Sunday, November 25, 2007

சிறிலங்காவில் தேசிய அரசு அமைக்க தீவிர முயற்சிகள்.!!

[ஞாயிற்றுக்கிழமை, 25 நவம்பர் 2007] சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட ரீதியில் தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்த உள்ளதாக அரசாங்கத்தின் மூத்த அமைச்சரான டி.எம்.ஜயரட்ன தெரிவித்துள்ளார். இதற்காக ஒரு வேலைத்திட்டத்தை வடிவமைக்குமாறு மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் டி.எம்.ஜயரட்ன குறிப்பிட்டார். மேலும் இதற்காக பேச்சுவார்த்தைக் குழுவை அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்று தானும் மேலும் சில அமைச்சர்களும் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை விடுக்க உள்ளதாகவும் டி.எம்.ஜயரத்ன கூறியுள்ளார். அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஏற்படுத்தும் தேசிய அரசாங்கத்தின் ஊடாகவே சிறிலங்காவின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தியாளர்களான ஜனநாயகக் குழுவின் கருத்தாகவும் உள்ளது. வரவு-செலவுத் திட்ட விவாதத்தின் இறுதியில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அந்த காலப்பகுதியில் இந்த தேசிய அரசாங்கத் திட்டம் பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படும் என்றும் மகிந்த ராஜபக்ச அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஓய்வுபெற்ற முப்படைத் தளபதிகள் சிலரும் தற்போதைய நெருக்கடியிலிருந்து சிறிலங்காவை மீட்க தேசிய அரசை ஏற்படுத்துவதற்கான தேவை குறித்து கவனம் செலுத்தியுள்ளனர். அவர்கள் ஏற்கனவே மகிந்த ராஜபக்சவைச் சந்தித்து இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எதிர்வரும் நாட்களில் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.