Friday, November 16, 2007

விதைக்கப்பட்ட தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம்: "அறிவுக்கொடி" தலையங்கம்

[வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007]


விதைக்கப்பட்ட தமிழ்ச்செல்வனுக்கு வீரவணக்கம் என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் திராவிடர் இயக்க இதழான "அறிவுக்கொடி" தலையங்கம் எழுதியுள்ளது.
"அறிவுக்கொடி" மாதமிருமுறை இதழில் (16-30 நவம்பர் 2007) ஆசிரியர் நா.கந்தன் எழுதியுள்ள தலையங்கம்:

ஈழம்- கிளிநொச்சியில் 02.11.2007 அன்று காலை சிங்கள இராணுவத்தினர் நடத்திய விமானப்படைத் தாக்குதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர், சு.ப.தமிழ்ச்செல்வனும் மற்றும் விடுதலைப் புலிகளின் 5 தளபதிகளும் கொல்லப்பட்டனர் என்ற செய்தி நம்மை அடைந்தபோது நம் இதயத்தில் இடிவிழுந்து இரத்தம் வடிந்தது, உடல் உறைந்து போகும் தன்மையை அடைந்தோம்.

இலங்கை சிங்கள இன அரசுக்கும் தமிழீழ அரசுக்கும் நடந்த 6 சுற்றுப் பேச்சுவார்த்தையிலும் ஜெனீவாப் பேச்சுவார்த்தையிலும் சு.ப.தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டு பேச்சுவார்த்தையின் மூலம் இனப்பிரச்சனையைத் தீர்க்க முயற்சி செய்த ஒரு மாபெரும் தலைவர்.

அப்படிப்பட்ட ஒரு தலைவரைக் குறிவைத்துக் கொன்றது என்பது அமைதிப் பேச்சுவார்த்தையையும் சமாதான முயற்சிகளையும் கொன்றதாகவே கருத முடியும்.

நோர்வே நாட்டின் முயற்சியால் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எல்லாம் முதிர்ச்சி பெற்ற தலைவனாக, சமாதானப் புறாவின் செயல்பாடாக 40 வயது இளைஞர் தமிழ்ச்செல்வன் ஈடுபட்டது, உலகம் முழுமையுமுள்ள அறிவுஜீவிகளின் உலகம் வியந்து பார்த்தது. அன்டன் பாலசிங்கம் மறைவிற்குப் பிறகு தம்பி வேலு பிரபாகரன் அவர்களுக்கு அடுத்தத் துணையாகவே தமிழ்ச்செல்வன் விளங்கினார்.

தமிழ்ச்செல்வனைக் கொன்றதன் மூலம் இராணுவத் தீர்வில் சிங்கள அரசு நம்பிக்கை கொண்டுள்ளது, பேச்சுவார்த்தைக்குத் தாங்கள் தயார் என்று கூறுவதெல்லாம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் சிங்கள அரசின் கபட நாடகம் என்பதைப் பலநூறு முறை நிரூபித்துள்ளதை தொடர்ந்து இப்போதும் உறுதிபடுத்திவிட்டனர். போர் வெறியையும் கோழைத்தனமான நீசத்தனமான காட்டுமிராண்டித் தன்மைகளின் உச்சத்திலும் மட்டுமே செயல்பாடுகளை வகுத்துக் கொண்டுள்ளனர்.

ஏன் இவ்வளவு கடுமையான வார்த்தைகளைப் போடுகிறீர்கள், காலமாறுதல், இலக்கில் வெற்றியை அடையும்போது பாகிஸ்தான் - வங்காள தேசம் போல் சகோதர நாடுகளாக வாழப் போகிறவர்கள் தானே, நீங்கள் ஏன் ரத்தக் கொதிப்பை அதிகப்படுத்திக் கொள்கிறீர்கள் என்று நீங்கள் நினைப்பதை நான் அறிவேன். 25 ஆண்டுகளாகச் சிங்களர் அரசு நம் தமிழர்களைக் கொடுமைப்படுத்தியதை- கொடுமைப்படுத்திக் கொண்டிருப்பதைப் போல் உலகத்தின் எந்த இனத்திற்கும் இவ்வளவு கொடுமைகள் நடக்காது. அண்மையில் இலங்கையில் நடந்த ஒரு கொடுந்துயரத்தை மட்டும் படியுங்கள் நீங்கள் இரத்தக் கண்ணீர் வடிப்பீர்கள்.

