[சனிக்கிழமை, 17 நவம்பர் 2007] சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினருக்கு இடையிலான உள்ளக மோதல்களால் சிறிலாங்கா இராணுவம் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" நாளேடு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை வெளிவந்த அந்த நாளேட்டில் எழுதப்பட்டுள்ளதாவது: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படையினரால் கைப்பற்றப்பட்ட கிழக்கு மாகாணத்தில் செயற்பட்டு வரும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினருக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிளவு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. கருணாவுக்கும் அவரது இரண்டாம் நிலைத் தலைவரான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சந்திரகாந்தன் என்பவருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியிருந்தது. கருணா தமது குழுவை தவறாக வழிநடத்துவதாக பிள்ளையான் குற்றம் சுமத்தியதைத் தொடர்ந்து இந்த உள்ளக மோதல்கள் வெடித்திருந்தன. இதனிடையே கருணாவின் நிதிப்பிரிவு பொறுப்பாளரான குகநேசன் என்பவர் அந்தக் குழுவினரின் பணத்தை வெவ்வேறு இடங்களில் மறைத்து வைத்திருந்தார். ஆனால் கொட்டாவாப் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் அவரும் ஏனைய 7 பேரும் கொல்லப்பட்டு விட்டனர். குகநேசனின் மரணத்தைத் தொடர்ந்து அவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணத்தை கண்டுபிடிப்பது கடினமாகி விட்டது. அதனைக் கண்டுபிடிக்க முடியாது என்ற நிலையே தற்போது தோன்றியுள்ளது. குகநேசனின் மரணத்தைத் தொடர்ந்து பணத்தை கையாளும் பொறுப்பை பிள்ளையான் ஏற்றுக்கொண்டார். கருணாவுக்கும், வெளிநாட்டில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பிள்ளையானே பணத்தை வழங்கி வந்தார். முன்னர் கிழக்கு மாகாணப் பொறுப்பாளராக இருந்த கருணாவே துணை இராணுவக் குழுவின் முக்கிய புள்ளி எனக் கருதப்பட்டார். ஆனால் தற்போது பிள்ளையானே முக்கிய புள்ளியாக இருந்திருக்க வேண்டும் எனக் கருதப்படுகின்றது. அண்மையில் நடைபெற்ற மோதல்களில் இருதரப்பிலும் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கருணாவின் தீவிர விசுவாசியான திலீபன் என்பவர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டது மோசமானதாகும். பிள்ளையான் குழுவினர், அவரைக் கைது செய்ய முயற்சித்த போது திலீபன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கருணா 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய பின்னரே பிள்ளையான் அடையாளம் காணப்பட்டிருந்தார். பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் இடையிலான மோதல்கள் உக்கிரம் அடைந்த போது 1970 களில் இருந்து பிரித்தானியாவில் வசித்து வந்த யாழ். மாவட்டம் புங்குடுதீவைச் சேர்ந்த கிருஸ்ணன் என்று அழைக்கப்படும் கிருஸ்ணபிள்ளை என்பவர் சமரச முயற்சிகளுக்காக சிறிலங்காவுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார். ஆனால் கிருஸ்ணன், கருணாவுக்கு ஆதரவாகவே செயற்பட்டுள்ளார். எனவே அவரால் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியவில்லை. பின்னர் பிள்ளையான் அவரைக் கொலை செய்ய முயற்சிப்பதாக அறிந்த அவர், சிறிலங்காவை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். கருணா குழுவிற்குள் பிளவை ஏற்படுத்தியதில் கிருஸ்ணனுக்கும், திலீபனுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிலைமை மிகவும் மோசமான கட்டத்தை அடைந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து கருணா பிரித்தானியாவுக்குச் சென்றுவிட்டார். எனவே கருணா குழுவிற்கான பொறுப்பு பிள்ளையானிடம் சென்றுவிட்டது. பிரித்தானியாவில் கருணாவின் மறைவிடம் தொடர்பான தகவல்களை பிள்ளையானின் ஆதரவாளர்களே பிரித்தானியா காவல்துறையினருக்கு வழங்கியாதாக தற்போது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கருணா கைது செய்யப்பட்ட மறுநாள் பிள்ளையான் குழு மட்டக்களப்பு மற்றும் அம்பாறைக்குத் திரும்பியதுடன் கருணா