[ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2008] கடந்த வாரம் கொண்டாடப்பட்ட சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் பெரும் அச்சங்கள் மற்றும் பதற்றங்களின் மத்தியில் கொண்டாடப்பட்டதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. அந்த வார ஏட்டின் பாதுகாப்புப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: சிறிலங்காவின் 60 ஆவது சுதந்திர நாள் கொண்டாட்டங்களுக்கு முதல் நாள் படையினரின் புலனாய்வுத்துறையினர், விடுதலைப் புலிகளின் தகவல் பரிமாற்றங்களை ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்பு பரிமாற்றங்கள் திடீரென அமைதியாகி விட்டன. இது படையினரை திசைதிருப்பும் உத்தியா அல்லது நகரத்தில் இயங்கிவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தமது தொலைத்தொடர்பு பரிமற்றங்களை இடையில் திடீரென நிறுத்திக்கொள்ளும் அனுபவங்களை உடையவர்களா என்பது தொடர்பான குழப்பங்கள் படையினர் மத்தியில் எழுந்திருந்தன. என்ன நடந்தது என்பது தொடர்பாக யாருக்கும் எதுவும் தெரியவில்லை. எனினும் சுதந்திர நாளன்று கொழும்பில் பெரும் தாக்குதல் ஒன்று நடைபெறலாம் என புலனாய்வுத்துறை அரசாங்கத்தை எச்சரித்திருந்தது. அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரும் கற்பிட்டிப் பகுதியில் தற்கொலைக்குண்டு அங்கிகள் சிலவற்றை படையினர் மீட்டிருந்தனர். சுதந்திர நாளுக்கு இரு நாட்களுக்கு முன்னரும் வத்தளைப் பகுதியில் இரு தற்கொலை அங்கிகள் மீட்கப்பட்டிருந்தன. ஆனால் சுதந்திர நாள் நிகழ்வு நடைபெறுவதற்கு முதல் நாள் புறக்கோட்டை தொடரூந்து நிலையத்தின் மூன்றாவது நடைபாதையில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதுடன், பெருமளவானோர் காயமடைந்திருந்தனர். இத்தாக்குதலை நடத்திய பெண் சல்வார் அணிந்திருந்ததுடன், அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு அண்மையில் ஜஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மாத்தறை-வவுனியா தொடரூந்தில் வந்திருந்த அவர் நிலையத்தை விட்டு வெளியேறி தனது இலக்கை நோக்கிச்செல்ல முற்பட்டிருந்தார். எனினும் வாசலில் நடைபெற்ற பாதுகாப்பு சோதனைகளைத் தொடர்ந்து அவர் தனது திட்டத்தை மாற்றியிருந்தார். சாட்சிகளின் தகவல்களின் படி தாக்குதலாளி மிக அழகாக உடைகளை உடுத்தியிருந்தார். காவல்துறையினரின் புலனாய்வுப்பிரிவைச் சேர்ந்த காவல்துறை உறுப்பினர் ஒருவர், அவரைச் சோதனையிடும் நோக்கத்துடன் இரு பெண் காவலரை அழைத்துக்கொண்டு சென்ற சமயம் குண்டு வெடித்தது. அதனைத் தொடர்ந்து நிலையத்தில் இருந்த கடிகாரமும் 2.10 மணியில் தனது இயக்கத்தை நிறுத்திவிட்டது. அவரிடம் இருந்து மீட்கப்பட்ட அடையாள அட்டை போலியானது. அதில் வவுனியாவைச் சேர்ந்த நாகலப்பம் அனுசா, 1983 ஆம் ஆண்டு பிறந்தது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரின் இலக்கு நிலையத்திற்கு வெளியிலேயே இருந்தது. அது படையினரின் தொடரணியாகக் கூட இருந்திருக்கலாம். இத்தாக்குதல் பொதுமக்களிடம் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. தம்புள்ளப் பகுதியில் தாக்குதல் நடைபெற்ற 24 மணிநேரத்தில் இத்தாக்குதலும் நடைபெற்றதானது பெரும் பதற்றத்தை தோற்றுவித்திருந்தது. மேலும் பெப்ரவரி 3 ஆம் நாள் நள்ளிரவு கொழும்புத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு கப்பல்கள் துறைமுகத்திற்கு வெளியே கொண்டு செல்லப்பட்டன. படைத்துறை மற்றும் பொருளாதார