[சனிக்கிழமை, 10 நவம்பர் 2007] அரசியல் இலாபத்துக்காக முகமாலையில் படை நடவடிக்கையை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மேற்கொண்டதாகவும் ஆனால் விளைவு மறுதலையாகி விட்டது என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது. "டெய்லி மிரர்" நாளேட்டில் வெளியாகியுள்ள செய்தி விபரம்: அனுராதபுரம் வான் படைத்தளம் மீது விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தி பேரழிவை ஏற்படுத்திய சில நாட்களின் பின்னர் சிறிலங்கா வான் படையினரின் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்செல்வன் கடந்த நவம்பர் 2 ஆம் நாள் கொல்லப்பட்டார். தமிழ்செல்வனின் மறைவை சில சிங்கள மக்கள் வெடிகொளுத்தி கொண்டாடினார்கள். ஆனால் இந்த சந்தோசம் சில நாட்களே நீடித்துள்ளது. சிறிலங்கா இராணுவம் முகமாலையில் நடைபெற்ற சமரில் 20-க்கும் மேற்பட்ட படையினரை இழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, வரவு-செலவு திட்டத்தை சமர்ப்பித்த போது இந்த சமர் நடைபெற்றது. கடந்த புதன்கிழமை காலை 5:00 மணியளவில் விடுதலைப் புலிகளின் முன்னணி நிலைகளான முகமாலை, கிளாலி, பூநகரி பகுதிகளை நோக்கி படையினர் கடுமையான பீரங்கி மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்தி தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்த கனரக சூட்டாதரவுடன் மோட்டார் எறிகணைகளையும் ஏவியபடி இராணுவத்தினரின் 55 ஆவது படையணி முகமாலைப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னணி நிலைகளை நோக்கி முன்னேறியது. ஆனால் விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதல் கடுமையாக இருந்தது. முன்நகர்ந்த படையினர் மீது அவர்கள் கடுமையான பீரங்கி மற்றும் மோட்டார் தாக்குதல்களை நடத்தினர். படையினர் கொலைக்களத்திற்குள் சென்றுள்ளனர்- அதாவது, அங்கு ஏற்கனவே விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட பொறிக்குள் அவர்கள் சிக்கி விட்டனர். படையினர் எதிர்பார்த்ததை விட விடுதலைப் புலிகளின் எதிர்ப்பு பலமாக இருந்தது. விடுதலைப் புலிகளின் எறிகணைகளுடன், அவர்களின் பொறி வெடிகளும் படையினருக்கு பெரும் சேதத்தை விளைவித்துள்ளன. பொறிவெடிகளில் சிக்கியே அதிகளவான படையினர் காயமடைந்தனர். இரு மணிநேர கடும் சமரின் பின்னர் படையினர் தமது பழைய நிலைகளுக்கு பின்வாங்கியிருந்தனர். அப்போது கடுமையான எறிகணை வீச்சுக்களும் இடம்பெற்றன. விடுதலைப் புலிகளின் பதுங்குகுழிகளை கைப்பற்றி அதனை எவ்வளவு காலம் முடியுமோ அது வரை தக்கவைப்பதும், விடுதலைப் புலிகளுக்கு அதிக சேதங்களை உண்டுபண்ணிய பின்னர் பின்வாங்குவதும் தான் படையினரின் திட்டம். இந்த மோதல்களின் போது படையினருக்கு ஆதரவாக எம்ஐ-24 உலங்குவானூர்தி ஒன்றும் தாக்குதல்களில் ஈடுபட்டது. படையினர் பின்வாங்கிய போது அதிக எண்ணிக்கையான படையினர் காயமடைந்திருந்தனர். அப்போது விடுதலைப் புலிகள் அவர்களை சுற்றிவளைக்கவும் முற்பட்டிருந்தனர். எனினும் காலை 9:00 மணியளவில் மோதல் ஓய்வுக்கு வந்ததுடன், இரு தரப்பும் தமது பழைய நிலைகளுக்கு திரும்பியிருந்தனர். பிற்பகல் வரையிலும் இந்த மோதல்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஊடக மையம் எதனையும் தெரிவிக்கவில்லை. பிற்பகல் 1:30 மணியளவில் முகமாலைப் பகுதியில் கடுமையான மோதல்கள் நடைபெற்றதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருந்தார். 6 படையினர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார். எனினும் இந்த மோதல்களில் பெருமளவான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதுடன், தமது தரப்பில் 11 படையினர் கொல்லப்பட்டதாகவும், 41 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் அன்று மாலை மீண்டும் கூறினார். ஆனால் இழப்புக்கள் அதிகமானவை. கொல்லப்பட்ட படையினரின் எண்ணிக்கையும் அதிகமானது. கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி காயமடைந்த படையினரின் எண்ணிக்கை 105 ஆகும். அவர்களில் 20 பேர் மீண்டும் போருக்கு செல்ல முடியாதவாறு கடுமையாக காயமடைந்துள்ளனர். 60 பேர் கடுமையாக காயமடைந்துள்ளனர். ஏனையோர் சிறு காயமடைந்துள்ளனர். எனினும் இந்த எண்ணிக்கையும் அதிகமாகலாம் ஆனால் அதனை உறுதி செய்ய முடியவில்லை. காயமடைந்தோர் முதலில் பலாலி இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு கொழும்பு தேசிய மருத்துவமனையில் 22 படையினரும், ஜெயவர்த்தனபுர மருத்துவமனை மற்றும் இராணுவ மருத்துவமனைகளில் 25 படையினரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகள் தமது தரப்பில் ஒருவர் பலியானதாக தெரிவித்துள்ளனர். இந்த மோதல்களில் படையினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் புகைப்படங்களை விடுதலைப் புலிகளின் ஆதரவு இணையத்தளங்கள் வெளியிட்டிருந்தன. விடுதலைப் புலிகள் யாழ். குடாநாட்டின் மீது வலிந்த தாக்குதல் மேற்கொள்வதை தடுப்பது தான் இந்த படை நடவடிக்கையின் நோக்கம் என உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். படையினர் தமது வலிந்த நடவடிக்கையை முதலில் முன்னெடுத்ததனால் விடுதலைப் புலிகளின் தாக்குதல் திட்டத்தை பின் தள்ளியுள்ளனர் எனினும் விடுதலைப் புலிகளின் சார்பு ஊடகங்களுக்கு எதிரான கருத்தை உடையது இது. அதாவது இது பெரும் படை நடவடிக்கை அல்ல. கடல்நீரேரியை அண்மித்துள்ள விடுதலைப் புலிகளின் தாக்குதல் வலிமையை குறைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கையே இதுவாகும். அரசு ஒரு அரசியல் நன்மைக்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது முகமாலை சமரை வெல்ல வேண்டும் என்பது அரசின் விருப்பம். ஆனால் விளைவு மறுதலையாகி விட்டது. இந்த மோதல்களில் தாக்குதல் துப்பாக்கிகள், வெடிபொருட்கள், ஆர்பிஜி எறிகணைகள், 100-க்கும் மேற்பட்ட கைக்குண்டுகள் என பல ஆயுத தளபாடங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றி உள்ளனர். சரியாக 11 மாதங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் நாள் இதே போன்றதொரு பெரும் தோல்வியை படைத்தரப்பு சந்தித்திருந்தது. பளையை நோக்கி மேற்கொள்ளப்பட்ட அந்த நகர்வில் 175 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தற்போதைய சமரில் படையினரின் இழப்புக்கள் குறைவாக இருந்த போதும் அது விடுதலைப் புலிகளின் உளவுரனை மிகவும் அதிகரித்திருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி:புதினம்
Saturday, November 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.