[வெள்ளிக்கிழமை, 07 டிசெம்பர் 2007] 300 பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தும் கெப்பிட்டிகொல்லாவ தாக்குதலை தடுக்க முடியவில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தி: கொழும்பில் இடம்பெற்ற இரண்டு குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து தற்போது கெப்பிட்டிகொல்லாவப் பகுதியிலும் குண்டு வெடித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து அரசு மிகப்பெரும் தேடுதல் வேட்டைகளை அங்கு முடுக்கி விட்டிருந்தது. நகரத்தின் பல பகுதிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், நகரத்திற்கு வரும் வாகனங்களும், மக்களும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். இதன் போது 1,000-க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். பெரும் தொகையில் தமிழ் மக்களை கைது செய்தது அரசின் மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் தொடர்பற்ற ஒருவரைத் தடுத்து வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறல் என தலைமை நீதிமன்றத்தில் கூட மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கெப்பிட்டிகொல்லாவப் பகுதியில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சம்பவமானது, அந்த பகுதியில் பாதுகாப்பை நடைமுறைப்படுத்துவது கடினமானது என்பதை எடுத்துக்காட்டி உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதமும் அங்கு தாக்குதல் நிகழ்ந்திருந்தது. அதன் போது இரு கிளைமோர் குண்டுகள் ஒரே சமயத்தில் வெடித்திருந்தன. அந்த தாக்குதலின் பின்னர் மணலாறு மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களின் எல்லைக் கிராமங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதிகளில் 300 பதுங்குகுழிகள் வரிசையாக அமைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர். அந்தப் பகுதியில் வசிக்கும் அதிகளவான சிங்கள மக்களுக்கும் ஊர்காவல் படையினருக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தன. இந்த எல்லைக்கோட்டில் பல இராணுவ முகாம்களும் நிறுவப்பட்டிருந்தன. அந்தப் பகுதிக்கு சென்ற பல பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து தமது கிராமங்களில் இருந்து தப்பி ஓடிய சிங்கள மக்களையும் மீண்டும் தமது சொந்தக் கிராமங்களுக்கு திரும்புமாறு அவர்கள் உற்சாகப்படுத்தியிருந்தனர். அவர்களுக்கான பாதுகாப்புக்கு அரசு உறுதி வழங்கியிருந்தது. ஆனால் கடந்த புதன்கிழமை நடைபெற்ற மற்றுமொரு குண்டுவெடிப்பு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் பல குறைபாடுகள் உள்ளன என்பதை காட்டியுள்ளது. பாதுகாப்பு தரப்பினர் தமது பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியான முறையில் பேணவில்லை என்பதும் தெளிவாகி உள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள வான்படைத் தளத்தின் மீது பெரும் தாக்குதலை விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர் அந்தப்பகுதிக்கு சிறப்புக் கட்டளைத் தளபதி ஒருவர் அரசினால் நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையின் கீழ் அந்தப் பகுதியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இந்த பாதுகாப்பு நடைமுறைகள் எத்தனை காலத்திற்கு செயற்திறன் மிக்கவை என்பதில் தற்போது உறுதியில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிராக படையினர் நடவடிக்கையினை மேற்கொண்டு வரும் சமயம் மேலதிக பாதுகாப்புக்கள் நாட்டுக்குத் தேவை என்பது ஆய்வாளர்களின் கருத்து. ஆனால் மன்னாருக்கும் - வவுனியாவுக்கும் இடையாக உள்ள பகுதிகளின் ஊடாக அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் யாரும் இலகுவாக உட்புக கூடியதாக பாரிய பாதுகாப்பு ஓட்டைகள் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதிகளவான விடுதலைப் புலிகள் இந்தப் பகுதியினூடாக ஊடுரூவி வருகின்றனர். அவர்கள் சிறு, சிறு குழுக்களாக தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர். முக்கிய பொருளாதார மற்றும் படைத்துறை இலக்குகள் மீது விடுதலைப் புலிகள் எந்த வேளையிலும் தாக்குதல்களை நடத்தலாம் என படையினரின் புலனாய்வுதுறை எச்சரித்துள்ளது. கொழும்பு துறைமுகம், நீர்மின் நிலையங்கள், மின்நிலையங்கள், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், அரச கட்டடங்கள், உலக வர்த்தக மையத்தின் இரட்டைக்கோபுரம், கண்டி நகரம் என்பன முதன்மையான இலக்குகளாகும். ஆனால் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை விடப்படும் போதும் அரசு போதிய அளவு பாதுகாப்பை வழங்க முடியாத நிலையில் உள்ளது. உதாரணமாக கொலன்னாவ எண்ணைய்க் களஞ்சியத்தின் பாதுகாப்பை கருதினால் இராணுவம் அதற்கான பாதுகாப்பை வழங்கி வருகின்ற போதும், தனியான ஒரு பிரிவும் பாதுகாப்புக்கு என அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இரவில் அங்குள்ள பெரும்பாலான பாதுகாப்பு அதிகாரிகள் தூங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகள் ஒரே சமயத்தில் கொழும்பிலும், கண்டியிலும் தாக்குதலை நடத்தலாம் எனவும் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் வலுவிழந்தோர், பிச்சைக்காரர்கள் போல நடமாடுவதாகவும் புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது. விடுதலைப் புலிகளின் இந்த உத்திகள் படையினரின் நடவடிக்கைகளை பாதிப்படைய செய்யும். இந்த பகுதிகளின் பாதுகாப்புக்கு என நகர்த்தப்படும் படையினரால் களமுனைகளில் பாதிப்புக்கள் ஏற்படலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Friday, December 07, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.