Thursday, March 20, 2008

போர் நீடித்தால் சிறிலங்காப் படையினரின் உளவுரண் பாதிக்கப்படும்: முன்னாள் சிறிலங்கா இராணுவத் தளபதி ஜனக பெரேரா

[வியாழக்கிழமை, 20 மார்ச் 2008]


போர் நீடித்தால் சிறிலங்காப் படையினரின் உளவுரண் பாதிக்கப்படும் என்று முன்னாள் சிறிலங்கா இராணுவத்தின் ஆளணிகளின் பொறுப்பு அதிகாரியும், தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜனக பெரேரா கூறியுள்ளார்.

இது தொடர்பில் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே லீடரர்" ஆங்கில வார ஏட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்:

கேள்வி: கிழக்கை மீட்டெடுத்த போது காணப்பட்ட அதே உத்வேகம் வடக்கை மீட்டெடுக்கும் போர் முன்நகர்வுகளில் காணப்படவில்லை. இதற்கான பிரதான காரணமாக நீங்கள் எதனைக் கருதுகின்றீர்கள்?

பதில்: கிழக்கு எப்போதும் விடுதலைப் புலிகளின் பலம் பொருந்திய கோட்டையாக காணப்படவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி செய்த 1992 ஏப்ரல் 22 முதல் 1993 செப்ரெம்பர் வரையான காலப்பகுதியில் நாங்கள் கிழக்கை மீட்டெடுத்தோம்.

ஏனெனில் அந்த இராணுவ நடவடிக்கைகளின் போது சிறப்பு நடவடிக்கை தளபதியாக பணியாற்றினேன்.

நாங்கள் முக்கியமான கிழக்குத் தலைவர்களை வெளியேற்றினோம்.

கருணா, பதுமன் மற்றும் பிள்ளையான் போன்றோர் வன்னிக்கு தப்பியோடினர்.

ஒக்ரோபர் மாதம் எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி தேர்தல்களை நடத்தினோம். படையினரையும், சிறிலங்கா காவல்துறையினரையும் தவிர வேறு எவரும் ஆயுதம் தரித்திருக்கவில்லை.

அதன் பின்னர் 1994 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலையும், அதே ஆண்டின் நவம்பர் மாதம் அரச தலைவர் தேர்தலையும் வெற்றிகரமாக நடாத்தினோம்.

இதனை உற்று நோக்கினால் வன்னியில் புலிகளுக்கு இருக்கும் செல்வாக்கு எப்போதும் கிழக்கில் காணப்படவில்லை என்பது புலனாகும்.

வன்னியில் போர் முன்நகர்வுகளை மேற்கொள்வதில் ஏற்படும் தாமத்திற்கு காரணம் அங்கு புலிகள் மிக வலுவாக தம்மை நிலைப்படுத்திக் கொண்டுள்ளனர். அநேகமான முக்கிய படையணிகள் வன்னியை மையமாகக் கொண்டுள்ளது.

இம்ரான் - பாண்டியன், சார்ள்ஸ் அன்ரனி, அகிலா போன்றப் படையணிகளைக் குறிப்பிடலாம்.

மேலும், அநேகமான தன்னார்வப் படையணிகளும் வன்னியில் காணப்படுகின்றன. உதாரணமாக இளைய படை, மக்கள் படை மற்றும் வீட்டுக் காவல் படையணிகளைக் குறிப்பிடலாம். இந்த வலுவான அமைப்பு கிழக்கில் புலிகளுக்கு இல்லை. வன்னியைப் பொறுத்த மட்டில் அவர்கள் மிகவும் வலுவான பலம்பொருந்திய நிலையில் காணப்படுகின்றனர்.

இதனால், சற்றுக் கால தாமதம் ஏற்படும். அது நீண்ட காலமாக இருக்கலாம். பத்திரிகைகளின் மூலம் நான் அறிந்த விடயங்களின்படி நாங்கள் 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வன்னியில் போர் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.

கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் முடிவடைந்துள்ளன. இதுவொரு நீண்டகாலமாகும். இதன் மூலம் வன்னிப் போராட்டம் அவ்வளவு இலகுவானதல்ல என்பது புலனாகிறது.