"அனுராதபுரம் வான் படைத்தளத்தின் மீது வெற்றிகரமான தாக்குதல் நடத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 21 மாவீரர்களின் உடல்களை நிருவாணமாக்கி குப்பை வண்டிகளில் ஏற்றி நகரெங்கும் ஊர்வலமாகச் சிங்கள இராணுவத்தினர் கொண்டு சென்றுள்ளனர்"

உலகத்தில் எங்காவது இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனம் உண்டா? அத்தாக்குதலில் உயிர் இழந்த 21 புலிகளின் உடல்களை இழிவுபடுத்திய விதம் உலகெங்கும் பெரும் கண்டனத்தை எழுப்பியுள்ளது.

ஐ.நா. பேரவையின் மனித உரிமைகள் ஆணையருக்குப் பல்வேறு நாடுகளிலிருந்து முறையீடுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தாய்த் தமிழகத்தில் வாழும் நம்முடைய நிலை என்ன? தமிழ்ச்செல்வன் குறிவைத்துக் கொல்லப்பட்டவுடன் தமிழகத்தின் பல அரசியல் கட்சித் தலைவர்கள், கலையுலகத்தைச் சார்ந்தவர்கள் தமிழ் அறிஞர்கள், துக்கத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இரங்கல் தெரிவிக்கிறார்கள். சிங்கள இராணுவத்தின் செயலைக் கண்டிக்கிறார்கள்.

தமிழ் இனத்தலைவர் முத்தமிழறிஞர் தமிழக முதல்வர், தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்ட செய்தி கேட்டு தனக்கு ஆறுதல் தேடிக் கொள்ளவும் தமிழர்களுக்கு ஆறுதல் கூறவும் கவிதாஞ்சலி படைத்தார்.

தமிழ்நாட்டின் கேடு கெட்ட நிலை, எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா அறிக்கை விடுகிறார். இரங்கல் தெரிவித்தது மாபெரும் குற்றம். ஆகவே முதலமைச்சர் உடனே பதவி விலக வேண்டும் என்கிறார்.

அவருக்குத் துணையாக "கோட்சே"யை வழிபடும் "சோ" என்கிற இராமசாமி பார்ப்பன், சுப்பிரமணியசாமி பார்ப்பனர், குமாரதேவன் என்கிற பார்ப்பனதாசர்.

ஒரு தமிழன் சாவுக்கு இரங்கல் தெரிவிப்பதை எதிர்த்து அரசியல் நடத்தும் இந்தப் பார்ப்பனக் கூட்டத்தை கண்டு நாம் வெட்கப்படவில்லை. வேதனைப்படவில்லை. தலைகுனியவில்லை. இந்தப் பார்ப்பனக் கூட்டத்திற்குப் பின்னாலும் சில தமிழர்கள் இருக்கிறார்கள் என்றுதான் வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம். தலை குனிகிறோம். இன உணர்வு அற்ற தமிழ்ச் சமுதாயத்தை நேர்படுத்த நெறிபடுத்த எத்தனை பெரியார் தோன்ற வேண்டுமோ?

ஒரு தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதால் கொக்கரிக்க வேண்டாம். ஆயிரம் தமிழ்ச்செல்வன்கள் தோன்றுவார்கள். யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல...பூமிப்பந்தில் வாழும் தமிழர் இல்லங்களில் எல்லாம் தோன்றுவார்கள். தமிழினத் தாய்மார்கள் ஆயிரக்கணக்கான தமிழ்ச்செல்வனை ஈன்றெடுப்பார்கள். மறைந்த தமிழ்ச்செல்வனுக்கு இருந்த கொள்கை உறுதியை தாம் பெற்றெடுக்கும் தமிழ்ச்செல்வன்களுக்கு ஊட்டுவார்கள். தமிழ் மொழியை அழிக்க முடியாதது போல் தமிழினத்தையும் அழிக்க முடியாது. துரோகங்கள் தெருநாயைப் போல் குரைத்துக் கொண்டேதான் இருக்கும். நமது பயணத்தில் நடுக்கமில்லாமல் தொடருவோம்

தமிழ்ச்செல்வனுக்கும் உடன் மறைந்த தளபதிகளுக்கும்
நமது வீரவணக்கங்கள்

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.