[ஞாயிற்றுக்கிழமை, 30 மார்ச் 2008]
சலசலத்தோடும் ஒரு நதி. அந்த நதியில் கலக்கும் காட்டாற்று வெள்ளம். பிரவகித்துப் பாயும் வெள்ளத்தின் ஓட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டவை ஏராளம். நதியின் முன்னால் முளைவிடும் பெரும் பர்வதம். காட்டாற்று வெள்ளத்தால் மலையை வெல்ல முடியவில்லை.
தோற்று நிற்கும் நதி இரண்டாகக் கிளைவிடுகிறது. சேற்று நீர் கலந்த காட்டாற்று வெள்ளம் ஒருபுறம். தெளிந்த நீரோட்டம் மறுபுறம். இன்றைய தினத்தில் பாகிஸ்தானின் அரசியல் நிலைவரத்தை விளக்குவதற்கு இதனை விடவும் சிறந்ததொரு உதாரணம் இருக்க முடியாது. 1999ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பாகிஸ்தானின் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தை நதி யாகக் கருதினால், அதில் கலந்த காட்டாற்று வெள்ளமாக இராணுவ அரசியல் சதிப்புரட் சியைக் கருதலாம்.
அமெரிக்கா என்ற இயக்க சக்தி வலு சேர்க்க, காட்டாற்று வெள்ளத்தில் ஜனநாயக அரசியல் கட்சிகளும் அடித்துச் செல்லப்பட்டன. எதிர்நீச்சல் போடும் சக்தி அவற்றுக்கு இருக்கவில்லை.
தேர்தலின் வடிவில் மக்கள் சக்தி என்ற மலை குறுக்கே நின்றபோது அமெரிக்காவின் இயக்க சக்தியுடன் இயங்கிய இராணுவ ஆட்சி என்ற காட்டாற்றின் வேகம் தடைப்பட்டது. அது இரண்டாக கிளைவிட்டது.
அதில் ஒரு கிளையை அமெரிக்காவினதும், ஜனாதிபதி பர்வஸ் முஷாரப்பினதும் கூட்டணியாக வர்ணிக்கலாம். மறு கிளையை பெனாஸிர் பூட்டோ, நவாஸ் ஷெரீப் ஆகியோரது கட்சிகளின் புதிய கூட்டமைப்பாக குறிப்பிடலாம்.
கடந்த வாரம் முழுவதும் இந்தக் கிளை நதிகளின் திசையை மாற்றும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கலங்கல் நதி தூய நீரோட்டத்தை தன்னுள் ஈர்த்துக் கொள்ள முயன்று தோல்வியைத் தழுவியது.
கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி கூட்டமைப்பின் சார்பில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார், பெனாஸிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த யூஸூப் ராஸா கிலானி.
முஷாரப்பின் ஆட்சிக்காலத்தில் ஐந்தாண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த அரசியல் பகையாளியான கிலானி. அவருக்கு முஷாரப்பே சத்தியப்பிரமாணம் செய்து வைத்த சுவாரஷ்ய சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை அரங்கேறியது.
புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைத்து நடக்கத் தயாரென முஷாரப் தெரிவித்தார். அதற்குப் பதிலடி கொடுத்த கிலானி, ஆட்சியில் மாற்றமொன்று தேவை என்பதற்காகவே மக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள் என்றார்.
தொலைபேசி மூலம் கிலானிக்கு வாழ்த்துச் சொல்வதன் மூலம் அவரது தரப்பை தம்பக்கம் ஈர்த்துக் கொள்ள முனைந்தார், அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யு புஷ். அவருக்கும் சாதகமான பதில் கிடைக்கவில்லை. பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது அதிபர் புஷ்ஷின் நோக்கமாக இருந்தது. ஆனால், பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடர்பில் பரந்த அணுகுமுறை அவசியமென்றார்
கிலானி. இஸ்லாமாபாத் சென்ற அமெரிக்க இராஜதந்திரிகள் இருவர் நவாஸ் ஷெரீப்பை சந்தித்தார்கள். தமக்கு முஷாரப் செய்த உதவிகளை பாகிஸ்தானின் புதிய அரசாங்கம் தொடர வேண்டுமென வலியுறுத்துவது அவர்களின் நோக்கம்.
ஆனால், முஷாரப்பின் ஒருதலைப்பட்சமான பயங்கரவாத தடுப்புக் கோட்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படுமென்றார் நவாஸ். இனிமேல் அரசாங்கம் பாகிஸ்தானின் தேவைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்துமென அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தானில் தலைதூக்கிய கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டிய தேவையை தாம் உணர்ந்தபோதும், தமது நாடு கொலைக் களமாக மாறுவதை விரும்பவில்லை என்ற ரீதியில் சற்று காரசாரமாகவே பேசினார் நவாஸ்.