மேலும், ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கைகளை நினைவுபடுத்தினால் 1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்த இராணுவ நடவடிக்கைள் தொடங்கின. 1999 ஆண்டுவரை தொடர்ந்து.

கேள்வி: தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் எனவும், சுமார் 3,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்படுவார்கள் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். அடுத்த தலைமுறைக்கு இந்தப் போரை கொண்டு செல்ல மாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். இதுவரையில் 2,000 விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி எதிர்வரும் மே மாதமளவில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்க முடியுமா?

பதில்: பாதுகாப்பு அமைச்சின் தகவல்களின் அடிப்படையில் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் முதல் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் நாள் வரையில் 7,152 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜனவரி முதலாம் நாள் முதல் பெப்ரவரி 18 ஆம் நாள் 1,609 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

MCNS இன் தகவல்களுக்கு அமைய 1,663 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் புள்ளி விபரங்களுக்கு இடையில் முரண்பாடு காணப்படுகிறது. இந்தப் புள்ளி விபரங்கள் நம்பத்தகுந்தவை என்றால் போர் வெகுவிரைவில் முடிவடையும்.

இந்தப் புள்ளி விபரத் தரவுகளில் பல்வேறு முரண்பாடுகள் காணப்படுகின்றன. நாங்கள் போர்க்களத்தில் இருக்கும் போது அமைச்சர்களும், முக்கிய அதிகாரிகளும் போலியான தகவல்களை வெளியிடுவதனை பார்த்திருக்கிறோம். இம்முறை அவ்வாறானதொரு நிலைமை இருக்காது என நான் வேண்டிக்கொள்கிறேன்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டதனைப் போன்று சில தகவல்கள் 7,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன. அது உண்மையானால் மிக இலகுவாக போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும். 1,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் மாத்திரமே இன்னமும் எஞ்சியிருக்க வேண்டும்.

எனினும், என்னுடைய கருத்துப்படி, வலிமை மிக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள் இதுவரையில் போர்க்களத்தில் குதிக்கவில்லை. என்னுடைய அனுமானம் சரியாயின் இந்தப் போர் இன்னும் சில காலத்திற்கு நீடிக்கும். முன்னாள் ஜெனரல், நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் பற்றுடைய ஒரு நபர் என்ற ரீதியில் நான் உண்மையாக எமது படைத்தரப்புக்கு மே மாதமளவில் போரை முடிவுக்குக் கொண்டுவர வாய்ப்பு கிட்ட வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

அவ்வாறு இல்லாது இந்த போர் நீடித்தால் அது அனைவருக்கும் பாதிப்பாக அமையும். குறிப்பாக படை வீரர்களை அது வெகுவாக பாதிக்கும்.

கேள்வி: அரசாங்கத்தரப்பின் தந்திரோபாயங்களில் ஏதாவது குறைபாடுகளை நீங்கள் நோக்குகின்றீர்களா? தற்போது இன்னும் ஒன்றரை வருட காலம் போரை முடிக்கத் தேவை என்று குறிப்பிடுகின்றார்கள். இவ்வாறு போரை முடிவுக்குக் கொண்டுவரும் காலக்கெடு மாற்றியமைக்கப்படுவது எவ்வாறு போர்க்களத்தில் போராடும் சாதாரண படைவீரனை எந்தளவிற்கு பாதிக்கும்?

பதில்: நீண்டகாலம் போர்க்களத்தில் போராட்டத்தை முன்னெடுத்த ஒரு உயர் அதிகாரி என்ற வகையில் நான் இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். போர் இழுத்தடிக்கப்பட்டால் இரண்டு விடயங்கள் நிகழும். தற்போது இலங்கையில் இரண்டு நெருப்புகள் கொழுந்து விட்டு எரிகின்றன. ஒன்று போர் முனையின் போர் நெருப்பு மற்றையது வயிற்றுப் பசியால் ஏற்படும் நெருப்பு. போர்க்களத்தில் காட்டப்படும் அதீத சிரத்தை வயிற்றுப் பசிக்கு வழிகோலும். இந்த நிலைமை யுத்த நெருப்பை பாதிக்கும். இந்த இரண்டு நிலைமைகளையும் சமமான முறையில் பேணப்பட வேண்டும்.

