[சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008]
ஈழத்தமிழர்கள் உரிமையோடும், பாதுகாப்போடும் வாழ்வதற்கும், அவர்களின் இதய வேட்கையை நிறைவு செய்யும் வகையில் தீர்வுகளை ஏற்படுத்த சமாதானப் பேச்சுவார்த்தை இருதரப்பிலும் நடத்துவதற்கு வழிவகை காண வேண்டும் என்று நோர்வேயில் நடைபெற்ற தெற்காசிய பிரச்சினைகள் குறித்த மாநாட்டில் தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நோர்வேத் தலைநகரான ஓஸ்லோவில் ஏப்ரல் 10, 11 ஆகிய இரண்டு நாட்கள் "தெற்கு ஆசியாவில் அமைதியும், சமாதானமும்" குறித்த மாநாடு நடைபெற்றது.
நோர்வே நாடாளுமன்றக் கட்டடத்திற்கும், வெளிவிவகார அமைச்சுக்கும் அருகில் உள்ள ''பொறியியலாளர்கள் மாளிகை'' எனும் கட்டடத்தில் உள்ள அரங்கத்தில் நேற்று வியாழக்கிழமை (10.04.08) நடைபெற்ற மாநாட்டு நிகழ்வில் வைகோ பேசியதாவது:
"தெற்கு ஆசியாவில் அமைதியும், சமாதானமும்" எனும் தலைப்பில், "மனித குல மாண்பிற்கான அனைத்துலக சங்கம்" எனும் அமைப்பினர் நடத்துகின்ற இந்த மாநாட்டில், நான் பங்கெடுத்துக் கொள்கின்ற பெருமைக்கு உரிய நல்ல வாய்ப்பினைத் தந்த இம்மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கும், குறிப்பாக பண்டிட் ரவிசங்கர் அவர்களுக்கும் என் நெஞ்சின் ஆழத்தில் இருந்து நன்றியைத் தெரிவிக்கிறேன்.
நான் இந்தியாவின் தென்கோடியில் உள்ள மாநிலமான, பழமையான நாகரிகத்தின் தொட்டில் பூமியான தமிழ்நாட்டில் இருந்து வந்து உள்ளேன்.
அங்குள்ள அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறேன்.
தெற்கு ஆசியாவில் இன்று கொளுந்து விட்டு எரிகின்ற பிரச்சினைகளான,
(1) இலங்கைத் தீவில் சிங்கள அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடக்கின்ற போர்
(2) மியான்மர் நாட்டில் நசுக்கப்படும் ஜனநாயக உரிமைகள்
(3) நேபாளத்தில் ஜனநாயகத்திற்கான போராட்டம்
(4) மலேசியாவில் உரிமைகளுக்காகப் போராடும் தமிழர்கள் பிரச்சினை
(5) இந்தியாவில் வளர்ந்து வரும் நக்சல்பாரி தீவிரவாத இயக்கம்
ஆகியவற்றைக் குறித்து இம் மாநாடு விவாதிக்க உள்ளது.
காலத்தின் அருமை கருதி இலங்கைத் தீவில் பழமையான தமிழ் இனத்தைச் சூழ்ந்துள்ள, மிகவும் கவலை அளிக்கின்ற பேராபத்தான சூழலைக் குறித்து மட்டும் நான் இங்கு பேசுகிறேன்.
மோதல்கள், போர்கள் மனிதகுல வரலாற்றில் நெடுங்காலமாகத் தொடர்ந்து நடக்கின்றன. உலகின் முக்கியமான மதங்களான இந்து மதம், பெளத்த மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம் மற்றும் யூதர்களின் மதம் ஆகியவைகள் எல்லாம் ஆசியக் கண்டத்தில்தான் தோன்றின.
