Monday, November 19, 2007
"வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பை மக்கள் தவறாது பார்க்க வேண்டும்"
[திங்கட்கிழமை, 19 நவம்பர் 2007]
நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெறும் வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்பு எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை மக்கள் அனைவரும் தொலைக்காட்சியில் பார்வையிட வேண்டும். பயங்கரவாத உத்திகளைப் பயன்படுத்தி நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இருந்து அரசு தப்பிக்க முயற்சிக்கின்றது என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அதுருகிரியவில் "ஜனதா தோசபியோகயா" எனும் முறைப்பாட்டை வெளியிட்டு பேசும் போது ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது:
"கோப்" அமைப்பின் தலைவரின் இல்லத்தை சிறப்பு அதிரடிப்படையினர் சூழ்ந்து நிற்பது அது நன்றாக செயற்படுவதை தெளிவாக காட்டுகின்றது. அரசு தனது ஊழல்களை மறைப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவை "கோப்" அமைப்புக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வன்னியைக் கைப்பற்றி எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் நாள் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது 2008 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்புச் செலவுக்கு அதிக நிதியை ஒதுக்கி மக்களை அது ஏமாற்றி வருகின்றது. தேவையற்ற செலவுகளுக்கும் அரசு அதிக நிதிகளை ஒதுக்கி வருகின்றது.
செலவுகளைக் கட்டுப்படுத்தும் ஆளுமை அரசிடம் இல்லை. ஜனதா தோசபியோகயாவுக்காக 5 மில்லியன் கையொப்பங்கள் பெறப்பட்டதும், மக்கள் வீதிக்கு இறங்குவதற்கு தயாராக வேண்டும். மக்களின் அழுகுரல்களுக்கு காது கொடுக்காத நிர்வாகத்தை நாம் தோற்கடித்து, மக்கள் அரசை நிறுவுவோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இராப்போசன விருந்து நேற்று இரவு பிளவர் வீதியில் உள்ள அதன் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாகல ரட்னாயக்காவின் இல்லத்தில் நடைபெற்றது.
இன்றைய வரவு-செலவுத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் பொருட்டே இந்த விருந்துபசாரம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.