Friday, December 07, 2007

பெருந்தொகையான தமிழர் கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்பு.!

[வெள்ளிக்கிழமை, 07 டிசெம்பர் 2007] சிறிலங்காவில் பெருந்தொகையான தமிழர்கள் உரிய காரணமின்றி கைது செய்யப்பட்டதை எதிர்த்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. எதுவித காரணமுமின்றி தமிழர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் ஆறுமுகம் தொண்டமான் நேற்று வியாழக்கிழமை சிறிலங்கா தலைமை நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது: கொழும்பிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கடந்த 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் எண்ணிக்கையின்றி தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். மருதானை, புறக்கோட்டை, கிராட்ண்பாஸ், கிருலப்பனை, கொட்டாஞ்சேனை, தெகிவளை, பெல்வத்தை, மிரிகான, இரத்மலானை, பம்பலப்பிட்டி ஆகிய இடங்களில் தமிழர்கள் என்ற காரணத்தினால் கைது செய்யப்பட்டனர். சுமார் 2,000 தமிழர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 400 பேர் வரை பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகச் செய்திகள் மூலம் தெரியவந்துள்ளது. இந்நடவடிக்கை நியாயப்படுத்த முடியாத ஒரு தலைப்பட்சமானது. கைது செய்யப்பட்டவர்கள் அப்பாவித் தமிழர்கள். அவர்களின் கைதை நியாயப்படுத்தக் கூடிய வகையில் வலுவான காரணங்களோ, போதியளவிலான சந்தேகங்களோ எதுவுமே கிடையாது. "தமிழர்" என்ற காரணத்தால் மாத்திரம் கைதானவர்கள். கைது செய்யப்பட்ட நேரத்தில் கைதுக்கான காரணம் அறிவிக்கப்படவில்லை. கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு கைது மற்றும் தடுத்துவைப்பு குறித்து தெரிவிக்கப்படவும் இல்லை. எனவே, தமிழர்கள் சட்டவிரோதமாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக உரிய நிவாரணம் வழங்க வேண்டும். தமிழர்கள் உரிய காரணமும் சந்தேகமும் இன்றி கைது செய்யப்படுவதற்கும் தடுத்து வைக்கப்படுவதற்கும் தடை விதிக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களின் மீது பிறப்பிக்கப்பட்டிருக்கும் தடுப்புக்காவல் உத்தரவு செல்லுபடியற்றது என்றும் அறிவிக்க வேண்டும் என்று இ.தொ.கா. மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழர்கள் என்ற காரணத்தால் எதிர்காலத்தில் கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பும் உத்தரவாதமும் வழங்க வேண்டும். அத்துடன் கைது மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை படையினர் எப்படி மேற்கொள்ள வேண்டும் என்று இந்நீதிமன்றம் வழிகாட்டல் குறிப்புகளையும் நெறிப்படுத்தல்களையும் உருவாக்க வேண்டும். இக்கைது மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தமிழ்க் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதாக பிரகடனப்படுத்தி உறுதிப்படுத்தவும் வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இம் மனுவை சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என். சில்வா, நிமல் காமினி அமதுரங்க, ஜகத் பாலபெட்டபெந்தி ஆகியோர் அடங்கிய குழு இன்று வெள்ளிக்கிழமை விசாரித்தனர். விசாரணைகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டோர் தொடர்பிலான தரவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சட்ட மா அதிபருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத் தளபதி, வான் படைத் தளபதி, கடற்படைத் தளபதி, சிறிலங்கா காவல்துறை மா அதிபர், நுகேகொட பிரிவுக்கான காவல்துறை அதிகாரி , கிருலப்பனை, பம்பலப்பிட்டி, புறக்கோட்டை ஆகிய காவல் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் பெயர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.