Wednesday, April 29, 2009

"இது சிங்கள நாடு!" என மிரட்டல்: அச்சுறுத்தலினால் றக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழா நிறுத்தம்

[புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009] சிறிலங்காவில் உள்ள இரத்தினபுரி மாவட்டத்தில் சிங்கள இளைஞர்களின் அச்சுறுத்தல்களினாலும் மிரட்டல்களினாலும் சுமார் 200 வருட வரலாற்றைக்கொண்ட றக்குவானை சிறீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழா இடைநிறுத்தப்பட்டுள்ளது. சிறீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பரிபாலன சபையினர் ஆலய வருடாந்த திருவிழாவை ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் தொடங்கி மே மாதம் 10 ஆம் நாள் வரை கொண்டாட தீர்மானித்து அதற்கான முன்னேற்பாடுகளை செய்து கொண்டிருந்த வேளையிலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கோயில் பரிபாலன சபை உறுப்பினர்களின் வீடுகளுக்கும் வியாபார இடங்களுக்கும் சென்று சிங்கள இளைஞர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள குறித்த ஆலய வருடாந்த திருவிழா இடைநிறுத்தப்பட்டதனால் இறக்குவானை இரத்தினபுரி தமிழர்கள் கவலை அடைந்துள்ளதுடன் மிரட்டல்களினால்அங்கு மக்கள் மத்தியில் அச்சமும் நிலவுகின்றது. சிறீ முத்துமாரியம்மன் ஆலயலய திருவிழா ஏப்ரல் மாதம் 28 ஆம் நாள் தொடங்கி மே மாதம் 10 ஆம் நாள் வரை நடத்த பரிபாலன சபையினர் திட்டமிட்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த சிங்கள இளைஞர்கள் இது சிங்கள நாடு. நாம் சொல்வதையே தமிழர்கள் கேட்க வேண்டும் எனக்கூறி அச்சுறுத்தினர். சிங்கள பௌத்தர்களின் வெசாக் கொண்டாட்டம் மே மாதம் 4 ஆம் நாள் தொடக்கம் 10 ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது. வெசாக் வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளதால் இக்காலப்பகுதியில் எந்தவொரு கோவில் விழாக்களும் நடத்தமுடியாது என கட்டளையிட்டனர். அவ்வாறு மீறி நடத்தினால் எதிர்விளைவுகள் ஏற்படும் என்று சிங்கள இளைஞர்கள் ஆலய பரிபாலன சபையினருக்கு எச்சரிக்கை செய்தனர். இந்த அச்சுறுத்தல்கள் தொடர்பாக ஆலய பரிபாலன சபையினர் இறக்குவானை காவல்துறையிடம் முறையிட்டும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வெசாக் நாள் வருவதால் சிறீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை நடத்த வேண்டும் என்று காவல்துறையினரும் ஆலய பரிபாலன சபையினருக்கு உத்தரவிட்டனர். இதனால் இறக்குவானையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.