Saturday, April 12, 2008

இந்தப் புதுவருட சவால்களை எதிர்கொள்ளத் தயாராவோம்!

[சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008] காலச் சக்கரம் பின்னோக்கிச் சிந்திக்காமல், முன்னோக்கி தங்கு தடையின்றி உருண்டு ஓடிக் கொண்டிருக்கின்றது. காலநதி தரிப்பிடம் இன்றி நிற்காமல் சதா பாய்ந்து கொண்டிருக்கின்றது. . காலதேவனின் இந்த இயல்பான அசைவியக்கத்தில் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழமை.அந்த வரிசையில் சர்வஜித் வருடம் நம்மைவிட்டு இன்றோடு ஓடி மறைய, சர்வதாரி நம்மை அரவணைக்க நாளை பிறந்து வருகிறான்.காலத்தே முகிழ்கிறது மனித வாழ்வு. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே விரியும் அந்தக் காலகட்டத்தில் நிலைக்கிறது வாழ்க்கை. கால நதியில், இருப்பு என்ற இரு அந்தங்களுக்கு நடுவே, தனிமனித வாழ்வின் ஓடம் ஆடி, அசைந்து, நகர்ந்து கொண்டிருக்கின்றது.இந்தச் சளைக்காத கால ஓட்டத்தில் நேரக்கணக்கீடு ஒவ்வொரு கணமாகக் கரைந்துகொண்டிருக்கிறது. மணிச்சக்கரம் நில்லாமல்,நிலையாமல், சுழன்று கொண்டிருக்கின்றது.நடந்து முடிந்தது இறந்த காலமாகவும், நடந்து கொண்டிருப்பது நிகழ்காலமாகவும், நடக்கப்போவது எதிர்காலமாகவும் தோற்ற, இந்தக் காலநதி மீது மனிதத்துவம் பயணித்துக் கொண்டிருக்கின்றது. தனி மனிதனைப் பொறுத்தவரை நிகழ்காலமே அவனுக்கு நிதர்சனமானது. பட்டறிந்து தொட்டுணரும் வாழ்வியலாகின்றது.செத்துப்போன கடந்த காலத்தின் நிகழ்வுகளும்,நெருடல்களும் சதா மனதை அரிக்க, அந்த நினைவுகளிலும் எதிர்காலக் கனவுகள் பற்றிய அதீதக் கற்பனையில் லயித்தபடிகால நதியில் பயணிக்கும் மனிதன், நிகழ்கால நிஜங்களையும் யதார்த்தங்களையும் புறநிலை உண்மைகளையும் கவனிக்கவும், முழுமையாக உள்வாங்கித் தரிசித்துப் புரிந்து கொள்ளவும் குறிப்பாகச் சொல்வதானால் மனித பிரக்ஞையோடு வாழவும் தவறிவிடுகிறான். எதிர்காலம் பற்றிய கனவுலகில் சஞ்சரித்து அதில் அதிகம் மூழ்கி விடுவதிலோ அல்லது இறந்தகாலப் பட்டறிவுகளை இரை மீட்பதில் அர்த்தமின்றி சுகானுபவம்காண விழைவதிலோ அதிகப் பயன் ஏதுமில்லை. போலியான மன நிறைவையோ, திருப்தியையோ எட்டிவிட்டதாகக் கருதுவதைத் தவிர. கடந்தகால நிகழ்வுகளில் மனதைப் புதையுண்டு போகவிடாமலும், எதிர்கால எதிர்பார்ப்புகளை சதா எண்ணியவாறு மனக்கோட்டை கட்டிக் காலம் கடத்தாமலும், நிகழ்காலத்தில் நிஜமாக வாழ்வதே நிதர்சனமானது. அந்த நிகழ்காலத்தில் யதார்த்தங்களை மெய்மை நிலையை புரிந்துகொண்டு அதில் நம்மை முழுமையாக ஈடுபடுத்தி வாழ்வதுதான் அர்த்தமானது; அபத்தமில்லா நெறிமுறை அதுதான். கடந்து செல்லும் சர்வஜித் வருடத்தில் சர்வ சித்திகளுமே கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஈழத் தமிழ் மக்கள் இறுதியில் ஏமாற்றமே அடைந்தனர்.