Saturday, December 29, 2007

மன்னாரில் படையினரின் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: 20 படையினர் பலி- 50க்கும் மேற்பட்டோர் காயம்

[சனிக்கிழமை, 29 டிசெம்பர் 2007] மன்னாரில் சிறிலங்காப் படையினரின் பாரியளவிலான முன்நகர்வு நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் படைத்தரப்பிற்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 20-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மன்னாரில் இன்று சனிக்கிழமை அதிகாலை 5:30 மணிமுதல் மன்னாரின் உயிலங்குளம், பரப்பாங்கண்டல் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மும்முனைகளில் பாரிய முன்நகர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மோட்டார், ஆட்டிலெறி, பல்குழல் எறிகணை, வெடிகணைகளின் மிகச்செறிவான சூட்டாதரவுடன் கனரக போர்க்கலங்களுடன் சிறிலங்காப் படைக் கொமாண்டோக்கள் மும்முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதல்களை நடத்தின. விடுதலைப் புலிகளின் தீரமிகு தாக்குதலில் படைத்தரப்பினரின் இரு முனைகளின் முன்நகர்வுகள் இன்று மாலை வரையான தாக்குதல்களில் முறியடிக்கப்பட்டு படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். மற்றொரு முனையில் முறியடிப்புத் தாக்குதல் தீவிரமாக நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்த இருமுனை முறியடிப்பில் படைத்தரப்பில் 20-க்கும் மேற்பட்ட கொமாண்டோக்கள் உள்ளிட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50-க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளனர். இம் முறியடிப்புத் தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 3 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.