Thursday, February 14, 2008

புலிகளின் பிரதேசங்களை நோக்கி படையினரால் முன்னேற முடியவில்லை - ஏ.எஃப்.பி

[வியாழக்கிழமை, 14 பெப்ரவரி 2008]

வன்னியில் விடுதலைப் புலிகளின் பிரதேசங்களை நோக்கிய மும்முனை ஆக்கிரமிப்புத் தாக்குதலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ள போதிலும், விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதல் காரணமாக படையினரால் முன்னேற முடியவில்லை என ஏ.எஃப்.பி செய்திச்சேவை செய்தியறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மன்னார், மணலாறு களமுனைகளில் கடந்த மூன்று நாட்களாக படையினர் மேற்கொண்ட படை நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளாக படைத் தரப்பு தெரிவித்துள்ள போதிலும், மன்னார் பாலக்குழியில் நேற்றைய தாக்குதலில் மட்டும் 42 படையினர் கொல்லப்பட்டுள்ளதாவும், 53 படையினர் காயமடைந்துள்ளதாவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர் ஏ.எஃப்.பி கூறுகின்றது.

இந்த ஆண்டில் 1,198 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், தமது தரப்பில் 70 படையினர் மட்டுமே பலியானதாகவும் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ள போதிலும், இதனை சுயாதீனமாக அறிந்துகொள்ள ஊடகவியலாளர்களுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும் மோதல் பகுதிகளுக்குச் செல்ல அரசினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் ஏ.எஃப்.பியால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான சிங்கள வாரப் பத்திரிகையான லக்பிமவிற்கு செவ்வி வழங்கிய சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, விடுதலைப் புலிகள் ஒரு ஓழுங்கமைப்பட்ட மிகவும் அனுவம் வாய்ந்த அமைப்பு எனவும், பல ஆயிரம் போராளிகள் அவர்களிடம் இருப்பதாகவும், எனவே விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதற்கான கால வரையறையை தன்னால் வழங்க முடியாதிருப்பதாகத் தெரிவித்திருந்ததையும் ஏ.எஃப்.பி தனது செய்தியில் கூறியுள்ளது.

அது மட்டுமன்றி 25 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் போரை மார்ச் மாதத்தில் முடிவுக்கு கொண்டுவர முடியுமா எனவும், சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா இந்த செவ்வியில் கேள்வி எழுப்பியிருந்தார்.

விடுதலைப் புலிகளிடம் 3,000 முதல் 5,000 வரையிலான போராளிகள் மட்டுமே இருப்பதாகவும், ஆறு மாதங்களுக்குள் விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட முடியும் எனவும், இந்த வருட ஆரம்பத்தில் சிறீலங்காப் படைத்தலைமை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.