[ஞாயிற்றுக்கிழமை, 03 பெப்ரவரி 2008] பெரியமடு மற்றும் தம்புள்ள பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் போர் உக்கிரமான இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதையே காட்டுகின்றன. ஆனால் இருபக்கமும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்புக்களும் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளன என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த வார ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்: கடந்த திங்கட்கிழமை (28) முற்பகல் 9:15 மணியளவில் ரஸ்யத் தயாரிப்பான அன்ரனோவ்-32 ரக வானூர்தி உயர் அதிகாரிகளுடன் பலாலியில் தரையிறங்க ஆயத்தமாகிய போது பீரங்கி எறிகணைகள் பலாலி தளத்திற்குள் வீழ்ந்து வெடிக்க ஆரம்பித்தன. யாழ். குடாநாட்டில் உள்ள படையினரின் தலைமையகம் பலாலித் தளமாகும். வானூர்தியில் இருந்த உயர் அதிகாரிகளில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஜபக்ச, இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, பாதுகாப்பு அமைச்சக தலைமை அதிகாரி ஏயர் மார்சல் டொனால்ட் பெரேரா ஆகியோர் இருந்தனர். புதிதாக உருவாக்கப்பட்ட கவசத்தாக்குதல் படையணியின் பதக்கம் அளிக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் அங்கு சென்றிருந்தனர். பூநகரியின் கல்முனையின் முனைப்பகுதியில் இருந்து இரு 130 மி.மீ பீரங்கிகள் மூலம் விடுதலைப் புலிகள் ஏவிய எறிகணைகளில் 15 எறிகணைகள் பலாலி தளத்திற்குள் வீழ்ந்து வெடித்திருந்தன. இத்தாக்குதலில் 55 ஆவது படையணியைச் சேர்ந்த படைச் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து பதில் தாக்குதல் நடத்தும் படி யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ உத்தரவிட்டிருந்தார். வான் படையின் வானூர்திகளும் தாக்குதலை நடத்தியிருந்தன. எனினும் விடுதலைப் புலிகள் தமது பீரங்கிகளை நகர்த்தியிருக்கலாம் என படையதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் தமது பீரங்கிகளை விரைவாக நகர்த்தும் திறன் கொண்டவர்கள். உழவு இயந்திரங்களின் உதவியுடன் அவர்கள் பீரங்கிகளை தாக்குதலின் பின்னர் விரைவாக நகர்த்தி விடுவதுண்டு. பூநகரியின் கல்முனை முனைப்புள்ளியானது விடுதலைப் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அதாவது இப்புள்ளியில் இருந்து 27 கி.மீ தூர வீச்சிற்குள் யாழ். குடாநாட்டின் பிரதான தளம் அடங்குவது குறிப்பிடத்தக்கது. 130 மி.மீ. ரக பீரங்கியின் தூரவீச்சு 27.5 கி.மீ ஆகும். எனவே கல்முனைப் புள்ளியில் இருந்து விடுதலைப் புலிகளால் பலாலித் தளத்தை முடக்க முடியும். விடுதலைப் புலிகள் வசம் நான்கு 130 மி.மீ பீரங்கிகளும், இருபது 122 மி.மீ பீரங்கிகளும், எண்பது 120 மி.மீ மோட்டார்களும் உண்டு என நம்பப்படுகின்றது. பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளின் பயணத்தை தடுப்பதே இத்தாக்குதலின் நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது. எனினும் கவசத் தாக்குதல் படையணியின் விழா திட்டமிடப்பட்ட வகையில் நடைபெற்றது. இந்த விழாவின் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி சந்திரசிறீ பங்குபற்றியிருந்ததுடன், 8 அதிகாரிகளும், 125 படையினரும் அணிவகுப்பு மரியாதையை வழங்கியிருந்தனர். கவசத்தாக்குதல் படையணியானது சரத் பொன்சேகாவின் மூளையில் இருந்து உதயமாகிய உத்தியாகும். படையினரின் நகர்வுத்திறனை அதிகரிக்கும் நோக்குடன் இது உருவாக்கப்பட்டுள்ளது. ஏனைய படையணிகளுடன் ஒப்பிடும் போது அதன் சுடுதிறனும் அதிகமாகும். எனினும் இப்படையணிக்கு தேவையான விநியோகங்கள் அதிகமாகும். அதாவது அவர்களின் வாகனங்களை பராமரிப்பதற்கு தேவையான படையினரும் அதிகம். சில படை நடவடிக்கைகளில் இலகு காலாட் படையினரின் நகர்வுத்திறன் மிகவும் குறைவானதாகும். குறிப்பாக "வெற்றி நிச்சயம்" படை நடவடிக்கையை குறிப்பிடலாம். இதன் போது விடுதலைப் புலிகளின் நேரடியற்ற சூடுகளில் அதிகளவான