Sunday, August 17, 2008

அரசாங்கம் சர்வதேச யுத்தச் சட்டங்களுக்குப் புறம்பான வகையில் யுத்தத்தை முன்னெடுக்கின்றது – இரா.சம்பந்தன்

[ஞாயிற்றுக்கிழமை, 17 ஓகஸ்ட் 2008] இலங்கை அரசாங்கம் சர்வதேச யுத்தச் சட்டங்களுக்குப் புறம்பான வகையில் யுத்தத்தை முன்னெடுப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரச படையினரின் வான் தாக்குதல்கள், எறிகணைத் தாக்குதல் மற்றும் ஆழ ஊடுருவும் பிரிவினரின் கிளைமோர்க் குண்டுத் தாக்குதல்களினால் பெருமளவிலான வன்னிப் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பெருமளவிலான வன்னிப் பிரதேச மக்கள் மர நிழலில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இராணுவ நடவடிக்கைகளின் மூலம் ஒருபோதும் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார். யுத்தத்தின் மூலம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாதென இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் இராணுவ நடவடிக்கைகளுக்கும், தமிழர் பிரச்சினைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதே எனது கருத்து என அவர் தெரிவித்துள்ளார். எந்தவொரு ஜனநாயக அரசாங்கமும் தமது நாட்டுப் பிரஜைகளை இவ்வாறான ஓர் நிலைக்குத் தள்ளிவிடாதென அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார். 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் தமிழர்களது பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு பெற்றுக் கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபல ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு அளித்த விசேட செவ்வியின் போது இரா. சம்பந்தன் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்தினால் பொதுமக்களின் நிலைகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மூடித் தனமான தாக்குதல்களினால் பெரும்பாலான தமிழர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக மாறுவதனைத் தவிர்க்க முடியாது என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.