இலக்குகளின் பாதுகாப்புக்களும் பலப்படுத்தப்பட்டன. பெப்ரவரி 4 ஆம் நாள் நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்த "தேசத்தின் மகுடம்" என்ற கண்காட்சியும் 7 ஆம் நாளுக்கு பிற்போடப்பட்டிருந்தது. சுதந்திர நாளன்று செல்லிடத் தொலைபேசிகளின் தகவல் பரிமாற்றங்களும் 6 மணி நேரங்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தன. விடுதலைப் புலிகளின் தகவல் பரிமாற்றங்களை நிறுத்தும் பொருட்டு இது மேற்கொள்ளப்பட்டிருந்தது. பின்னர் செக்கொஸ்லாவாக்கிய நாட்டுத் தயாரிப்பான டாங்கிகள், பல்குழல் உந்துகணை செலுத்திகள், வான்படை தாக்குதல் வானூர்திகள், கடற்படைக் கப்பல்கள் அணிவகுக்க சுதந்திர நாள் நிகழ்வு கொண்டாடப்பட்டது. விடுதலைப் புலிகளை தோற்கடிக்கப்போவதாக மகிந்த ராஜபக்ச இந்த நிகழ்வில் பேசிய போது தெரிவித்திருந்தார். எனினும் கொண்டாட்டங்கள் நடைபெற்ற சில மணிநேரங்களில் மற்றுமொரு பேரூந்து தாக்குதலுக்கு உள்ளாகியதுடன் அதில் இருந்த 15 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் 17 பேர் காயமடைந்திருந்தனர். கடந்த மாதம் இடம்பெற்ற தாக்குதல்களில் 68 படையினரும், 73 மக்களும் கொல்லப்பட்டதாகவும், 468 படையினரும், 110 பொதுமக்களும் காயமடைந்ததாகவும் பிரதமர் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். இதனிடையே கடந்த புதன்கிழமை அதிகாலை 53 மற்றும் 55 ஆவது படையணிகளைச் சேர்ந்த சிறப்புத் தாக்குதல் படையினர் முகமாலை, நாகர்கோவில் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இந்நடவடிக்கையில் புதிதாக உருவாக்கப்பட்ட கவசத்தாக்குதல் படையணியினரின் செக்கோஸ்லாவாக்கிய நாட்டுத் தயாரிப்பான டாங்கிகளும் பங்குபற்றியிருந்தன. எனினும் படையினர் பின்னர் தமது நிலைகளுக்கு திரும்பிவிட்டனர். இதற்கு முன்னர் இடம்பெற்ற தாக்குதல்களின் போதும் படையினர் தமது நிலைகளுக்கு பின்வாங்கியிருந்தனர். ஏனெனில் விடுதலைப் புலிகளின் பதுங்குகுழிகளின் அமைவிடங்கள் தொடர்பான துல்லியமான தகவல்கள் அவர்களின் பீரங்கிப் படையினருக்கு தெரியும். எனவே படையினர் அவர்களின் பதுங்குகுழிகளில் தங்க முடியாது. அதாவது அங்கு படையினர் தங்கினால் அவர்கள் விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதல்களில் இருந்து தப்பமுடியாத வாத்துக்கள் போலவே இருக்க நேரிடும். இதனிடையே மன்னார் களமுனைகளில் உள்ள படையினரின் 58 ஆவது படையணியினர் விடத்தல்தீவை நோக்கி நகரும் தமது திட்டத்தை கையாண்டு வருகின்றனர். எனினும் ஐந்து படையணிகளைச் சேர்ந்த படையினரின் மும்முனைத் தாக்குதல்களுக்கு விடுதலைப் புலிகள் கடுமையான எதிர்த்தாக்குதலை நடத்தி வருகின்றனர். மேலும் கடந்த புதன்கிழமை வட மேற்கு கடற்பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் இரு உட்கரையோர ரோந்துப் படகுகள், 400-க்கும் மேற்பட்ட இந்திய மீன்பிடிப்படகுகளை தமது ராடார்களில் அவதானித்துள்ளன. அதனைத் தொடர்ந்து அந்த படகுகளை அண்மித்த கடற்படைப் படகுகளின் மீது மூன்று தடவைகள் ஆர்பிஜி உந்துகணை தாக்குதல் நடத்தப்பட்டன. இத்தாக்குதலில் ஒரு படகு மூழ்கடிக்கப்பட்டது. அந்தப் படகில் இருந்த கடற்படையினரில் ஒருவர் காப்பாற்றப்பட்ட போதும் 7 பேர் காணாமல் போயுள்ளனர். இத்தாக்குதலைத் தொடர்ந்து மீன்பிடி படகுகள் இந்தியாவை நோக்கிச் சென்றுவிட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sunday, February 10, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.