Wednesday, November 07, 2007

தமிழீழ விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துவோர் அஞ்சும் வகையில் ஒரு எழுச்சி உருவாக வேண்டும்:கொளத்தூர் தா.செ.மணி வலியுறுத்தல்

[புதன்கிழமை, 07 நவம்பர் 2007]
தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துவோர் அஞ்சும் வகையில் ஒரு எழுச்சி உருவாக்கப்பட வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரவணக்க நிகழ்வுக்குத் தலைமை வகித்தும் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனின் படத்தை திறந்து வைத்தும் கொளத்தூர் தா.செ.மணி பேசியதாவது:

சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் அவரோடு மறைந்த தோழர்களுக்கு எமது வீரவணக்கங்கள்.

தமிழீழ விடுதலைப் போரில் முதல் களப்பலியான சத்தியநாதனின் முதலாமாண்டு நினைவு சுவரொட்டி வெளியிட்டபோதே ஒவ்வொரு தோழர்கள் சாகிறபோதும் நாங்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கிறோம்- ஆனால் இரத்தம் சிந்தாமல் விடுதலை இல்லை என்று விடுதலைப் புலிகள் பதிவு செய்தனர்.

பிரபாகரனின் நெஞ்சில் நிறைந்த சீலன் இறந்தபோதும் போராளிகள் மட்டும் நடத்திய போரை பொதுமக்களையும் இணைத்து நடத்திய பண்டிதர் இறந்த போதும் இந்தியாவின் நயவஞ்சகத்தால் குமரப்பாவும், புலேந்திரனும் கொல்லப்பட்டபோதும் கப்பலோட்டிய தமிழனைப்போல் விமானம் ஓட்டிய தமிழனாக சங்கர் மறைந்தபோது திலீபன், கிட்டு, பாலசிங்கம் மறைந்த போதும் கவிழ்த்த துப்பாக்கியையும் அதன்மீது தொப்பியையும் வைத்து "அழுவதற்காக அமைக்கப்பட்ட சமாதி அல்ல உறுதியின் உறைவிடம் இது" என்று எழுதியவர்கள் புலிகள்.


இப்போது சமரசப் பேச்சுவார்த்தைக்குத் தலைமையேற்ற ஒரு அரசியல் தலைவனை குறிபார்த்து வீசினோம் என்று சிங்களம் ஒப்புக் கொண்டிருக்கிறது. அதுவும் சு.ப.தமிழ்ச்செல்வனை கொல்வதற்குரிய முதல் நபராக வைத்திருந்தோம் என்று சொல்கிறார்கள். இதனைத்தான் உலக நாடுகள் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று சொல்லுகிறோம். இதுவரை ஒரு சிங்களக் குடிமகனை புலிகள் சுட்டதும் கொன்றதும் இல்லை.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கூட புலிகள் அவர்களாகவேதான் அறிவித்தனர். புலிகள் யுத்த நிறுத்தம் அறிவித்ததும் ஒரு கிறிஸ்துமஸ் நாளில். அதே போல் ஒரு கிறிஸ்தமஸ் நாளில்தான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வழிபாட்டுத் தலத்திலே வைத்து சிங்களவர்கள் படுகொலை செய்தனர். ஆனால் அப்படிப் படுகொலை செய்தவர்களை பயங்கரவாதிகள் இல்லை என்கிறார்கள்.

செஞ்சோலைக்குள்ளே அப்பாவிச் சிறார்கள் படுகொலை செய்யப்பட்ட பிறகும்கூட போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவராக இருந்த உல்ப் ஹென்றிக்சன் கேட்டதற்காக அந்தக் கோர சம்பவத்திற்கு அடுத்த ஐந்து நாட்களிலே சிறிலங்கா காவல்துறையினரை விடுதலை செய்தவர்கள் புலிகள்-

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் துப்பாக்கியைக் கீழே போட்டுவிட்டு அரசியல் பணிகளைச் செய்த கௌசல்யனைக் கொன்றவர்கள் சிங்களவர்கள். ஆனால் அவர்களை இந்த உலகம் பயங்கரவாதிகளாக சொல்லவில்லை.