ஜனாதிபதி முஷாரப்பின் ஆட்சி முறையில் மாற்றம் தேவையென்ற ரீதியில் பிரதமர் கிலானி பேசியபோது, முஷாரப் பதவியில் இருந்து விலக வேண்டுமென வெளிப்படையாகவே சொன்னார் நவாஸ். இந்த அரசியல்வாதிகளின் கருத்துக்கள் தற்போது மக்கள் மத்தியில் நிலவும் பொதுவான எண்ண ஓட்டத்தைப் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தன என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
செப்ரெம்பர்11 தாக்குதலைத் தொடர்ந்து, அல்கொய்தா, தாலிபான் அங்கத்தவர்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்த பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கு பாகிஸ்தான் ஜனாதிபதியே உறுதுணையாக திகழ்ந்தார். ஜனாதிபதி முஷாரப் நாட்டு நலன்களை விடவும் பயங்கரவõதத்திற்கு எதிரான போரின் மீது அதிக அக்கறை காட்டினார், இந்தப் போர் தான் பாகிஸ்தானில் தற்போது தலைவிரித்தாடும் கிளர்ச்சிக்குக் காரணமென்ற கருத்து நிலவுகிறது. மறுபுறத்தில், அமெரிக்காவும், பிரிட்டனும் ஆப்கானிஸ்தானில் தவறிழைத்ததால், ஆப்கானின் கிளர்ச்சி பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்திற்குப் பரவியதாக பாகிஸ்தான் மக்களில் ஒருசாரார் கருதுகிறார்கள். பாகிஸ்தானின் வட÷மற்கு எல்லைப்புற மாநிலத்தில் சமீபகாலமாக வன்முறைகள் மிகவும் தீவிரம் பெற்றிருக்கின்றன. இந்த ஆண்டில் மட்டும் இங்கு கிளர்ச்சி சார்ந்த வன்முறைகளால் 600இற்கு மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கிறார்கள். இந்தப் பகுதியில் அமெரிக்காவின் மூலோபாயத்தை தொடர்ந்து அனுசரிக்கும் பட்சத்தில், வன்முறைகள் மிகவும் தீவிரமடைந்து அவை நாட்டின் ஏனைய பாகங்களுக்கும் பரவக் கூடுமென்பதை கிலானி முதலானோர் அறிந்திருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் பரந்த அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்திய கிலானி, அரசியல் தீர்வு முயற்சிகள் பற்றியும் பேசியிருக்கிறார். கிளர்ச்சியாளர்களுடன் பேசும் எண்ணமும் அவருக்கிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவைப் பொறுத்தவரையில், அந்நாட்டின் தலைவர்கள் பாகிஸ்தானில் என்ன நடந்தாலும் பரவாயில்லை, சர்வதேச பயங்கரவாதிகள் ஒழிந்தால் போதும்,என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே செயற்படுகின்றனர். பாகிஸ்தானில் நிலைநாட்டப்பட்டுள்ள அமெரிக்கப் படைகள் கடந்த வியாழக்கிழமை நாட்டின் வடமேற்குப் பகுதியில் ஒருதலைப்பட்சமாக கிளர்ச்சி அமைப்புக்கள் மீது தாக்குதலை நடத்தியிருக்கின்றன. பாகிஸ்தானின் புதிய தலைவர்கள் வடமேற்குப் பிரதேசத்தில் நிலைநாட்டப்பட்டுள்ள துருப்புக்களை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தக் கூடுமென அஞ்சியே அமெரிக்கப் படைகள் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டதாகத் தெரிகிறது. எது எவ்வாறானபோதிலும், கடந்த பொதுத் தேர்தலின் ஊடாக தமது விருப்பத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் மக்களது ஆணையை அமெரிக்கா மதிக்கவில்லை என்பதையே இந்தத் தாக்குதல்கள் காட்டுகின்றன.
இதுவரை காலமும் அமெரிக்காவையே நம்பியிருந்த ஜனாதிபதி புஷ் தற்போதாவது யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமெனவும், அவர் தாம் சென்ற திசையை மாற்றி பிரதான அரசியல் நீரோட்டத்துடன் இணைந்து கொள்ள வேண்டும். பாகிஸ்தானின் புதிய தலைவர்கள் மக்கள் தமக்களித்த ஆணையை சரிவர நிறைவேற்றுவது அவசியம். அத்துடன், தம்முள் பிளவுபட்டு அந்தப் பிளவிற்குள் வெளிச்சக்திகள் நுழைந்து விடாமல் பார்த்துக் கொள்வதும் முக்கிய தேவை.
Sunday, March 30, 2008
பாகிஸ்தானின் புதிய அரசாங்கமும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரும்
Sunday, March 30, 2008
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.