Friday, March 28, 2008

ஒப்பந்தத்தை தொடர மறுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்: ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா எச்சரிக்கை

[வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2008]


மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி பொருட்கள் வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை ஒக்ரோபருக்குப் பின்னும் தொடர மறுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது:

சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்திருப்பதாகக் காரணம் காட்டி அனைத்துலகத்தில் இருந்து சிறிலங்காவிற்கு கிடைக்கும் பல உதவிகளை தடுத்து நிறுத்துவதற்கு சில அமைப்புக்கள் முயற்சிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் எதிர்வரும் ஒக்ரோபர் மாதத்துடன் நிறைவடைகிறது

இந்த ஒப்பந்தம் முன்னுரிமை அடிப்படையில் சிறிலங்காவிற்குப் பொருட்களை வழங்குவதற்காக செய்யப்பட்டதாகும். மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி இந்த ஒப்பந்தத்தை சிறிலங்காவுடன் தொடர்ந்தும் நீடிக்க வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் சில அமைப்புக்கள் கோரியுள்ளன.

மனித உரிமைகள் தொடர்பாக அனைத்துலக ரீதியில் மேற்கொள்ளப்படும் இத்தகைய பிரசாரங்களால் சிறிலங்காவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள்தான் தமது ஜீவனோபாயத்தை இழந்து பாதிக்கப்படுவர். அதேநேரம் இத்தகைய பிரசாரங்களால் சிறிலங்கா தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தப்பான அபிப்பிராயத்தைக் கொள்ள முனைகின்றன.

அத்துடன் மனித உரிமைகளை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சிறிலங்கா மீது சுமத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முனைந்து வருகின்றன.

இதனால் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிறிலங்கா சிக்கலாம். குறிப்பாக முன்னுரிமை அடிப்படையில் சிறிலங்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உற்பத்திப் பொருட்களை இனிமேல் ஏற்றுமதி செய்யமுடியாமல் போகலாம்.

கடந்த வருடம் 3 ஆயிரத்து 800 மில்லியன் டொலர் வருமானம் இத்தகைய ஏற்றுமதிகளால் கிடைத்தன.

ஐரோப்பிய ஒன்றியத்தால் சிறிலங்கா மீது சுமத்தப்படும் மனித உரிமைக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை.

இந்த குற்றச்சாட்டுகளின் பிரகாரம் சலுகை அடிப்படையிலான வர்த்தகத்தை ஐரோப்பிய ஒன்றியம் நிறுத்தினால் அதனால் கிராமப் புறங்களில் வாழும் 30 லட்சம் மக்கள்தான் பாதிக்கப்படுவர்.

ஏனெனில் ஐரோப்பிய நாடுகளுக்கான பிரதான ஏற்றுமதியான தைத்த ஆடைகளை வடிவமைப்பதில் கிராமப்புற மக்களே அதிகளவில் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்காவுடனான ஒப்பந்தத்தை தொடர மறுத்தால் ஏற்படவிருக்கும் விளைவுகள் பாரதூரமானவையாகும். எனவே அரசாங்கம் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்த விடயத்தில் தீர்க்கமான முடிவு எடுத்திருக்கிறது.

எதிர்காலத்தில் அனைத்துலக நாடுகள் சிறிலங்காவிடம் இத்தகைய குற்றச்சாட்டுகளை மேற்கொள்ள முடியாத வகையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க அரசாங்கம் முன்வந்திருக்கிறது.

எதிர்காலத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்து சிறிலங்கா மீது அனைத்துலக நாடுகள் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாத வகையில் சில தீர்மானங்களை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எடுத்திருக்கிறார்.

அனைத்துலக கொள்கைகளையும் அந்த நாடுகளின் வற்புறுத்தல்களையும் சிறிலங்காவில் நடைமுறைப்படுத்துவதற்கு அரச தலைவர் ராஜபக்ச தயாராக இல்லை.

அத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்த சிறிலங்கா உயர் நீதிமன்றம் இனிமேல் நடவடிக்கை எடுக்கும். அதில் அனைத்துலக நாடுகள் தலையிட முடியாது என்றார் அவர்.

புதினம்.கொம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.