Tuesday, April 28, 2009

இடம்பெயார்ந்த மக்களுக்கு மேலும் 25 கோடி நிவாரண உதவி : தமிழக அரசு அறிவிப்பு

[செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009] இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் முதற்கட்டமாக ஏற்கனவே 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, தேயிலை, சோப்பு, பேஸ்ட் மற்றும் துணி வகைகள் கொண்ட ரூ.10 கோடியே 6 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் 13-11-08 அன்று கப்பல் மூலமாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக இலங் கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. மேலும், இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவுவதற்காக இரண்டாம் கட்டமாக 40 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் ரூ.6 கோடியே 46 லட்சம் மதிப்புள்ள உணவுப்பொருட்கள் மற்றும் துணி வகைகளுடன் சமையல் பாத்திரங்களும், நிவாரணப் பொருட்களாக 40 ஆயிரம் சிப்பங்களில் கடந்த 22-4-09 அன்று கப்பல் மூலமாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இவை மிக விரைவில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ்க் குடும்பங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக விநியோகிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது : இலங்கையில் தற்காலிக முகாம்களுக்கு தற்போது கூடுதலாக இடம் பெயர்ந்து வந்து சேர்ந்துள்ள இலங்கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிப்பதற்காக மூன்றாம் கட்டமாக ஏறத்தாழ ரூ.7 கோடி மதிப்புடைய மேலும் 50 ஆயிரம் குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் அடங்கிய சிப்பங்களை இலங்கைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமாக அனுப்பப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் துணி வகைகளுடன் இம்முறை குடிநீரைச் சுத்திகரிக்கத் தேவையான வில்லைகளும், 10 ஆயிரம் கிலோ எடையுள்ள குழந்தைகளுக்கான உணவுப் பொருள்களும் சேர்த்து அனுப்பப்படுகின்றன. இந்த நிவாரணப் பொருள்களும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு எதிர்வரும் மே மாதம் 5ஆந்திகதிக்குள் சென்னை துறைமுகத்திலிருந்து அனுப்பப்பட்டு, அங்குள்ள சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தின் வாயிலாக, பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்படும். இந்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு திரட்டிய பணத்தில் மீதப்பட்ட 25 கோடி ரூபாவை தமிழக அரசின் சார்பில் நிதி உதவியாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகை மத்திய அரசு அறிவித்துள்ள ஒதுக்கீடான ரூ. 100 கோடியுடன் சேர்த்து ரூ. 125 கோடியாக பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படும்." என அதில் கூறப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.