Saturday, February 09, 2008

வாகன விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபதியும் 3 மெய்ப்பாதுகாவலர்களும் பலி

[சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2008]

சிறிலங்காவின் அனுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகமப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளர்களில் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிறீபதி சூரியராச்சியும் அவரது மூன்று மெய்ப்பாதுகாவலர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு மெய்ப்பாதுகாவலர் படுகாயமடைந்துள்ளார்.

தம்புத்தேகமப் பகுதி ஒன்றின் வளைவை இவர்களது வாகனம் கடந்து செல்ல முற்பட்டபோதே இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் பயணித்த வாகனம் பாதையை விட்டு விலகி அங்குள்ள மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே சிறீபதி சூரியராச்சியின் இரு மெய்ப்பாதுகாவலர்களும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சிறீபதி சூரியராச்சியும் இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் தம்புத்தேகம மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் சிறீபதி சூரியராச்சி (வயது 45) உயிரிழந்தார்.

இவர் உயிரிழந்ததை தம்புத்தேகம மருத்துவமனை மருத்துவர் மொகான் பிறேமலந்த் உறுதிப்படுத்தியிருக்கின்றார். அதேநேரம் படுகாயமடைந்த மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் அனுராதபுரம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி அங்கு உயிரிழந்தார்.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் நடைபெற்ற ஆயுதக்கொள்வனவில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் நடவடிக்கைகள் குறித்த பல தகவல்களை அம்பலப்படுத்திய சிறீபதி சூரியராச்சி, கடந்த வருட இறுதியில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவை நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுடன் இணைந்து ஆரம்பித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபதி சூரியராச்சியின் நடவடிக்கைகளால் விசனமுற்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்சவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும், சிறீபதி சூரியராச்சி மீது பொய்க்குற்றசாட்டுகளை சுமத்தி கைது செய்து சிறையிலடைத்தனர்.

எனினும் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்ட அவர் தன்மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவவை என்பதனை நிரூபித்து விடுதலையானார்.

விடுதலையான பின்பும் சிறிலங்கா இராணுவத்திற்கான ஆயுதக்கொள்வனவில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் குறித்த பல தகவல்களை அம்பலப்படுத்தி வந்தார்.

1962 ஆம் ஆண்டு பிறந்த சிறீபதி சூரியராச்சி, பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் கடற்படையில் இணைந்து லெப்ரினன்ட் தர அதிகாரியாகப் பணியாற்றினார். திருகோணமலை கடற்படைத்தளத்தில் பணியாற்றியபோது மோசடி நடவடிக்கை ஒன்றில் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட சிறீபதி சூரியராச்சி பணிநீக்கம் செய்யப்பட்டார். அதனையடுத்து சட்டக்கல்லூரியில் பயின்று சட்டத்தரணியானார்.

முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் நெருங்கிய நண்பரான இவர், அவரது ஆதரவைப் பயன்படுத்தி அரசியலுக்குள் நுழைந்தார். கடந்த வருடம் பெப்ரவரி 9 ஆம் நாள் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார். தனது பதவியை விட்டு விலகிய ஒரு வருடமான இன்றைய நாளில் அவர் வாகன விபத்தில் உயிரிழந்திருக்கின்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.