அவைகள் அனைத்தும் அன்பையும், மனித நேயத்தையும் போதித்தன. ஆனால், விசித்திரமான வேதனை என்னவெனில், இம் மதங்களின் பேரால் நடந்த மோதல்களில்தான் அதிக இரத்தம் சிந்தப்பட்டு உள்ளது. மோதல்களை அகற்றி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், மனித மனங்களில் கண்ணோட்டம் என்கின்ற பரிவு ஒன்றுதான் சரியான வழி ஆகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், உலகப் பொதுமறை எனும் புகழக்குரிய திருக்குறளில் திருவள்ளுவர் இது பற்றி கூறுகையில்,
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான உண்டிவ் வுலகு என்றார்.
உலகை இயக்குகின்ற உன்னதமான பண்பான இக்கண்ணோட்டம்தான் சகோதரத்துவத்தை, ஒற்றுமையை உருவாக்கும். அத்தகைய சகோதரத்துவம் என்னும் உன்னதமானக் கோட்பாட்டை, தமிழின் பழமையான இலக்கியமான புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் எனும் புலவர், "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று கூறினார்.
இந்த ஓஸ்லோ நகரத்தை, 1048 இல் ஹெரால்ட் என்னும் மன்னன் நிறுவினான். பலமுறை "தீ" க்கு இரையாக்கப்பட்டும், கிரேக்கத்துப் பீனிக்ஸ் பறவைபோல் மீண்டும் மீண்டும் இந்நகரம் எழுந்தது.
இந்த நகரில்தான் ஹேலவார்டு எனும் புனிதத் துறவி, இரண்டு கயவர்கள் ஒரு அவலைப்பெண்ணை தண்ணீரில் மூழ்கடித்துக் கொள்ள முயற்சித்த போது, அதனைத் தடுக்கப் போராடி தன்னுடைய உயிரை தியாகம் செய்தார். அவர் இந்த நகரத்தில் அழியாப் புகழ்பெற்ற துறவியாக போற்றப்படுகிறார்.
அதே மனிதாபிமான உணர்வுதான், உலகில் எங்கெல்லாம் மக்கள் துயரத்திற்கும், இன்னலுக்கும் ஆளாகின்றார்களோ அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் உணர்வாக நோர்வே மக்களின் இதயங்களில் பரிணமிப்பதைப் பார்க்கிறேன்.
இந்த நகரிலே இருந்து பறக்கவிடப்பட்ட அமைதிப் புறாதான் ஜெருசலத்தைச் சுற்றிலும் நிகழ்ந்த இரத்தக்களறியைத் தடுக்கவும், பாலஸ்தீனத்திற்கும் - இஸ்ரேலுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் மலர்வதற்கும் வழி அமைத்தது.
இம் மாநாட்டின் அடையாளச் சின்னமாக இம் மேடையில் உலகப் பந்தைச் சுற்றி அமைதிப் புறா பறப்பதாகச் சின்னம் அமைத்து உள்ளது பொருத்தமாக இருக்கிறது.
நோர்வே மண்ணில் நான் கால் வைத்தபோது, என் மனதில் வேதனை எழுந்தது.
இங்குதானே விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்தார்.
அவர் மரணப் படுக்கையில் நோய் வாய்ப்பட்டு இருந்தபோது, அவரை நோர்வேக்குக் கொண்டுவந்து, சிறுநீரக மாற்று அறுசை சிகிச்சை செய்து அவர் உயிரைக் காப்பாற்றி, மேலும் 8 ஆண்டுகள் இந்த உலகில் அவர் உயிர்க்காற்றைச் சுவாசிக்க வைத்தது நோர்வே அரசு அல்லவா? அந்த நன்றியைத் தமிழர்கள் எப்படி மறக்க முடியும்?
ஈழத் தமிழர்களின் வரலாறு, கடந்த ஐம்பது ஆண்டுக் காலத்துக்கும் மேலாக கண்ணீராலும், இரத்தத்தாலும் எழுதப்பட்டு உள்ளது. அதனால்தான் போலும் இந்துமாக் கடலில் கண்ணீர் துளி வடிவத்தில் அந்தத் தீவு காட்சி அளிக்கிறது.