குழுவினரின் அலுவலகங்களையும் கையகப்படுத்தியிருந்தது. பிள்ளையான் குழுவில் தூயவன், தேவில்காந், மார்க்கன், ஜெயம், சீலன், சசி, சிதா மாஸ்ரர், பிரதீப் மாஸ்ரர், அஜித் ஆகியோர் உள்ளதாக நம்பப்படுகின்றது. கருணா குழுவில் மங்களன் மாஸ்ரர், றியாசீலன், பாரதி, வீரா, ராஜன், ஜீவேந்திரன், சின்னத்தம்பி ஆகியோரே இருப்பதாக நம்பப்படுகின்றது. இந்த குழுக்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதல்கள் தொடர்வதால் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களில் தற்போது பதற்றம் நிலவுகின்றது. பிந்திய தகவல்களின் படி அங்கு நிலவும் பதற்றம் காரணமாக சில அனைத்துலக மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது செயற்பாடுகளை அங்கு நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. படையினராலும் நிலமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலமை தொடர்ந்தால் அரச படையினர் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். ஏனெனில் இவற்றில் ஒரு குழுவில் உள்ள உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளுடன் மீண்டும் இணையும் வாய்ப்புள்ளது. இவ்வாறு நடைபெறுமாக இருந்தால் அது படையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தலாம். அதாவது படையினரின் புலனாய்வுத்துறை உறுப்பினர்கள், படை அதிகாரிகள் தொடர்பான தகவல்களும் விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டு விடலாம். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த ஆபத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதுடன், தற்காலிக ஓய்வுகளைத் தவிர அதனை தீர்க்கவும் அவர்களால் முடியவில்லை. தற்போது விடுதலைப் புலிகள் தமது உறுப்பினர்களை கிழக்கிலும், கொழும்பிலும் நடவடிக்கையில் ஈடுபடுத்தி உள்ளனர். நெருக்கடிகளை ஏற்படுத்துவதும், மேலதிக தகவல்களை சேகரிப்பதுமே அவர்களின் நோக்கம். இந்த நிலமை மோசமடைவதை தடுப்பதற்கு இதுவே நேரம். தற்போதைய நிலமை தமது கைகளை மீறிச்செல்வதை படையினர் அனுமதிக்கக்கூடாது. இது மறைமுகமாக கிழக்கு மாகாணத்தை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர விடுதலைப் புலிகளுக்கு உதவலாம். பாதுகாப்பு அளிக்கப்படாத புலனாய்வுத்துறை அதிகாரிகள் சிறிலங்காவில் உள்ள படையினரின் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு (லெப்ரினன்ட், கப்டன், மேஜர் தர அதிகாரிகள்) அச்சுறுத்தல்கள் இருந்த போதும் போதுமான பாதுகாப்புக்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் பல அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் அடைக்கலம் கோரி வருகின்றனர். இராணுவத்தின் புலனாய்வுதுறை அதிகரியான கப்டன் சஞ்ஜீவ கருணாரட்ன என்பவர் அச்சுறுத்தல்கள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அனைத்துலகத்தில் உள்ள தமது வலையமைப்புக்களை பயன்படுத்தி அவரைத் தண்டிப்பதற்கு தற்போதும் விடுதலைப் புலிகள் முயற்சித்து வருகின்றனர். கருணாவை விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேற்றுவதில் முன்னின்று செயற்பட்ட சிறைச்சாலை ஆணையாளரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் வஜிர விஜயகுணவர்த்தனாவுக்கும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் உள்ளன. இவர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் பிரதான இலக்குகளாக உள்ளனர். விஜய குணவர்த்தனாவுக்கு ஆபத்துக்கள் உள்ளதாக புலனாய்வுதுறை தெரிவித்த போதும் அவருக்கு போதிய பாதுகாப்புக்கள் வழங்கப்படவில்லை. எனவே மோசமான நிலமைகள் ஏற்படுவதற்கு முன்னர் கருணா குழுவினரின் மோதல்களுக்கு ஒரு தீர்வை காணவேண்டும். இது கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்பதுடன் விடுதலைப் புலிகள் மீண்டும் கிழக்கைக் கைப்பற்றவும் வழிவகுக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, November 17, 2007
துணை இராணுவக் குழுவினரின் உள்ளக மோதல்: நெருக்கடியில் சிக்கிய சிறிலங்கா இராணுவம்.!
Saturday, November 17, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.