ஆனால் அப்படி எதுவுமே செய்யாத புலிகளை பயங்கரவாதிகளாகச் சொல்கிறார்கள்.

இராணுவ இலக்குகள் தான் எங்கள் இலக்கு என்று தாக்கியவர்கள் புலிகள். ஆனால் சமாதான செயலகத்திற்கு பக்கத்திலேயே குண்டு வீசி கொல்கிறது சிங்களம்.

இந்த நிலையில் இங்கே நாம் நமது கடமையாக எதனை செய்வது?

புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்பதை அனைத்துலகம் ஒப்புக்கொள்ளச் செய்ய வேண்டும். நமக்கு அந்த ஆற்றல் இல்லையெனில் இந்திய அரசானது சிங்கள இராணுவத்துக்கு ஆயுதங்களையும் பயிற்சிகளையும் கொடுக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒரு விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துவோர் அஞ்சும் வகையில் ஒரு எழுச்சி உருவாக்கப்பட வேண்டும்.

இப்போது நாங்கள் தொடங்கியிருக்கிற கையெழுத்தியக்கம் என்பது வெறும் கையெழுத்துப் பெறுவது மட்டுமல்ல. நாம் வழங்குகிற துண்டறிக்கைகள் நாம் நடத்தும் தெருமுனை கூட்டங்கள் மூலமாக மக்களிடம் விளக்கங்களை முன்வைப்போம்.



தமிழ்நாட்டில் ராய்ட்டர்ஸ், பி.ரி.ஐ., யு.என்.ஐ. போன்ற செய்தி நிறுவனங்களின் செய்திகளை அப்படியே போட்டு வந்தவர்கள் இப்போது சிறிலங்கா துணைத் தூதுவராக இருக்கின்ற அம்சா கொடுக்கின்ற செய்திகளைத்தான் போடுகிறார்கள். ஜனநாயகத்தின் நான்காம் தூண்களாக இருக்க வேண்டியவர்கள் ஐந்தாம் படைகளாக இருக்கிறார்கள். அப்படியான ஊடகங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அல்லது புறக்கணிப்புகளை நாம் செய்ய வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் இறந்துவிட்ட தலைவர்களுக்கு நாம் மேற்கொள்ளும் வீரவணக்கமாக இருக்கும்.

ஜெனீவாவில் நடந்த சமரசப் பேச்சின் நிறைவிலே "விடுதலையின் வாசலில் நிற்கிறோம். நீண்ட நேரம் வாசலில் நிற்கவும் முடியாது" என்று சு.ப. தமிழ்ச்செல்வன் கூறினார்.

அந்த விடுதலைப் போரை நசுக்கும் சிங்கள இராணுவத்துக்கு ஆயுத உதவிகள் வழங்காமல் இந்திய அரசுக்கு நெருக்குதல் கொடுப்பதும் இங்குள்ள அரசியல் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதும்தான் நாம் செய்ய வேண்டிய பணிகளாகும் என்றார் கொளத்தூர் மணி.

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் பேசியதாவது:

மறைந்த சு.ப.தமிழ்ச்செல்வனை 1985 ஆம் ஆண்டிலிருந்து நான் அறிவேன். தம்பி பிரபாகரனுக்கு துணையாக செயற்பட்ட போது முதல் ஒவ்வொரு கட்டத்திலும் அவரை நான் கவனித்திருக்கிறேன். பிரபாகரனின் முழுமையான நம்பிக்கை பெற்றவரான சிறந்த தளபதியாக வெவ்வேறு களங்களில் வெற்றிக் கொடிநாட்டியவராக மட்டுமில்லாமல் இராஜதந்திர களத்திலும் வல்லவராக சு.ப.தமிழ்ச்செல்வன் திகழ்ந்தார்.

