[சனிக்கிழமை, 01 டிசெம்பர் 2007] மலேசியத் தமிழர்கள் இந்துத்துவா, மதவாதம் ஆகியவைகளைப் பரப்பும் ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புக்களின் கண்ணிவெடியில் சிக்காமல், தங்களது வாழ்வுரிமையைக் காக்க முயல்வது முக்கியம் என்று தமிழகத்தின் திராவிடர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மலேசியாவில் தமிழர்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் இன்று நிறைவேற்றப்பட்டன. சென்னை- பெரியார் திடலில் துரை. சக்ரவர்த்தி நினைவகத்தில் இன்று சனிக்கிழமை முற்பகல் 10:30 மணியளவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற அச்செயற்குழுக் கூட்டத்தில் மலேசியத் தமிழர் பிரச்சனை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: தங்களுக்கு சமவாய்ப்பு, குடி உரிமை வாய்ப்பு, வேலை வாய்ப்புகள் போன்றவைகளுக்காகவும், வாழ்வுரிமை பெறவும், அறவழியில் அறப்போர் நடத்திய மலேசியத் தமிழர்கள் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு, சிறையில் தள்ளப்பட்டது குறித்து மனித உரிமைகளில் அக்கறை காட்டும் அனைவருமே கவலை கொண்டதோடு கண்டனமும் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் கலைஞர் முதலமைச்சர் மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவருமாவார். அவர் மிகுந்த அரசியல் நெறிமுறைக்கேற்ப, மலேசியத் தமிழர்கள் நடத்தப்பட்ட விதம் பற்றிய தனது நியாயமான கவலையை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்க்கு முறைப்படி கடிதம் எழுதி, தனது கடமையை ஆற்றியுள்ளார். இது குறித்து மலேசிய அமைச்சர் ஒருவர் முதல்வர் கலைஞரை விமர்சித்தது மிகவும் கண்டனத்திற்குரியது. இதுபற்றி நாடாளுமன்ற இரு அவைகளிலும் மலேசியத் தமிழர்கள் உரிமையைப் பாதுகாக்க இந்திய மூத்த அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் மிக முக்கியமானவை. முதலமைச்சர் கலைஞர் மீது விமர்சனம் செய்த மலேசிய அமைச்சரின் நடவடிக்கைக்குக் கண்டனமும் தெரிவித்துள்ளனர். கட்சி வேறுபாடின்றி கருத்துத் தெரிவித்துள்ள அனைத்துத் தலைவர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோரைப் பாராட்டுவதுடன், மலேசியத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காக்க அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்பதை இச்செயற்குழு வற்புறுத்துகிறது. மலேசியத் தமிழர்கள் இந்துத்துவா, மதவாதம் ஆகியவைகளைப் பரப்பும் ஆர்.எஸ்.எஸ்., போன்ற அமைப்புகளின் கண்ணிவெடியில் சிக்காமல், தங்களது வாழ்வுரிமையைக் காக்க முயல்வது முக்கியம் என்பதையும் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு மலேசியத் தமிழர்களுக்குச் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளது என்று அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, December 01, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.