இலங்கைத் தீவில் இரண்டு தேசிய இனங்கள் உள்ளன.
தமிழர்களின் தேசம் தனியானது. அத்தீவில் தமிழர்கள்தான் மண்ணின் மைந்தர்கள்.
வரலாற்றின் வைகறைக் காலத்தில் இருந்தே தமிழர்களுக்கு என்று அரசு இருந்தது.
டொச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும், ஆங்கிலேயர்களும் அரசு ஆள்வதற்கு முன்பு தமிழர்கள் புகழோடு அரசோச்சி வாழ்ந்தனர்.
1948 இல் பிரிட்டிஷ்காரர்கள் தீவில் இருந்து வெளியேறிய போது சிங்களவரிடம் ஆட்சியை ஒப்படைத்தனர்.
தமிழர்கள் தங்களுக்கு உரிமையும், நியாயமும் கிடைக்கும் என்று நம்பினர். ஆனால், சிங்கள இனவாத அரசு, தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக ஆக்கியது. தங்கள் நியாயமான உரிமைகளுக்காகத் தமிழர்கள் அமைதி வழியில் போராடினர்.
அதற்கு சிங்கள அரசு தந்த பரிசுதான் கொடிய அடக்குமுறை.
தமிழர்களுக்கு உரிமைகள் தருவதாக 1957 இல், 65 இல் போடப்பட்ட ஒப்பந்தங்களை சிங்கள அரசு குப்பைத்தொட்டியில் வீசியது.
அதன் விளைவாக, தமிழர் தலைவர் தந்தை செல்வா தலைமையில், தமிழ் அமைப்புக்கள் ஒன்றுகூடி, 1976 மே 14 இல் வட்டுக்கோட்டையில் மாநாடு நடத்தி, சுதந்திர இறையாண்மை உள்ள தமிழீழ தேசத்தை உருவாக்குவது என்று தீர்மானித்தனர்.
இதனைத் தொடர்ந்து, இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு ஆளாகினர்.
பச்சிளம் குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டனர்.
தமிழ் இனத்தின் கலாச்சாரத்தை அடியோடு அழிக்கத் திட்டமிட்டு சிங்கள அரசு கொடுமைகளை நடத்தியது.
ஒரு இலட்சம் அரிய நூல்கள் கொண்டு இருந்த யாழ்ப்பாண நூலகம் 1981 இல் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.
தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களும், கோவில்களும், தேவாலயங்களும் அழிக்கப்பட்டன. கற்பையும், மானத்தையும் உயிரினும் பெரிதாகப் பேற்றிய தமிழ்ப் பெண்கள், சிங்கள வெறியர்களால், இராணுவத்தால் நாசமாக்கப்பட்டனர்.
இக் கொடுமைகளைக் கண்டுதான் ஈழத் தமிழர்களின் இளைய தலைமுறை ஆயுதப் போராட்டம் தொடங்கியது.
உலகம் முழுவதிலும் ஒடுக்கப்பட்டவர்கள் ஆயுதப் போராட்டம் நடத்தியதைப் போலவே, தமிழர்களும் ஆயுதம் ஏந்தினர்.
1995 இல் சிங்கள அரசின் இனக்கொலையால் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். நாவாலியில் புனித பீட்டர் தேவலாயத்தில் குண்டு வீசப்பட்டதில் அங்கே இருந்த 168 பெண்களும், குழந்தைகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
5 இலட்சம் தமிழர்கள் அகதிகளாக வெளியேறினர். ''அவர்களின் கண்ணீரைத் துடைக்க அனைத்துலக சமுதாயம் உதவ வேண்டும்'' என அன்றைய போப் ஆண்டர் இரண்டாம் போப் ஜான்பாலும், அப்போதைய ஐ.நா. பொதுச் செயலாளர் புத்ரோஸ் காலியும் அனைத்துலக சமுதாயத்திற்கு வேண்டுகோள் விடுத்தனர்.