இளம் வயதில் சிறந்த இராஜதந்திரியாக விளங்கி சமரசப் பேச்சுக்களை நடத்தியவர். சிரித்த முகமாக சமரச பேச்சுக்களில் நம் தரப்பு நியாயத்தை பிறர் மனம் ஈர்க்குமளவுக்கு செய்தவர். பொதுவாக தமிழர்களில் அனைத்துலக அரங்கத்தில் இராஜதந்திர திறமை படைத்தவர்கள் மிகக் குறைவு. அன்ரன் பாலசிங்கமும், பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வனும் அந்தக் கலையில் சிறந்து விளங்கிய தமிழர்களாக இருந்தனர். இதற்கு முன்னால் நடந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்தியாவின் ஹைதரபாத் சமஸ்தானப் பிரச்சினை வந்தபோது இந்தியப் படை புகுந்து சமஸ்தானத்தை பிடித்து இந்தியாவுடன் இணைத்தது.

ஐ.நா. பேரவையில் பாகிஸ்தான் , அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் அதனை ஆக்கிரமிப்பு என்று கூறி தீர்மானம் கொண்டுவந்த போது சர்தார் படேலும் பிரதமராக இருந்த நேரும் ஏ. இராமசாமி முதலியார் என்கிற தமிழரைத்தான் அனுப்பினார்கள்.

ஐ.நா.வுக்குச் சென்ற அவர் இந்தியாவின் நடவடிக்கை "இராணுவ" நடவடிக்கை அல்ல- காவல்துறை நடவடிக்கை என்று வாதாடி அந்தத் தீர்மானத்தை தோற்கடிக்கச் செய்தவர். அவருக்கு அப்போது 72 வயதுக்கும் மேல் இருக்கும். அவர் நன்கு அனுபவம் பெற்றவர். ஆனால் சு.ப. தமிழ்ச்செல்வன் இளவயதிலே அந்தத் தகுதியைப் பெற்றிருந்தார்.

"அவனை வளர்த்தெடுத்தேன். ஆனால் வீணாகவில்லை. நம் இலட்சிய தீபத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தவன்" என்று பிரபாகரன் மனம் உருகிச் சொன்ன அந்த தமிழ்ச்செல்வனை நாம் வஞ்சகத்தின் மூலம் இழந்திருக்கிறோம்.

யார் உலகெங்கும் சமாதானத் தூதுவராக சமாதானப் புறவாகச் சென்று ஆதரவு திரட்டினாரோ-

யார் சந்திரிகாவோடும் நோர்வே உள்ளிட்ட நாடுகளோடும் பேச்சுக்களை நடத்தினாரோ-

யார் எதிரிகளைக் கூட இன்முகத்தோடு சந்தித்து உரையாடினாரோ

அந்த சமாதான தூதுவரை சிங்கள வெறியர்கள் கொன்றொழித்தன் மூலம் சிங்களப் பேரினவாத அரசு எந்த ஒரு சமாதான முயற்சிக்கும் தயாராக இல்லை என்பதை அறிவித்துவிட்டது

சிங்களம் வெளிப்படுத்திய இந்தச் செயலுக்கு அனைத்துலக சமூகத்தின் பதில் என்ன? அது தெரிந்தாக வேண்டும். இந்தக் கொடூரமான கொலைக்கு அனைத்துலக சமூகம் எப்படி கண்டிக்கப் போகிறது? அது தெரிய வேண்டும்.

அனைத்துலக நாடுகள் இருக்கட்டும். இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

நோர்வே நடத்தும் பேச்சுக்கு இருதரப்பும் ஒத்துழைக்க வேண்டும். அதற்கு ஒத்துழைப்போம் என்று சொன்னது இந்தியா. அந்த சமரசப் பேச்சில் ஈடுபட்ட ஒரு தரப்பின் தலைவரை வஞ்சகமாக சிங்களம் கொன்றபோது எத்தனை கடுமையான வார்த்தைகளில் இந்தியா கண்டித்திருக்க வேண்டும். ஆனால் வாயே திறக்கவில்லையே. புத்தரும் மகாவீரரும் அசோகனும் பிறந்த நாடு என்று பெருமை பேசுகிற இந்தியா வாயே திறக்கவில்லை.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டபோது-

ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டபோது-

செஞ்சோலையிலே பிஞ்சுகள் படுகொலை செய்யப்பட்டபோது

வாய் திறக்காத இந்தியா, அந்தக் கொலைகளைச் செய்த சரத் பொன்சேகா மீது குண்டு வீசியபோது கண்டிக்கிறது

என்னய்யா தமிழனுக்கு ஒரு நீதி! சிங்களவனுக்கு ஒரு நீதி! இதுதான் இந்திய அரசின் போக்கா?

