[வெள்ளிக்கிழமை, 23 மே 2008]
நிகரற்ற ரணகளச் சூரனாக மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ் திகழ்ந்தார் என்று தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தனது வீரவணக்க அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சென்னையில் வைகோ இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈழ விடுதலைப் புலிகளின் முதல் வரிசைத் தளகர்த்தர்களுள் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ் மறைந்தார் என்ற செய்தியை அறிந்த மாத்திரத்தில் ஒருகணம் அதிர்ச்சியிலும், துக்கத்திலும் என் உள்ளம் உறைந்தது.
மாவீரர் பால்ராஜ் என்ற பெயரை உச்சரித்தாலே களத்தில் நிற்கும் வேங்கைகளின் நரம்புகளில் மின்சாரம் பாயும்.
பால்ராஜின் ஒரு கட்டளை முழக்கம் கேட்டால் போதும், பகைவர் படை அணி பல மடங்கு இருப்பினும், சரம் சரமாகக் குண்டுகள் சீறி வந்தாலும், அவற்றை எதிர்கொண்டு எதிரிகள் முகாமைச் சின்னாபின்னம் ஆக்குவர் விடுதலைப் புலிகள்.
பெரும் தொகை கொண்ட சிங்கள இராணுவத்தினரை, குறைந்த எண்ணிக்கை உள்ள வேங்கைகளைக்கொண்டு பலமாகத் தாக்கி வீழ்த்தி பலமுறை புறமுதுகிட்டு ஓடச்செய்த வீரத்திலகம்தான் பிரிகேடியர் பால்ராஜ்.
1989 ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம் 23 ஆம் நாள், இயக்கத்தின் முன்னணித் தளபதிகளை என்னிடம் விடுதலை வேங்கைகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் அறிமுகம் செய்துவைத்த போது, அவர்களுள் முக்கியமானவர் பிரிகேடியர் பால்ராஜ்.
குத்திக்கிழிக்கும் கூரிய முள்மரங்கள் அடர்ந்த காடுகளின் வழியாகச் செல்கையில், எந்த நேரத்திலும் இருநாட்டு இராணுவமும் தாக்குகின்ற அபாயத்தின் ஊடே என்னைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காகத் தேர்ந்து எடுத்து உடன் அனுப்பி வைத்த வீரர்களில் சிலர் அதன்பின் நடைபெற்ற சமர்களில் வீரமரணம் எய்தினர்.
முக்கிய தளபதிகள் பல சமர்களில் சாகச வெற்றிகளைக் குவித்து உள்ளனர். மூன்று நாட்கள் தொடர்ந்து வன்னிக்காடுகள் ஊடே நடக்கையில் கிளிநொச்சிக்குச் செல்லும் சாலையை நாங்கள் கடக்க நேர்கையில், இராணுவத்தினர் அந்த வழி வருவதை அறிந்து, அருகில் காட்டுக்கு உள்ளே நாங்கள் பதுங்க நேர்ந்தது. அப்பொழுது பல மணி நேரம் பால்ராஜ் அவர்களுடன் உரையாடுகின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவருடைய உடலில் குண்டுகள் பாயாத இடமே இல்லை. பலமுறை படுகாயமுற்று, அதில் இருந்து மீண்டு, களங்களில் படை நடத்தி உள்ளார். ஒவ்வாரு சண்டையிலும் அவருக்கு நேர்ந்த மயிர்க்கூச்செரியும் அனுபவங்களை அவர் சொல்லக்கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன். என் பாதுகாப்புக்காக உடன் வந்த புலிப்படைத் தம்பிகள், தளபதி பால்ராஜ் மீது கொண்டு இருக்கிற பாசம் மிக்க விசுவாசத்தையும், மதிப்பையும், அவர்கள் சொல்லச்சொல்லக் கேட்டுப் பிரமித்துப் போனேன்.
25 ஆம் நாள் இரவு 10:00 மணியளவில், பேசாலை பகுதியில், கடற்கரை மணலில் என்னைப் படகில் ஏற்றி விடை கொடுத்து அனுப்புவதற்கு முன்பு, பால்ராஜ் அவர்களைக் கட்டித்தழுவிக் கொண்டேன். அவரது காலணிகள் கிழிந்து போயிருந்ததால், என்னுடைய புதிய காலணிகளை நீங்கள் பயன்படுத்துங்கள் என்று கொடுத்தேன். அந்த இரவில் தொடுவாய் கடற்கரையில் நாங்கள் இறங்கத்திட்டமிட்டு இருந்ததால், மறுநாள் காலையில் 900-க்கும் அதிகமான இராணுவத்தினைர் எங்களைச் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தப்போவதும், சீறிப்பாய்ந்த குண்டுமழையில், நூலிழையில் நான் உயிர் தப்புவேன் என்பதும், என்னுடன் வந்த வீரத்தம்பி சரத் என்ற பீட்டர் கென்னடி, உடல் சல்லடைக்கண்களாகத் துளைக்கப்பட்டுக் கொல்லப்படுவான் என்பதையும் நான் கற்பனைகூடச் செய்யாத சூழலில் பால்ராஜிடம் இருந்து விடைபெற்றேன்.
அதன் பின்னர், கடந்த 19 ஆண்டுகளில், ஈழத்துப் பிள்ளைகளிடம் தொலைபேசியிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் நான் பேச நேரும்போதெல்லாம் பால்ராஜ் அவர்களைப் பற்றி விசாரிப்பேன். நலமாக இருக்கிறார். போர்க்களங்களில் சாதிக்கிறார் என்றே சொல்லி வந்தார்கள். ஆனால், அண்மையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இருதய அறுவைச் சிகிச்சை மேற்கொண்டதை அறிந்ததால், அண்மையில் நான் நோர்வே சென்றபோது, பால்ராஜ் அவர்களைப் பற்றி வினவினேன். "நலமாக இருக்கிறார்" என்றே சொன்னார்கள்.
நிகரற்ற அந்த ரணகளச் சூரன் மறைந்துவிட்டார். எந்தத் தாயக மண்ணின் விடுதலைக்காகப் போர்க்களத்தில் எதிரிகளைக் கதிகலங்கச் செய்தாரோ, அந்த மண்ணில், இதோ, அமைதியாக உறங்குகிறார். அவரது வீரமும், தியாகமும், தமிழ் ஈழ விடுதலை வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டு விட்டன.
இம் மாவீரர்கள் துயில்கின்ற தமிழ் ஈழ மண் விடுதலை பெற்று, சுதந்திர இறைமை உள்ள நாடாக மலரும்போது, அந்த மண்ணிலே உறங்குகிற பால்ராஜின் உடலும் சிலிர்க்கத்தான் செய்யும்.
வாழ்க, மாவீரன் பிரிகேடியர் பால்ராஜின் புகழ் என்று என் மனம் மானசீகமான முழங்கும் வேளையில் அம்மாவீரனின் கல்லறைக்கு, தாய்த்தமிழகத்தில் இருந்து என் கண்ணீரைக் காணிக்கை ஆக்குகிறேன் என்று அதில் வைகோ தெரிவித்துள்ளார்.
Friday, May 23, 2008
நிகரற்ற ரணகளச் சூரன் மாவீரன் பிரிகேடியர் பால்ராஜ்: வைகோ
Friday, May 23, 2008
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.