Wednesday, November 14, 2007
எதிர்ப்புக்களையும் மீறி அமெரிக்கா சிறிலங்காவிற்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றது: "த பொட்டம்லைன்"
[புதன்கிழமை, 14 நவம்பர் 2007]
அமெரிக்கா சிறிலங்காவிற்கு ஆயுதங்களை வழங்காது என்று ஊடகங்கள் தெரிவித்து வரும் நிலையில் சிறிலங்காவிற்கு அமெரிக்கா ஒரு தொகுதி ஆயுதங்களை கடந்த வாரம் வழங்கியுள்ளது என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது.
த பொட்டம்லைனின் பாதுகாப்பு ஆய்வுப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:
யால வனவிலங்கு சரணாலயப் பகுதியில் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கையை அடுத்து விடுதலைப் புலிகள் அங்கிருந்து கிழக்குப் பகுதியில் உள்ள பொத்துவில் நோக்கி நகர்ந்துள்ளனர். பொத்துவில் - குமணப் பகுதிகளில் உள்ள ஏ-4 நெடுஞ்சாலையின் பாதுகாப்பைப் படையினர் உறுதிப்படுத்தியிருந்தால் விடுதலைப் புலிகள் யாலப் பகுதிக்குள் ஊடுருவியிருக்க முடியாது.
விடுதலைப் புலிகள் யால மற்றும் கதிர்காமம் பகுதிகளுக்குள் ஊடுருவுவதனை தடுக்கும் பொருட்டு மாணிக்க கங்கைப் பகுதியை படையினர் தடை செய்துள்ளனர். கடந்த 10 ஆம் நாள் சிதுல்புவேவா பகுதியில் கட்டட ஒப்பந்ததாரர்களின் வாகனம் ஒன்று கிளைமோர்த் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதன் போது அந்த வாகனத்தின் சாரதி கொல்லப்பட்டதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
கடந்த ஒக்ரோபர் மாதம் 15 ஆம் நாள் தலகஸ்மன்கடப் பகுதியில் இருந்த இராணுவ நிலைகளை விடுதலைப் புலிகள் தாக்கிய போது 6 இராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்தனர். அதன் பின்னர் அந்த பகுதியில் 5 விவசாயிகள் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
யால பகுதிக்குள் ஊடுருவியதன் மூலம் தாம் பெரும்பான்மை சிங்கள மக்கள் வாழும் தெற்கிலும் செயற்திறனுடன் இருப்பதாக விடுதலைப் புலிகள் உலகத்தை நம்பவைக்க முற்பட்டுள்ளனர்.
வவுனியாப் பகுதி இராணுவத்தின் பிரிகேட் அதிகாரியான பிரிகேடியர் சுதந்த ரணசிங்கவை யால பிராந்திய கட்டளை அதிகாரியாக இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேக்கா கடந்த வாரம் நியமித்துள்ளார்.
கடந்த 11 ஆம் நாள் அதிகாலை இராணுவத் தளபதி விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற நினைவுக் கூட்டத்தில் பங்குபற்றிய பின்னர் யால பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு அவரை 11 ஆவது படையணி கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் யூ. எதிரிசிங்க மற்றும் யால பகுதி கட்டளை தளபதி பிரிகேடியர் சுதந்த ரணசிங்க ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் அங்கு நடைபெற்ற மாநாட்டில் சரத் பொன்சேகா கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் காவல்துறையைச் சேர்ந்த மூத்த பிரதிப் பணிப்பாளர் மகிந்த பாலசூர்ய, தென்பிராந்திய காவல்துறை பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜெயந்த கமகே, பொதுமக்கள் படைப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் றியர் அட்மிரல் சரத் வீரசேகர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
யால பகுதியில் நடைபெற்று வரும் படை நடவடிக்கை தொடர்பாக சுதந்த ரணசிங்க இராணுவத் தளபதிக்கு விளக்கி கூறினார். இந்த நடவடிக்கையில் இராணுவம், காவல்துறையினர், ஊர்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், வீதித்தடைகள், எழுந்தமானமான சோதனைகள் என்பனவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் சிறப்புப் படையினரும், கொமோண்டோக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
யால காட்டுப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு விநியோகங்கள் கிடைப்பது மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதனால் அவர்கள் நீண்டகாலம் அங்கு நிலைத்து நிற்க முடியாது. அவர்கள் இந்தப் பகுதிக்குள் ஊடுருவிய போது மருந்து பொருட்கள், உணவுப் பொருட்களை எடுத்து வந்திருப்பார்கள் ஆனால் அவை முடிவடைந்த நிலையில் அவர்களால் அங்கு தங்கியிருக்க முடியாது.
பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டுள்ள யால பகுதியின் வலயம் ஒன்று 1401.01 ஹெக்டெயர் பரப்பைக் கொண்டிருந்த போதும் இராணுவத்தினரால் யாலப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளை ஏன் கண்டுபிடிக்க முடியாது உள்ளது என்பது தொடர்பாக மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
யால பகுதி 5 வலையங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் வலயம் இரண்டு 201 ஹெக்டெயர் பரப்பையும், வலயம் மூன்று 407 ஹெக்டெயர் பரப்பையும், வலயம் நான்கு 6,655 ஹெக்டெயர் பரப்பையும், வலயம் ஐந்து 264 ஹெக்டெயர் பரப்பையும் கொண்டுள்ளது. இதில் வலயம் இரண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடும் நோக்குடன் அபிவிருத்தி செய்யப்படுகின்றது.
வன்னிப் பகுதி படை நடவடிக்கையை பொறுத்த வரையில் இராணுவத்தின் சிறப்புப் படையணிகள் மடுப் பகுதி நோக்கி முன்நகர முற்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைகளை வவுனியா பிராந்தி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய, 57 ஆவது படையணி கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெகத் டயஸ் ஆகியோர் வழிநடத்தி வருகின்றனர்.
வவுனியா மற்றும் மன்னார் வடக்குப் புறங்களில் நடைபெறும் மோதல்களை விடுதலைப் புலிகளின் கட்டளைத் தளபதிகளான கேணல் ஜெயம் மற்றும் லக்ஸ்மன் ஆகியோர் வழி நடத்துகின்றனர். கிளிநொச்சியில் இருந்து மேலதிக உறுப்பினர்களை அனுப்பும் படியும் அவர்கள் கோரியுள்ளனர். படையினர் சிறு சிறு குழுக்களாக மடு, பாலமோட்டை, பெரியதம்பனை, பெரியமடு, விளாத்திக்குளம் பகுதிகளில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுடன், கடந்த ஞாயிற்றுகிழமை இந்த பகுதிகளில் மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்த மோதல்களில் இரு படையினர் கொல்லப்பட்டதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் குழுக்கள் உறங்கு நிலையில் உள்ளதாகவும், அவர்கள் எந்த நேரமும் செயலில் இறங்கலாம் எனவும் படையினரின் புலனாய்வுதுறை எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இராணுவம் அந்த பகுதிகளில் பாதுகாப்புக்களை பலப்படுத்தியதுடன், அதிக படையினரையும் சுற்றுக்காவல் மற்றும் தேடுதல்களில் ஈடுபடுத்தி வருகின்றது.
சிறிலங்காவிற்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்காது என்று ஊடகங்கள் தெரிவித்து வரும் நிலையில் கடந்த 9 ஆம் நாள் சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றொபேட் ஓ பிளேக் கொழும்பில் வைத்து ஒரு தொகுதி ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளார். ராடர்களை கொண்டுள்ள கண்காணிப்பு படகுகள், அதிவேக படகுகள் என்பன இந்த ஆயுதத் தொகுதியில் அடங்கும். சிறிலங்கா அரசு சார்பாக இந்த ஆயுதத் தொகுதியை கடற்படை தளபதி றியர் அட்மிரல் வசந்த கரன்னகொட பெற்றுக்கொண்டார்.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அதிகாரத்தின் சரத்து 1206 இற்கு அமைய இந்த ஆயுதங்கள் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இவை ஆழ்கடல் கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும். விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை கண்காணிப்பதற்கே இந்த படகுகள் வழங்கப்பட்டுள்ளதாக இந்த வைபவத்தில் பேசிய அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசு இனப்பிரச்சினைக்கு பேச்சுக்கள் மூலம் தீர்வுகாண வேண்டும் எனவும், மனித உரிமைகளை முழுமையாக மதிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.