தமிழ்நாட்டு முதலமைச்சர் இரங்கல் கவிதை தெரிவித்துள்ளார். அதற்குப் பாராட்ட வேண்டும். அவர் டில்லியை எச்சரித்திருக்க வேண்டும். இந்தியாவின் இராணுவ உதவியை நிறுத்த வேண்டும் என்று அவர் சொல்லியிருக்க வேண்டும். என்றாலும், அவர் கவிதை எழுதியதற்காகப் பாராட்ட வேண்டும்.

ஒரு இரங்கல் கவிதை தெரிவித்ததற்காக ஒரு அம்மையார் கண்டனம் தெரிவிக்கிறார். அவர் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் தமிழகத்தைச் சேர்ந்த ஜெயந்தி. மற்றொருவர் ஜி.கே. வாசன் - நீங்கள் இரண்டு பேரும் பேசக் கூடாது. உங்களுக்கு அந்த யோக்கியதையும் தகுதியும் இல்லை.

இதே ஜெயந்தி நடராஜன் தான், அன்று ராஜீவ்காந்தி சிறீபெரும்புதூர் வந்தபோது சென்னை வானூர்தி நிலையத்திலிருந்து ஒருகணம் கூட நகராமல் இருந்தவர். ஆனால் குண்டுவெடிக்கிற போது ஆளைக் காணவில்லை. உண்மையான தொண்டனாக இருந்திருந்தால் ராஜீவுக்கு ஆபத்து என்று தெரிந்தபோது உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றியிருக்க வேண்டும்.

தங்கள் உயிரைக் காக்க ஓடிப்போனவர்கள் எல்லாம் இப்போது ஒப்பாரி வைக்க வந்துவிட்டார்கள்!

தமிழக முதல்வர் கவிதை எழுதிவிட்டார் என்பதற்காக அவரை பாய்ந்து பிடுங்குகிறார்கள்!

சரி இன்னொரு அம்மையார்-

அந்த அம்மையாருக்கு பதவி பறிபோன ஆத்திரம்தான் இருக்கிறது- வெளி உலகத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

என்னுடைய காலத்திலேயே விடுதலைப் புலிகளை அடக்கி வைத்திருந்தேன் என்று சிறுபிள்ளை மாதிரி பேசுகிறார்.

அனுராதபுரத்திலே 25 இராணுவ வானூர்திகளை அழித்து நொறுக்கிய அந்த விடுதலைப் புலிகளை சென்னையிலே அரண்மனை வீட்டிலே இருந்து கொண்டு ஒடுக்கிவிட்டேன் என்று சொல்வது கேவலமாக இருக்கிறது. அப்படிப் பேச வெட்கமாக இல்லையா?

புலிகளைக் கண்டு சிங்கள இராணுவம் நடுநடுங்குகிறது. இந்தியா போன்ற நாடுகள் நடுங்குகின்றன. ஆனால் தன் உயிருக்காக காவல்துறையின் பாதுகாப்பு கேட்கிற ஒருவர் அந்தப் புலிகளை ஒடுக்கிவிட்டேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

இதே நேரத்தில் இன்னொரு அம்மையார் சொன்னதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

அமெரிக்காவில் வரப்போகிற அரச தலைவர் தேர்தலிலே வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிற ஹிலாரி கிளிண்டன், அண்மையில் லண்டன் ரைம்சுக்கு அளித்த பேட்டியில் எல்லோரையும் நீங்கள் பயங்கரவாதிகள் என்று பட்டம் சூட்டி ஒழிப்பதற்கு முயற்சி செய்யாதீர்கள். உதாரணமாக இலங்கையில் போராடும் புலிகள் மக்களுக்காக போராடுகிறவர்கள் என்று கூறினார். ஆனால் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுகிற நம்முடைய ஜெயலலிதா அம்மையார் புலிகளை ஒடுக்கிவிட்டேன் என்கிறார்.