இழப்புக்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் கவசத்தாக்குதல் படையணியினரின் உருவாக்கத்தின் மூலம் இராணுவத்தினரின் இழப்புக்களை குறைக்க முடியும். அதாவது கவச வாகனத்தின் கவசத்தகடுகள் தாக்குதல்களில் இருந்து துருப்புக்களை காப்பாற்றலாம். கவசத்தாக்குதல் றெஜிமென்ட்டானது 3 ஆவது சிலோன் இலகு காலாட்படை பற்றலியன், 10 ஆவது சிங்க றெஜிமென்ட், 4 ஆவது கஜபா பற்றலியன், 5 ஆவது மற்றும் 6 ஆவது கவச படைப்பிரிவுகள் (இவை புதிதாக உருவாக்கப்பட்டவை) ஆகிய பற்றலியன்களை கொண்டது. இப் படையணி மீது விடுதலைப் புலிகளுக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14 ஆம் நாள் கொடிகாமத்தில் உள்ள 53 ஆவது படையணியின் தலைமையகத்தில் நடைபெற்ற கவசத் தாக்குதல் படையணியின் ஆரம்ப விழாவின் போதும் விடுதலைப் புலிகள் பீரங்கித் தாக்குதலை நடத்தியிருந்தனர். விழாவை ஆரம்பிப்பதற்குரிய விளக்கை எற்றியவுடன் அந்தப் பகுதியில் 34 எறிகணைகள் வீழ்ந்து வெடித்திருந்தன. அதன் போது இந்த பிரிகேட்டின் கட்டளைத் தளபதி லெப். கேணல் ரால்ஃப் நுகெரா, லெப்.கேணல் சுமித் அத்தப்பத்து, மேஜர் ஹரேந்திர பீரீஸ் ஆகியோரும் மேலும் இரு அதிகாரிகளும் காயமடைந்திருந்தனர். 2006 ஆம் ஆண்டு முகமாலையில் நடைபெற்று தோல்வியில் முடிந்த படை நடவடிக்கையின் போது இப்படையணி ரி-55 ரக பிரதான போர் டாங்கிகள் உட்பட பல கவசவாகனங்களை இழந்திருந்தது. இதனிடையே இப் படையணி கடந்த புதன்கிழமை முகமாலை நாகர்கோவில் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கையில் பங்குபற்றி உள்ளது. 53 மற்றும் 55 ஆவது படையணிகளின் படையினர் இந்நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். காலை 6.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் கவசத்தாக்குதல் படையணி ரி-55 ரக பிரதான போர் டாங்கிகளை பயன்படுத்தியிருந்தது. இதன்போது 2 படையினர் கொல்லப்பட்டதாகவும் 6-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கவசத் தாக்குதல் படையணி பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளதால் வடபோர்முனையில் படை நடவடிக்கைகள் அதிகரிக்கலாம். படையினர் ஆனையிறவை நோக்கி முன்நகர்வதுடன், கிளிநொச்சியையும் கைப்பற்ற முயற்சிக்கலாம். இப்பகுதிகளின் திறந்த தரையமைப்பு கவசத் தாக்குதல் படையணியின் நடவடிக்கைக்கு சிறந்தது. இதனிடையே தென் சிறிலங்காவில் தாக்குதல் அச்சங்கள் அதிகரித்துள்ளன. இந்த அச்சம் நேற்று சனிக்கிழமை காலை தம்புள்ளப் பகுதியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புடன் மேலும் அதிகரித்துள்ளது. இத்தாக்குதலில் பேருந்தில் இருந்த 20 பேர் கொல்லப்பட்டதுடன், 50-க்கும் அதிகமானோர் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வருடத்தில் இடம்பெற்ற 2 ஆவது குண்டுவெடிப்பு இதுவாகும். முதல் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டிருந்தனர். கடந்த வாரம் பெரியமடு பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 11 பாடசாலைச் சிறுவர்கள் உள்ளிட்ட 20 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். தட்சணாமருதமடுப் பகுதியில் உள்ள றோமன் கத்தேலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் இருந்து மாணவர்களையும், ஆசிரியர்களையும் எற்றிச்சென்ற சென்ற பேருந்தே தாக்குதலில் சிக்கியது. இத்தாக்குதலில் மேலும் 8 பாடசாலை மாணவர்கள் உட்பட 14 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் ஆழ ஊடுருவும் படையினரே இத்தாக்குதலை நடத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். பெரியமடு மற்றும் தம்புள்ள பகுதிகளில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்கள் போர் உக்கிரமான இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதையே காட்டுகின்றன. ஆனால் இரு பக்கமும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்புக்களும் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Monday, February 04, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.