Sunday, July 06, 2008

கிழக்கில் கேணல் ராம் தலைமையில் 200 புலிகள்: கொழும்பு ஊடகம்

[ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008] தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் ராம் தலைமையில் 200 விடுதலைப் புலிகள் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் இயங்கி வருவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்தை அரசு கைப்பற்றிய போதும் அங்கு முழுமையான நிர்வாகத்தை ஏற்படுத்த முடியவில்லை. அம்பாறை மாவட்டத்தின் கஞ்சிக்குடிச்சாறு அடர்ந்த காட்டுப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஜூலை முதலாம் நாள் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினை ஏற்றிவரச் சென்ற பெல்-412 ரக உலங்குவானூர்தி மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்கு நடைபெற்று வரும் தாக்குதல்களின் பிந்திய தகவலாகும். அறுகம்குடா பாலத்தை திறப்பதற்குச் சென்ற அரச தலைவர், அமைச்சர்கள் மற்றும் இராஜதந்திரிகள் அடங்கிய குழுவினரின் தொடரணியில் தாக்குதலில் சிக்கிய உலங்குவானூர்தி பங்குபற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. கஞ்சிக்குடிச்சாறுப் பகுதியின் அடர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு மேலாக பறந்த போதே உலங்குவானூர்தி தாக்குதலுக்கு உள்ளாகியது. அவசரமாக தரையிறங்கிய உலங்குவனூர்தியின் எரிபொருள் தாங்கியில் நான்கு துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த அடையாளங்கள் காணப்பட்டன. அதன் பின்னர் செங்காமம் பகுதியிலிருந்த சிறப்பு அதிரடிப்படை முகாம் மீது விடுதலைப் புலிகள் மோட்டார் தாக்குதலையும் நடத்தியிருந்தனர். கஞ்சிக்குடிசசாறு காட்டுப்பகுதியில் இருந்து ஏவப்பட்ட 81 மி.மீ மோட்டார் ஏறிகணைகள் நான்கு முகாம் பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன. சில மாங்களுக்கு முன்னர் கிடைத்த தகவல்களின் படி கேணல் ராம் தலைமையில் 200 விடுதலைப் புலிகள் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.