Sunday, April 19, 2009

வவுனியா வைத்தியசாலை பிரேத அறையில் குவிந்திருந்த சடலங்கள் அரச செலவில் அடக்கம்

[ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2009] வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த 56 சடலங்கள் நேற்று சனிக்கிழமை நீதிமன்ற உத்தரவுக்கமைய அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உறவினர்களின் வருகைக்காகவும், உறவினர்கள் வந்து அடையாளம் காட்டி உரிமை கோருவதற்காகவும் வைக்கப்பட்டிருந்த சடலங்களும், உறவினர்களால் பொறுப்பேற்று இறுதிக்கிரியைகளைச் செய்ய முடியாத சடலங்களும், அடையாளம் காணப்படாத சடலங்களுமே இவ்வாறு அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. கடந்த பெப்ரவரி மாதம் 9 ம் திகதி பிரமந்தனாறு பகுதி இடம்பெயர்ந்து வந்த மக்களுக்கான இராணுவ சோதனை நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது கொல்லப்பட்ட 19 பேரின் சடலங்கள், அடுத்த நாள் இடம்பெற்ற மற்றுமொரு சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் உட்பட காயமடைந்து உயிரிழந்தவர்களின் சடலங்களும் இந்த 56 சடலங்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதி்களை நோக்கி மக்கள் இடம்பெயர்ந்து வருகையில் இடம்பெறுகின்ற அசம்பாவித சம்பவங்களில் அவ்வப்போது கொல்லப்பட்டவர்கள். காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தவர்கள் ஆகியோரின் சடலங்களும் அரச செலவில் வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அடக்கம் செய்யப்பட்ட 56 சடலங்களில் அடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல சடலங்கள் பெயர்கள் தெரிந்திருந்த போதிலும், உறவினர்கள் பொறுப்பேற்றகாத காரணத்தினால் அவர்களின் வருகைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தன. சில சடலங்கள் உறவினர்களினால் அடையாளம் காணப்படுவபதற்காக வைக்கப்பட்டிருந்தன. எனினும், வவுனியாபிரேத அறையில் இந்தச் சடலங்களை வைத்திருப்பதற்குப் போதிய இடம் இல்லாத காரணத்தினாலும், வைக்கப்பட்டிருந்த சடலங்களைப் பராமரிப்பதற்குத் தேவையான குளிரூட்டி வசதிகள் போதாத காரணத்தினால் சடலங்கள் பழுதடைந்திருந்ததாலும், இவைகள் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 91 வயதுடைய வயோதிபர் தொடக்கம் ஆண் பெண்கள், இளவயதுடையவர்கள் என 44 பெரியவர்களின் உடல்களும், 2வயது குழந்தை உட்பட குறைபி்ரசவத்தில் சிசுக்கள், பிறந்து உயிரிழந்த சிசுக்கள் என 12 ஏனைய சடலங்களும் இவ்வாறு வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.