இன்று இந்த உலகில், பல நாடுகளில் பத்து இலட்சம் ஈழத் தமிழர்கள் அகதிகளாக வேதனையில் உழல்கின்றனர். சொந்த நாட்டிலேயே, வன்னிக் காடுகளில் உணவும், மருந்தும் இன்றி இலட்சக்கணக்கான தமிழர்கள் வாடி வதங்குகின்றனர்.
ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் எங்கள் தமிழ்நாட்டில் அகதிகளாக உள்ளனர்.
முதலில் போர் நிறுத்தம் அறிவித்தது சிங்கள அரசு அல்ல. தங்கள் வலிமையை போர்க்களத்தில் நிரூபித்த பின் விடுதலைப் புலிகள்தான் 2001 இல் நத்தார் பண்டிகை நேரத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.
30 நாட்களுக்குப் பின்னர், மேலும் ஒரு மாதம் போர் நிறுத்தம் நீட்டிப்புச் செய்தனர். இதற்குப் பிறகுதான் சிறிலங்கா அரசு தாங்களும், போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்தனர்.
சமாதானப் பேச்சுவார்த்தைக்கு நோர்வே அரசு ஏற்பாடு செய்தது. அந்த சமாதான பேச்சுவார்த்தையை சிங்கள அரசுதான் முறித்தது.
இன்று இலங்கையில் அப்பாவி தமிழ் மக்களை சிங்கள அரசு இராணுவத் தாக்குதலால் கொன்று குவிக்கிறது.
1998 இல் நான் ஐ.நாவின் மனித உரிமை கழகத்தின் துணைத் தலைவர் டாக்டர் ஹோர்ஸ்ட்டைச் சந்தித்து செம்மணி புதைகுழிகளைப் பற்றிச் சொன்னேன்.
கொசோவோவில் இராணுவத்தால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் உடல்களைத் தோண்டி எடுத்து உண்மையை அறிந்தது போல், செம்மணியிலும் புதைக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களின் உடல்களைத் தோண்டி எடுக்க ஆய்வுக்குழுவை அனுப்புங்கள் என்றேன்.
ஆய்வுக்குழுவை அனுப்பினார்கள். படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 400 பேர் புதைக்கப்பட்ட உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆழிப்பேரலை தாக்கிய பின்பு மறுவாழ்வு தரவந்த பிரெஞ்சு நாட்டின் நிவாரணக் குழுவில் வேலை செய்த 17 அப்பாவித் தமிழ் இளைஞர்கள், 2006 ஓகஸ்ட் 8 அன்று, சிங்கள இராணுவத்தால் கோரமாகத் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அதே ஓகஸ்ட் 14 ஆம் நாள், செஞ்சோலையில் தமிழ் அநாதை பெண் குழந்தைகளின் காப்பகத்தின் மீது சிங்கள வான்படை குண்டு வீசியதில் 61 சிறுமிகள் இரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டனர்.
இன்று இலங்கையில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களுக்கு உண்ண உணவு இல்லை, நோய்க்கு மருந்து இல்லை. அந்த இனத்தையே பூண்டோடு அழிக்க சிறிலங்கா இராணுவத் தாக்குதல் நடக்கிறது.
அமைதி வேண்டும் என்கின்றீர்களே, அது என்னவிதமான அமைதி?
தமிழர்களின் மயான அமைதி அல்ல. சுடுகாட்டு அமைதி அல்ல. அடிமை வாழ்வின் பாதுகாப்பு அல்ல.
அம் மக்கள் உரிமையோடும், கண்ணியத்தோடும் பாதுகாப்பாக வாழ்வதற்கான அமைதி.
அதுதான் தேவை.
தமிழர்களுக்கு என்று பூர்வீகத் தாயகம்.
அவர்கள் தனித் தேசிய இனம்.
இந்த அடிப்படை உண்மையை இன்றைய சிறிலங்கா அரசாங்க தலைவர் ஒப்புக்கொள்ள மறுக்கிறார்.
