[ஞாயிற்றுக்கிழமை, 18 நவம்பர் 2007] சிறிலங்கா அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தால் அனைவரும் படுகொலை செய்யப்படுவார்கள் என்று துணை இராணுவக் குழுவின் மூலமாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அச்சுறுத்தல் விடுத்துள்ளார். (2 ஆம் இணைப்பு: நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி வழங்கிய நேர்காணல்) இதன் முதல் கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி கதிர்காமர், ரி.கனகசபை, பி.அரியநேந்திரன் ஆகியோரது பாதுகாப்புக்களை மகிந்த ராஜபக்ச விலக்க உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பில் உள்ள தங்கேஸ்வரி கதிர்காமரின் முதன்மை பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து பாதுகாப்பு விலக்கப்பட்ட உடனேயே துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஐந்து பேர் உந்துருளிகளில் அங்கு சென்றுள்ளனர். அங்கிருந்த தங்கேஸ்வரி கதிர்காமரின் செயலாளரை உயிரோடு எரித்து விடுவோம் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பி.அரியநேந்திரனின் பிள்ளைகளைக் கடத்துவோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர். இதனையடுத்து மட்டக்களப்பில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான ரி.கனகசபையின் வீட்டுக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் அத்துமீறி உள்நுழைந்து அவரது மருமகனான ஆசிரியர் தொழில் செய்யும் எஸ்.சஜிதீரனை (வயது 37) பிள்ளையான் குழுவினர் கடத்திச் சென்றுள்ளனர். மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நாளை ரி.கனகசபை வாக்களித்தால் எஸ்.சஜீதரன் கொல்லப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளனர். இதனிடையே முல்லைத்தீவு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினத்தின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் கொழும்பு ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இக்கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பாக இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ரோர் ஹட்ரெம், இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் லார்ஸ் சொல்வ்பேர்க் ஆகியோரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் சீவரத்தினம் புலித்தேவன் அவசரமாகத் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இத்தகைய சம்பவங்கள் குறித்த தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பா. நடேசனின் அதிர்ச்சி மற்றும் கவலையையும் நோர்வேத் தூதுவர் மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரிடம் சீ.புலித்தேவன் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் 2005 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2007 ஆம் ஆண்டில் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் ஆகியோர் சிறிலங்கா இரானுவத்தின் பாதுகாப்பில் உள்ள பகுதிகளில் படுகொலை செய்யப்பட்டபோதும் அனைத்துலக சமூகம் கண்டு மௌனம் காத்தது. ஆகையால்தான் தற்போதைய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் சீவரத்தினம் புலித்தேவன் சுட்டிக்காட்டியுள்ளார். துணை இராணுவக் குழுவினரின் அச்சுறுத்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி எமது "புதினம்" நிருபருக்கு அளித்த நேர்காணல்: நாடாளுமன்றில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக துணை இராணுவக் குழுவினரினூடே மகிந்த ராஜபக்ச இத்தகைய ஒரு செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தொலைபேசியூடே இத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றில் மகிந்த ராஜபக்சவின் வரவு-செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காது விட்டால் கனகசபையின் மருமகனை மாலை 6:00 மணிக்குப் பின்னர் விடுவிப்பதாகவும் கூறியுள்ளனர். எமது உறவினர்களினூடே எமக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. துணை இராணுவக் குழுவினரை பகிரங்கமாக ஏவிவிட்டுள்ளதன் மூலம் மகிந்த ராஜபக்சவுக்கும் அக்குழுவினருக்கும் இடையேயான தொடர்பும் அம்பலமாகியுள்ளது. மகிந்த ராஜபக்சவின் இந்த செயற்பாடு குறித்து இந்தியா, நோர்வேத் தூதுவர்களுக்கும் அனைத்துலக சமூகத்தினருக்கும் நாம் தெரியப்படுத்தியுள்ளோம் என்றார் அவர்.
Sunday, November 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.