கோர யுத்தமும், கொடூரத் தாக்குதல்களும், மோசமான படை நடவடிக்கைகளும், போர்ப் பேரழிவுகளும், இடம் பெயர்வுகளும், ஈவிரக்கமற்ற படைக்கெடுபிடிகளும், இவற்றால் ஏற்பட்ட துன்ப துயரங்களின் தொடர்கதையாகவுமே சர்வஜித் ஆண்டு ஈழத்தமிழரைக் கடந்து செல்கின்றது.அதுபோல வருகின்ற சர்வதாரி ஆண்டின் அனுபவமும் ஆக்ரோஷமாக இருக்கும் என்ற பேரச்சம் ஈழத் தமிழர் மனதில் இல்லாமல் இல்லை. தன் பெயருக்கேற்ப "சர்வாதிகாரி' ஆண்டாக இது மாறிவிடுமோ என்ற பீதி நிலை தமிழர் மனதில் உறைந்து கிடக்கின்றது. இந்தக் காலச் சூழலில் கட்டவிழும் கள யதார்த்தங்கள் இத்தகைய திகில் எண்ண ஓட்டத்தைத்தான் தமிழ் மக்களுக்குத் தந்து நிற்கின்றன. ஆனாலும் கடந்துபோன காலத்தின் கோரத்தையும், கொடூரத்தையும் எண்ணி சதா வேதனையில் உழலாமலும் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையற்ற அச்ச உணர்வில் உறையாமலும் பிறக்கும் வருடத்தின் நிகழ்கால நிஜங்களை எதிர்கொண்டு, எதிர்நீச்சலடித்து, நிமிர்ந்து நிலைபெற மனதில் உறுதி கொள்ளவேண்டிய வேளை இது. காலச்சக்கரத்தை அறுபது வருடங்கள் கொண்ட தொகுதியாகப் பிரித்தான் தமிழன். அதில் இருபத்திரண்டாவது வருடமாக நாளை பிறக்கிறான் சர்வதாரி.ஒவ்வொரு ஆண்டையும் ஆறு குழுக்களாகவும் இரண்டு அயனங்களாகவும் கூட அவன் வகுத்தான். சூரியன் மேட இராசியில் சஞ்சரிக்க சித்திரை பிறக்கும். இக்காலம் உத்தராயணம். இது சூரியன் வடக்கே நகரும் காலம். மற்றையது சூரியன் தெற்கே நகரும் காலம். தட்சராயணம். அது ஆண்டின் பிற்பகுதியில் வரும். ஆண்டின் இந்த ஆறு ருதுக்களில் சித்திரைப் புத்தாண்டுடன் பிறப்பது வசந்த ருது. முன் பனி, பின் பனி கழிந்து, இந்த இளவேனில் காலத்தில் மலர்கள் வாரிச் சொரிந்து மணம் பரப்ப இயற்கை பூத்துக் குலுங்கி நிற்கும் ரம்மியமான வேளை இது.இயற்கை அன்னையின் சொத்தான தாவர வர்க்கங்கள் புத்தாடை புனைந்து, புதுமணம் கமழப் புதுப்பொலிவும், புதுத் தோற்றமும், புத்தெழுச்சியும், புத்தூக்கமும், புத்துணர்வும் பீறிட்டுப் பொங்கியெழ இக்கால வேளையைப் புத்தாண்டாகத் தமிழன் புனைந்துகொண்டதில் அர்த்தங்கள் அதிகம் உள்ளனவல்லவா? காலத்தை நேர்த்தியாக வகுத்த நம் முன்னோர், எழுச்சிதரும் இந்தப் பருவத்தை ஆண்டின் ஆரம்பமாக வகுத்தமைக்கு அந்த எழுச்சி நம் வாழ்விலும் மலர்ச்சி தருவதாக அமையட்டும் என்பதுதான் காரணம்.நிகழ்கால சவால்களை எதிர்கொள்ளும் திடசங்கற்பத்தோடு இந்தப் புதுவருடத்தைத் தரிசிக்கத் தயாராவோம்!

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.