Sunday, December 23, 2007
8 உறுப்பினர்களுடன் அரசாங்கத்தில் இணைய முடிவெடுத்திருந்தார் ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச: "இருதின"
[ஞாயிற்றுக்கிழமை, 23 டிசெம்பர் 2007]
மகிந்த ராஜபக்சவின் வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கத்தை ஜே.வி.பி. எதிர்த்தால் 8 உறுப்பினர்களுடன் அரசாங்கம் பக்கம் தாவி விட அக்கட்சியின் விமல் வீரவன்ச தீர்மானித்திருந்ததாக சிங்கள ஊடகமான "இருதின" செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பிற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக நாடாளுமன்றக் கட்டடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பசில் ராஜபக்சவிற்கும் விமல் வீரவன்சவிற்கும் இடையே இரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பது என்று ஜே.வி.பி. முன்னர் எடுத்திருந்த தீர்மானம் இறுதி நேரத்தில் மாறியுள்ளது.
நாடாளுமன்ற கட்டடத்தில் இருக்கும் மகிந்த ராஜபக்சவின் செயலகத்துக்குள் இச்சந்திப்பு நடைபெற்றது.
அடுத்த ஒரு மணித்தியாலத்தில் நிச்சயமாக அரசாங்கத்திலிருந்து சுமார் 16 பேர் எதிர்க்கட்சிக்குச் செல்ல தீர்மானித்திருந்தனர்.
அதனால் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டுமாயின் ஜே.வி.பி. குறைந்த பட்சம் வாக்களிப்பிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்றும் விமல் வீரவன்சவிடம் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
அந்த தீர்மானத்திற்கு கட்சியினரை இணங்கச் செய்யுமாறும் விமல் வீரவன்சவைக் பசில் கேட்டுள்ளார். இதற்கமைய எவ்வித கோரிக்கையோ நிபந்தனையோ இன்றி ஆதரவுத் தீர்மானத்தை மேற்கொள்வோம் என்று பசில் ராஜபக்சவிடம் வீரவன்ச கூறியுள்ளார்.
அதே நேரத்தில் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்க கட்சியைச் சேர்ந்தவர்கள் விரும்பாவிடில் தான் உட்பட 7 அல்லது 8 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கம் பக்கம் தாவிவிடுவேன் என்றும் பசில் ராஜபக்சவுக்கு விமல் வீரவன்ச உறுதியளித்தார்.
மேலும் பசில் ராஜபக்சவின் வேண்டுகோளை ஏற்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானைச் சந்தித்த விமல் வீரவன்ச, தமது கட்சி வரவு-செலவுத் திட்ட வாக்களிப்பிலிருந்து விலகியிருக்கத் தீர்மானித்துள்ளதால் எதிர்க்கட்சிக்குச் சென்று அமைச்சுப் பதவிகளை இழக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவின் மற்றொரு வேண்டுகோளுக்கு அமைய அமைச்சர் டளஸ் அழகப்பெருமாவுடன் ஆளும் கட்சியினர் இருந்த இடத்திற்கு அருகே சென்ற விமல் வீரவன்ச, ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சிக்குச் செல்வார்கள் எனச் சந்தேகிக்கும் உறுப்பினர்களுக்கு அருகே சென்று தமது கட்சியின் தீர்மானம் குறித்து அவர்களுக்குக் கேட்கக் கூடியவாறு சத்தமாகக் கூறி அவர்களின் கட்சித் தாவலையும் தடுத்துள்ளார் என்று "இருதின" ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.