லாம் இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு கொடுத்தது. வடக்கு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பற்றிய அடிப்படை பூகோள தகவல்கள், அதாவது Geographical விவரங்கள் இலங்கை இராணுவத்திடம் இவ்வளவு காலமும் இல்லாமலேயே இருந்தது. அதனால் தான் தமிழர் பகுதிகளில், அதாவது வவுனியா, முல்லைத்தீவு, வன்னிக் காடுகள் போன்ற பகுதிகளில் இலங்கை இராணுவத்தால் இவ்வளவு காலமும் முன்னேறிச் செல்ல முடியவில்லை. இப்பொழுது, இந்தப் போரில் தான் இலங்கை இராணுவம் இந்திய இராணுவம் அளித்த புலனாய்வு உதவியோடு தமிழர் பகுதிகளைப் பற்றிய பூகோள விவரங்களைப் பெற்று முன்னேறிச் சென்றிருக்கிறது. இலங்கை இராணுவத்தின் எல்லா முன்னேற்றத்திற்கும் இந்திய இராணுவத்தின் உதவி தான் அடிப்படை என்பது உலகறிந்த உண்மை. இந்தியாவில் இலங்கை இராணுவ வீரர்கள் படை பயிற்சி பெற்றார்கள் என்று இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு இந்தப் போரை நடத்த அளித்த ஒவ்வொரு உதவியையும் பட்டியலிட்டு தெரிவித்தார் கோத்தபாய ராஜபக்ச. இலங்கை இராணுவத்திற்கு இந்தியா இராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது. ஆயுதங்களையும் அளிக்கக் கூடாது என்று நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறேன். பல பத்திரிகைகளில், என்னுடைய வேண்டுகோள் வெளியானது. பல பத்திரிகைகள் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்யும் இராணுவ உதவிகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டன. அப்போதெல்லாம், மத்திய அரசிடம் இராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்யாதீர்கள் என்று வலியுறுத்தாத கருணாநிதி, இன்றைக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் அரசு முகாம்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், இந்த உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது?. இலங்கைப் போரில் மத்திய அரசின் ஈடுபாடு இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், தேர்தல் களத்தில் காங்கிரசோடு கைகோர்த்து நின்றால், தனக்கு ஏற்படப்போகும் அவமானகரமான தோல்வியை நினைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப கருணாநிதி இன்றைக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். இலங்கைத் தமிழர்களை காக்க தனி ஈழம் தான் ஒரே தீர்வு. தனி ஈழம் அமைத்தே தருவேன் என்று நான் பேசியதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, இந்திய அரசு தங்களுக்குச் செய்த உதவிகளையெல்லாம் பட்டியலிட்ட போது, கருணாநிதி அதைக் கண்டுகொள்ளவில்லையே! ஏன்?. வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி, இந்தியாவில் இருந்து தூதுவர்களை ராஜபக்சவுடன் பேச்சு நடத்த கடந்த வாரம் அனுப்பினார்களே, அவர்கள் ஏன் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யவில்லை? போரை நடத்துவதே இவர்கள் தானே! எனவே தான் சொல்லுகிறேன், போரை நடத்தும் அரசாங்கம் கருணாநிதி பங்கேற்றிருக்கும் இந்திய மத்திய அரசாங்கம். இன்றைக்கு திடீரென்று கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது தமிழக மக்களை ஏமாற்றத் தான். தேர்தல் களத்தில் ஈழப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகி இருப்பதால், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க கருணாநிதி நடத்திய மோசடி செயல் திட்டம் தான் இந்த உண்ணாவிரதம். இன்று அதிகாலை 4:00 மணியில் இருந்து தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது இலங்கை இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 6:00 மணி நேரம் நடைபெற்ற அந்தக் கொடூரத் தாக்குதலை இந்த உண்ணாவிரத நாடகம் உலகின் பார்வையில் இருந்து மறைத்துவிட முடியாது. மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் கூட இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்காக அறிவிக்கவில்லை. சார்க் அமைப்பின் சக உறுப்பு நாடான இலங்கையை தனது செல்வாக்கைக் கொண்டு நிர்பந்தித்திருக்க வேண்டிய இந்தியா, தமிழர் நலனில் பாரா முகமாக இவ்வளவு காலமும் இருந்துவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்க கருணாநிதி நடத்தும் இந்த நாடகம் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தராது. மாறாக, கருணாநிதி மத்திய அரசை நிர்ப்பந்தித்து உடனடியாக இலங்கைத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யட்டும். இந்தியாவில் இருந்து யாரையெல்லாம் அனுப்பி இலங்கையில் மக்களுக்கு உதவ முடியுமோ அவர்களையெல்லாம் அனுப்பட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று பிரகடனம் செய்ததற்காக என் மீது சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சவின் இராணுவச் செயலாளர் கடும் கோபம் கொண்டு பதில் அளித்திருக்கிறார். இலங்கையில் இல்லாமல் வேறு எங்காவது ஜெயலலிதா ஈழம் அமைக்கட்டும் என்று கோத்தப்பாய ராஜபக்ச கூறி இருக்கிறார். ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்கள் அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன். அங்கு இப்போது அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னதைப் பற்றி காங்கிரஸ் மத்திய மந்திரி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில்சிபில், இது தேச விரோத கருத்து, தேசவிரோத செயல், பொறுப்பற்ற செயல் என்று கூறி இருக்கிறார். கபில்சிபிலுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தனி ஈழம் அமைப்போம், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது எந்த இந்திய சட்டத்திற்கு எதிரானது? இந்தியாவை துண்டாடி தனி ஈழம் அமைப்போம் என்று நான் சொல்லவில்லையே! இலங்கையில் தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்று தானே நான் சொன்னேன். அது எப்படி தேச விரோதச் செயலாகும். எந்த சட்டத்தில் அப்படி சொல்லக்கூடாது என்று இருக்கிறது. கபில்சிபிலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நான் சொல்லிக் கொள்வேன். தேசபக்தியில் எனக்கு நீங்கள் யாரும் பாடம் சொல்லித் தர தேவையில்லை. நான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தேசியவாதி தான். எனது தேசப்பற்றில் குறை கண்டுபிடிக்க முடியாது. களங்கம் கற்பிக்க முடியாது. கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் முடிந்த பிறகு, இலங்கை அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் போர்நிறுத்தம் போர் விமானங்களை இனிமேல் பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய பீரங்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய துப்பாக்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம். இலங்கைத் தமிழர்கள் செத்துமடிவார்கள் என்பதற்காக அதை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டார்களாம். ஆனால், அங்கே விடுதலைப் புலிகள் இலங்கைத் தமிழர்களை பிடித்து வைத்து இருக்கிறார்களாம். ஆகவே, விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக சிறிய ரக துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்த போகிறார்களாம். இது என்ன நாடகம்? இது என்ன கேலிக்கூத்து? இதை எப்படி போர் நிறுத்தம் என்று சொல்ல முடியும்? இந்த அறிவிப்பை பார்த்து கருணாநிதி அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இந்தக் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். தன்னலம் மிகுந்த குடும்ப ஆட்சி, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள தீமைகளையும், அவலங்களையும், நீங்கள் எல்லாம் வேறு வழியின்றி, வேதனையோடு தாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றார் அவர்.
Monday, April 27, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.