சு.ப.தமிழ்ச்செல்வனைப் போன்ற வீரர்கள் மாவீரர்களாகி தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழரின் வரலாற்றில் இதனைப் போன்று வீரஞ்செறிந்த போராட்டத்தை தமிழர்கள் சந்திக்கவில்லை. அந்தப் போராட்டத்துக்கு அனைத்து வகையிலும் உதவியாக நிற்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

21ஆம் நூற்றாண்டில் தமிழர்களுக்கு ஒரு அடையாளத்தை ஒரு மரியாதையை உலக அரங்கில் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள். அவர்களின் தியாகமும் வீரமும் பெரும் மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இலங்கையில் செய்திக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செய்தியைத்தான் இங்குள்ள ஏடுகள் வெளியிடுகின்றன. அதுவும் நமக்கு எதிராக செய்திகளைப் போடுவதையே வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் அந்த சிங்கள அரசாங்கத்தின் செய்திக்கே முக்கியத்துவம் கொடுத்துத்தான் வெளியிடுகின்றனர்.

கடந்த 6 மாதங்களிலே இந்து பத்திரிகையில் சிங்கள அரசாங்கம் கூறியபடி இறந்த புலிகளின் எண்ணிக்கையைப் பார்த்தால் பிரபாகரன் மட்டும்தான் இப்போது அங்கிருக்க வேண்டும்.

இன்னொரு பக்கத்தில் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே என்ற அமைச்சர் அடிக்கடி சொல்லுகிறார்- பொங்கல் நாளில் சுதந்திரப் பிரகடனம் வெளியிடப் போகிறார்கள் என்று. புலி வருகிறது புலி வருகிறது என்று கூறினால் புலி ஒரு நாள் வந்துவிடும்.

பிரபாகரன் தனிநாடு பிரகடனம் செய்தால் என்ன தவறு? அங்கே சுதந்திர அரசாங்கம் நடந்து கொண்டிருப்பதை உலக நாடுகள் அறிந்திருக்கின்றன. வரலாற்றிலே நேதாஜி, ஹோசிமின், யாசர் அராபத் ஆகியோரும் தனிநாட்டுப் பிரகடனங்களைத்தான் வெளியிட்டனர்.

எந்த நேரத்தில் எதைச் செய்வது என்பது பிரபாகரனுக்குத் தெரியும். ஆனால் அத்தகைய ஒரு பிரகடனத்தை பிரபாகரன் வெளியிடும்போது எவராலும் அதனைத் தடுக்க முடியாது.

ஒரு சு.ப. தமிழ்ச்செல்வனை வீழ்த்திவிட்டதாலே போராட்டம் பின்னுக்குப் போய்விடாது. அந்த தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து
ஓராயிpரம் வீரர்களும் யுவதிகளும் பிறப்பெடுத்து இந்தப் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்றார் பழ. நெடுமாறன்.

நிகழ்வின் இறுதியில்

வீரவணக்கம்
வீரவணக்கம்

எங்கள் தோழர்
தமிழ்ச்செல்வனுக்கு
வீரவணக்கம்!

புதைக்கவில்லை
புதைக்கவில்லை

எங்கள் தோழர்
தமிழ்ச்செல்வனை
நாங்கள்
புதைக்கவில்லை

விதைக்கின்றோம்
விதைக்கின்றோம்
எங்கள்
விடுதலை வீரனை விதைக்கின்றோம்!

வீரவணக்கம் செய்கின்றோம்
வீரவணக்கம் செய்கின்றோம்
சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட
எங்கள் தமிழ்ச்செல்வனுக்கு
வீரவணக்கம் செய்கிறோம்!

வீரவணக்கம் வீரவணக்கம்
எங்கள் தோழர்
தமிழ்ச்செல்வனுக்கு
வீரவணக்கம்

என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நன்றி:புதினம்

1 comment:

  1. ஒலி வடிவம்
    http://thenseide.com/cgi-bin/TamilSelvan061107.asp

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.