போர் நீடித்தால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படலாம். 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2008 பெப்ரவரி வரை போர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்தப் போர் நீடிக்க, நீடிக்க படைவீரர்கள் உடல் மற்றும் உள ரீதியாக பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாக்கப்படுவர். இந்த இரண்டு பிரச்சினைகளுடன் வீட்டுப் பிரச்சினைகளும் சேர்ந்து படைவீரர்களை மிக அழுத்தமாக பாதிக்கும்.

இந்த நிலைமைகளின் கீழ் போர்க்கள நடவடிக்கைகளை முன்னெடுத்தால் படைவீரர்கள் பூரண கவனத்தை போரின் மீது செலுத்த முடியாத நிலை தோன்றும். இதன் மூலம் படைவீரர்கள் அழுத்தங்களும், சுமைகளும் நிறைந்த நபராக மாறக்கூடும்.

வன்னிப் போர்கள முன்நகர்வுகளை வன்னிப் பிரதேசத்திற்கு மட்டும் வரையறுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. கொழும்பிலும் தெற்கிலும் குண்டுவெடிப்புக்கள் உள்ளிட்ட பல சம்பவங்கள் நிகழ்கின்றன. இது பரவக்கூடிய சாத்தியம் உள்ளது. இந்த நிலைமை மிக நிதானமாக நோக்கப்பட வேண்டிய நிலையாகும்.

இராணுவத் தளபதி மே மாதமளவில் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என உறுதியாக சூளுரைத்துள்ளதாக நான் கேள்விப்பட்டேன். இந்தக் காலக்கெடு எல்லோருக்கும் நன்மை தரக்கூடியது. குறிப்பாக போரினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட படை வீரர்களுக்கு இது அதிக நன்மை பயக்கும்.

எனினும், இப்போது எவரேனும் இன்னும் ஒன்றரை வருடம் போரை முடிவுறுத்த கால அவகாசம் தேவை எனக் குறிப்பிட்டால் அது படை வீரர்களின் உடல் உள நிலைமைகளை அபரிமிதமாக பாதிப்பதுடன், பொருளாதார சுமையும் வெகுவாக அதிகரிக்கும்.

கேள்வி: இராணுவத்தினர் விதித்த காலக்கெடு எந்தளவுக்கு யதார்த்தமானது? உங்கள் காலத்தில் இராணுவ அதிகாரிகளா அல்லது அரசியல் தலைமைத்துவங்களா இவற்றைத் தீர்மானித்தன?

பதில்: ஈராக் மீது அனைத்துலகப் படைகள் தரைவழி, வான்வழி மற்றும் கடல் வழித் தாக்குதல்களை மேற்கொண்ட போது காலக்கெடு விதித்ததாக எனக்கு நினைவில்லை. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்றே அவை தெரிவித்தன. எந்தவித காலக்கெடுவையும் விதிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த போதும் அவை காலக்கெடு எதனையும் விதிக்கவில்லை.

காலக்கெடு விதிப்பது யதார்த்தத்திற்கு ஒவ்வாத நிலையாகும். உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் காலஞ் சென்ற முன்னாள் அரச தலைவர் ரணசிங்க பிரமேதாச நடவடிக்கைகளை முன்னெடுக்க உத்தேசித்த போது, படைத்தரப்பு அதிகாரிகள் மற்றும் அரச தலைவரின் ஆலோசகரும் இணைந்து இரண்டு மாதக் காலக்கெடுவை விதித்தனர். அந்த சந்தர்ப்பத்தின் போது நான் தனித்து இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.

நாங்கள் ஒரு இரண்டு வருட காலத்தில் இதனை மேற்கொள்ள முயற்சிக்கலாம் என தெரிவித்தேன். உண்மையில் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கைகள் 1993 ஆம் ஆண்டு செரெம்பர் மாதமே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. எங்கள் நிலைகளைத் தக்க வைத்துக்கொள்ள போதியளவு கால அவகாசம் காணப்பட்டது.

எமது தரப்பு இலப்புக்களை குறைத்து, எதிரிகளின் இழப்புக்களை அதிகரிக்கக் கூடியதாக இருக்கும்.

இதேபோன்று, போர் முன்நகர்வுகள் நீடிக்கப்பட்டால் உயிர்ச் சேதங்களும் அதிகரிக்கும்.