நான் இந்த மாநாட்டின் மூலமாக,
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மூலமாக,
அனைத்துலக சமுதாயத்தின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டுகிறேன்.
மரண பூமியில் அல்லல்பட்டு அழும், ஈழத்தமிழர்களின் துயரத்தின் பக்கம் உங்கள் விழிகளைத் திருப்புங்கள்!
பெரும் அழிவில் கதறுகின்ற ஈழத்தமிழ் இனத்தின் அவலக்குரலைக் காது கொடுத்துக் கேளுங்கள்!
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அம் மக்களுக்கு உணவும், மருந்தும் அனுப்புங்கள்.
சிறிலங்கா அரசு தனது இராணுவத் தாக்குதலை, இனக்கொலையை நிறுத்துவதற்கு அழுத்தம் தாருங்கள்!
ஈழத்தமிழர்கள் உரிமையோடும், பாதுகாப்போடும் வாழ்வதற்கும், அவர்களின் இதய வேட்கையை நிறைவு செய்யும் வகையில் தீர்வுகளை ஏற்படுத்த சமாதானப் பேச்சுவார்த்தை இருதரப்பிலும் நடத்துவதற்கு வழிவகை காண இம் மாநாடு பாதை அமைக்கட்டும்.
ஈழத்தமிழர்களுக்கு விடியல் பிறக்கட்டும் என்றார் வைகோ.
ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினரான எரிகா மான் அம்மையார், "இதயத்தைத் தொடுகின்ற உருக்கமான உரை ஆற்றினார் வைகோ" எனப் பாராட்டினார்.
மாநாட்டின் முதல் அமர்வுக்கு, ஜேர்மனியில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள எரிகா மான் அம்மையார் தலைமை தாங்கினார்.
''வாழும் கலை பயிற்சி'' அமைப்பாளர் பண்டிட் ரவி சங்கர் வரவேற்புரை ஆற்றினார்.
நோர்வே அரசின் வெளியுவுத்துறை அமைச்சகத்தின் செயலாளராகவும், இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்காக செயல்பட்டு வருகின்றவருமான ஜோன் ஹன்சன் பயர் முன்னிலை வகித்தார்.
மாநாடு தொடங்கியவுடன் பண்டிட் ரவிசங்கர், அம்மையார் எரிகா மான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ, சிறிலங்காவின் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், சிறிலங்கா அமரபுரா மஹாநிகய எனும் பெளத்த அமைப்பின் பிரமணவத்தே சீவாலி நாயக தேரோ மற்றும் இந்தியாவின் சத்தீஸ்கார் மாநில உள்துறை அமைச்சர் ராம்விசார் நேதம், பர்மாவின் ஜனநயாகக் குரல் எனும் அமைப்பின் செயல் இயக்குநர் கின்மாங்குவின் ஆகியோர் ஒன்று சேர்ந்து சமாதான விளக்கை ஏற்றி வைத்தனர்.
சுவிற்சர்லாந்து நாட்டின் அனைத்துலக சமாதானக் குழுமத்தின் பொதுச் செயலாளர் காலின் ஆர்ச்சர், சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தன, வாழும் கலை அமைப்பின் இயக்குநர் சுவாமி சத்யோஜதா, ஐக்கிய நாடுகள் சபையின் தெற்கு ஆசியாவின் மக்கள் தொகை நிதி அமைப்பின் இயக்குநர் வாசிம் சமான், ஓஸ்லோ பல்கலைக்கழக பேராசிரியர் ரூனோ ஓட்டோசென், உலக அமைதிக்கான நோபல் பரிசை வென்ற, நோர்வேயின் அனைத்துலக பெண்கள் அமைப்பின் இயக்குநர் டாக்தர் சோர்பே, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் நிரேஜ் தேவா, செய்தியாளர் பிரான்சிஸ் கோத்தியே ஆகியோரும் இம் மாநாட்டில் உரையாற்றினர்.
புதினம்.கொம்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.