Sunday, December 23, 2007

சிறிலங்காவின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும்: அமைச்சர் பந்துல குணவர்த்தன.

[ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2007] மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மேலதிக செலவுகளை சமாளிக்க அதிகளவு பணத்தை அச்சிடுவதால் எதிர்வரும் ஆண்டில் சிறிலங்காவில் பணவீக்கம் மேலும் அதிகமாகும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தனது செலவுகளை சமாளிப்பதற்காக அதிக பணத்தை அச்சிடும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில் இருந்து கடந்த 3 ஆண்டுகளாக அரசு தனது செலவுகளை சமாளிப்பதற்காக மேலதிகமாக பணத்தை அச்சிட்டு வந்துள்ளது. இது பணவீக்கத்தை கடுமையாக அதிகரித்திருந்தது. இதனை ஈடுகட்டும் பொருட்டு நாட்டின் வருமானத்துறை தனது இலக்கை அடையவில்லை. அதிகரித்துள்ள பாதுகாப்புச் செலவுகள், சம்பள அதிகரிப்புக்கள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புக்கள் ஆகியன அரசின் செலவீனத்தை அதிகரித்து வருகின்றது. இந்த செலவுகளை சமாளிப்பதற்கு அரசு மேலதிக பணத்தை அச்சிட வேண்டியுள்ளது. இதன் விளைவாக பணவீக்கம் அதிகரித்து வருகின்றது. உலகில் ஏற்பட்டு வரும் விலை உயர்வுகளும் பணவீக்கத்தை அதிகரித்துள்ளன. இந்த விலை உயர்வுகள் அனைத்து நாடுகளையும் பாதித்து வருகின்றது. முழு உலகமும் உணவு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளன. எதிர்வரும் சில மாதங்களில் இது மிகவும் மோசமடையலாம். பணவீக்கமும் மேலும் அதிகரிக்கலாம் என்றார் அவர். இதனிடையே அதிகளவில் பணத்தை அச்சிட்டு வருவது பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்று பொருளியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அரசு தான் தப்பிப் பிழைப்பதற்காக கடந்த மே மாதம் தொடக்கம் செப்ரெம்பர் மாதம் வரையிலும் 45 பில்லியன் ரூபாய்களை அச்சிட்டுள்ளது. இதனை விட அரச வங்கிகளில் இருந்து அதிகளவான தொகைகளை பெற்றும் உள்ளது. இதுவே பணவீக்கம் அதிகரித்ததற்கான காரணம் என்றும் பொருளியல் நிபுணர்கள் சாடுகின்றனர். ஆசிய பிராந்தியத்தில் சிறிலங்காவில்தான் பணவீக்கம் அதிகமாக உள்ளதாகவும், அயல்நாடான இந்தியாவில் பணவீக்கம் 3 விழுக்காடாக இருப்பதாகவும் பொருளியல் நிபுணர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.