கடந்த மாதம் 104 படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன், 882 பேர் காயமடைந்துள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளதாக நான் பத்திரிகைகள் வழியாக அறிந்து கொண்டேன். இது ஒரு மாதத்திற்கான புள்ளி விபரம். அப்படியானால் 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை எத்தனை உயிர்கள் பலியாகியிருக்கும், உண்மையில் இது நோக்கப்பட வேண்டிய ஒன்று.

எங்களது பிரதான இராணுவச் சொத்து முப்படைகளும், காவல்துறையினரும் என்பதனை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

வெறும் ஆயுதங்களை நம்பி நாம் போர் செய்ய முடியாது. படைத்தரப்பிற்கு பாரதூரமான இழப்புக்கள் ஏற்பட்டிருப்பதாக அமைச்சரின் அறிக்கை மூலம் தெரியவருகிறது. எனவே இந்தப் போர் நீடிக்கப்பட்டால் அது பாதாகமான சூழ்நிலையை தோற்றுவிக்கும். இந்தப் போர் முடிவுக் காலம் யதார்த்தத்திற்கு புறம்பானதொன்று.

செப்ரெம்பர் மாதமளவில் காலநிலை மாற்றங்கள் ஏற்படும். காலநிலைக் காரணிகளும் துருப்பினரை பாதிப்படையச் செய்யும். குறிப்பாக மலேரியா போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். போர் நீடிக்கப்பட்டால் இந்த நிலைமைகளுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியேற்படும்.

போரை முன்னெடுப்போம் என்று கூறுவது மிக இலகுவான காரியம். எனினும், போர்க்களத்தில் போராடிய ஒருவன் என்ற வகையில் அது எவ்வளவு கடினமான காரியம் என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

உண்மையில் விடுதலைப் புலிகள் இந்தப் போரை நீடிப்பது ஒரு போர் தந்திரோபாயமாகும். இந்த நிலைமை விடுதலைப் புலிகளுக்கு சாதகமாக அமையும்.

கேள்வி: கடந்த பெப்ரவரி மாதத்தில் நீங்கள் குறிப்பிட்டதனைப் போன்று அரசாங்கத் தரப்பு புள்ளி விபரங்களிலிருந்து 900-க்கும் அதிகமான படையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். இராணுவ வெற்றிகள் குறித்து எதிர்வுகூறல்கள் அவ்வளவு மெய்பாடுடையதாக அமையவில்லையா?

பதில்: இராணுவ உத்திகள் பற்றியோ தந்திரோபாயங்கள் பற்றியோ எனக்குத் தெரியாது. நான் நினைக்கின்றேன் அவர்கள் அதனை மிக இரகசியமாக பாதுகாப்பார்கள். எனினும், யுத்த முடிவுக்கான காலக்கெடு அடிக்கடி மாற்றப்பட்டால் அது சாதகமான நிலையாக அமையாது.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து விட்டோம் என்று வைத்துக்கொள்வோம். அடுத்தது என்ன? நாட்டிற்கு சமாதானத்தைப் பெற்றுக்கொடுக்காத போர் வெற்றியின் பயன் என்ன? இராணுவ வெற்றியின் மூலம் சமாதானம் நிலைநாட்டப்பட வேண்டும். அவ்வாறு இருந்தால் மாத்திரமே போர் முன்நகர்வின் பூரணப்படுத்தப்பட்டதொன்றாக அமையும்.

உதாரணமாக அமெரிக்கத் துருப்பினர்கள் ஈராக்கிற்குச் சென்றனர் எனினும் தற்போது அங்கு பல்வேறு குழப்ப நிலைமைகளே எஞ்சியுள்ளன. ஆயுதம் ஏந்ததோருக்கு எம்மிடம் தீர்வுகள் இல்லையென்றால் மாவீரர் குடும்பங்கள் உயர்வாக போற்றப்படும். இந்த நிலைமை வேறு சில பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக்கூடும்.

1971 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி முற்றாக அழிக்கப்பட்டதாக கருதப்பட்டது. எனினும், 1989 ஆம் ஆண்டு ஒரு புதிய சக்தியுடன் மக்கள் விடுதலை முன்னணியினர் களமிறங்கினர்.

கேள்வி: நீங்கள் தற்போது போரினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறிப்பிட்டீர்கள். அரசாங்கம் தற்போது 13 ஆவது திருத்தம் தொடர்பாக கவனம் செலுத்தி வருகிறது. இந்த தீர்வுத் திட்டம் பொருத்தமானதாக அமையும் என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: பத்திரிகைகளின் மூலம் நான் வாசித்த தகவல்களின் படி, மகிந்தவின் 13 ஆவது திருத்த யோசனை முதல் கட்ட நடவடிக்கையாகும். 20 ஆண்டுகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட தீர்வுத் திட்டம் இப்போது உசிதமானதாக அமையாது.

நாங்கள் பயங்கரவாத கிளர்ச்சியாளர்களுடன் போராட்டம் நடாத்துகின்றோம் என்பதனை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு பலமான மக்கள் ஆதரவு காணப்படுகிறது. மக்கள் எமது தீர்வுத்திட்டங்கள் தொடர்பாக நம்பிக்கை கொண்டால் பயங்கரவாதிகளுடனான போராட்டம் இலகுவானதாக அமையும்.

எனினும், மக்கள் ஆதரவு இருக்கும் வரை இந்தப் போர் கடினமான போக்கையே காட்டி நிற்கும்.

13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படுமா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. எனினும், சரியான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தத் தீர்வுத் திட்டங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியமான ஏதுவாக அமைய வேண்டும்.

கேள்வி: காணாமல் போனோர் தொடர்பான புள்ளி விபரங்கள் அரசாங்கத்தின் தரவுகளில் உள்ளடக்கப்படாமை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: இதுவொரு முக்கியமான பிரச்சினை. யாராவது ஒருவர் காணாமல் போனால் அவரது குடும்பத்தினருக்கு அது ஒரு பாரிய துயரமாகும். இதன் மூலம் காயமடைந்த அல்லது கொல்லப்பட்டவர்களின் துயரம் குறைவானது என்று அர்த்தப்படாது.

எனது மைத்துனர்கள் இருவர் மற்றும் மைத்துனியின் கணவர் ஆகியோர் போர்க்களத்தில் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் சோகங்களுக்கு ஒரு முடிவு காணப்பட்டது. அவர்கள் ஆறுதலடையக்கூடிய வகையில் உடல்கள் கிடைக்கப்பெற்றன. எனினும் காணாமல் போனோரின் குடும்ப நிலைமைகள் மிகவும் வேதனைக்குரியதாக அமையும் அவர்களின் ஒவ்வொரு விடியலும் வேதனையுடனேயே தொடங்கும்.

ஒருவர் கொலை செய்யப்பட்டு பூதவுடல் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் அந்த துயரத்திற்கு ஒரு முடிவு இருக்கும். உண்மையில் மரணம் தாங்கிக்கொள்ள முடியாத துயரம் என்பதை மறுப்பதற்கில்லை. எனினும், காணாமல் போனோரின் குடும்ப நிலைமைகள் ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்பு கலந்த வேதனையுடன் தொடர்ந்து கொண்டே இருக்கும் என்பதனையே நான் இங்கு குறிப்பிட முயற்சிக்கின்றேன்.

கேள்வி: சில காணாமல் போதல் சம்பவங்கள் இராணுவத்திலிருந்து தப்பியோடியதாக கருதப்படுகின்றது என குறிப்பிடப்படுகின்றது?

பதில்: நான் அவ்வாறு நினைக்கவில்லை. காணாமல் போன ஒருவரை தப்பியோடியதாக கருதினால் அவரது சம்பளங்கள் ஏனைய கொடுப்பனவுகள் நிறுத்தப்படும். அதாவது படைவீரர் ஒருவர் தப்பியோடியதாக காட்டப்பட்டால் அவரது முழுக் குடும்பமுமே பாதிக்கப்படும.

கேள்வி: உங்களிடம் இது தொடர்பான தரவுகள் ஏதும் உள்ளனவா? படையிலிருந்த தப்பியோடுபவர்களினால் போர் முன்நகர்வுகளுக்க எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படக்கூடும்?

பதில்: என்னிடம் தரவுகள் எதுவுமில்லை. எனினும், போர் நீண்டுகொண்டு சென்றால் இந்த நிலைமை அதிகரிக்கக்கூடிய அபாயம் நிலவுகிறது. 1999 ஆம் ஆண்டில் போர் நீடிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் தப்பியோடும் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்றன.

நீங்கள் ஒரு படைவீரர் என்று வைத்துக்கொள்வோம். போர் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டால் உங்களுக்குள் இருக்கும் உத்வேகமும், ஆற்றலும் வெகுவாக குன்றக்கூடிய நிலைமையை தவிர்க்க முடியாது.

கேள்வி: போர் முன்நகர்வுகளின் காரணமாக இராணுவத் தரப்பிற்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக விளங்குகிறது. பல இழப்புக்களைத் தாண்டி கைப்பற்றப்படும் நில எல்லைகள் எவ்வளவு முக்கியத்துவமாக காணப்படும்?

பதில்: முதலாவதாக நீண்டகாலப் போர் எங்களுக்கு பாதகமான நிலைமையை தோற்றுவிக்கும். குறிப்பாக எப்போதும் நாம் குறைந்தளவு இழப்புக்களுடன் எதிரிகளை அழித்தொழிக்க முயற்சிக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் போர் முன்நகர்வுகளில் பாதகமான விளைவுகளே எஞ்சி நிற்கும்.

கேள்வி: இரண்டு விதமான விடயங்களை போரின் போது கைப்பற்ற முடியும். முதலாவது வெறும் நிலப்பரப்புக்களை கைப்பற்றல் மற்றையது சிவில் மக்களை பாதுகாத்தல். உண்மையில் வெற்று நிலங்களை கைப்பற்றுவதனுடாக எவ்வித பயனும் கிட்டப் போவதில்லை.

கேள்வி: யாழ்ப்பாண தீபகற்பத்தின் தற்போதைய நிலையை எவ்வாறு நீங்கள் உணர்கின்றீர்கள்?

பதில்: முகமாலையிலிருந்து தென்மராட்சி வரை எமது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. வடமராட்சியிலிருந்து நாகர்கோவில் வரையிலும் எமது காட்டுப்பாடு நிலவுகிறது. வலிகாமம், கைதடி, மண்டைதீவு என்பவற்றின் கட்டுப்பாட்டை முழுமையாக எமது இராணுவத்தினர் கொண்டுள்ளனர்.

அங்குள்ள மக்கள் சந்தோசமாக வாழ்கிறார்களா என்பது குறித்து என்னால் கருத்து தெரிவிக்க முடியாது. ஏனெனில் நான் இராணுவத்திலிருந்து விலகியதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யவில்லை.

கேள்வி: கிழக்கு இராணுவப்படைத் தளபதி மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த நிலைமை இராணுவத்தில் முரண்பாடுகளை தோற்றுவிக்குமா?

பதில்: இராணுவ அதிகாரியாக இருந்தாலும், படைவீரராக இருந்தாலும் இராணுவச் சட்டங்கள் ஒரே மாதிரி நடைமுறைப்படுத்தப்படும். மக்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலேயே நீதிமன்றததை நாடுகின்றனர்.

உயர் அதிகாரியொருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பல பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். படையதிகாரி என்பவர் சீருடையணிந்த படையினரின் தந்தை நிலையில் வைத்துப் போற்றப்படக்கூடியவர். எனவே அவருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் பல்வேறு சிக்கல்களை தோற்றுவிக்கக்கூடும்.

கேள்வி: மேஜர் பராக்கிரம பன்னிப்பிட்டியவின் உடனடியாக கொழும்பு தலைமையகத்திற்கு மாற்றப்பட்டார். பல்லாயிரக்கணக்கானோரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கருணாவிற்கு பிரபுக்கள் சலுகை வழங்கப்பட்டிருப்பதனையும் எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில்: இவை இரண்டும் இருவேறு நிலைமைகள். கருணாவின் நிலைமை ஒரு அரசியல் இராஜதந்திரம். சிலர் அவர் வெளிநாடு செல்ல உதவி செய்துள்ளனர்.

எனினும், பராக்கிரம பன்னிப்பிட்டியவின் நிலை தனிப்பட்டதொன்று இவை இரண்டையும் இரு வேறு சம்பவங்களாக நோக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.