Friday, November 16, 2007

புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துகளை முடக்கியது அமெரிக்கா

[வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007]


தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்கா முடக்கியுள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் உள்ள சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகளை கடந்த 1997 ஆம் ஆண்டிலிருந்து வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பாகவும் 2001 ஆம் ஆண்டிலிருந்து அனைத்துலகப் பயங்கரவாத அமைப்பாகவும் அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக அதன் அனைத்துலக வலையமைப்பிற்கூடாக அமெரிக்காவில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக இராணுவ தளபாடங்கள், தொலைத் தொடர்பு உபகரணங்கள் கொள்வனவு செய்துள்ளமைக்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன.

மனிதநேய அமைப்பாக உலகளவில் காட்டிக்கொண்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகம், அனைத்துலக அளவில் ஆழிப்பேரலை மீள்கட்டமைப்பிற்காக திரட்டிய நிதி தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பை விருத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சியை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, மலேசியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, தென்னாபிரிக்கா, சுவிற்சர்லாந்து, ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட 17 நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது.

இந்த நிலையிலேயே பயங்கரவாத அமைப்புக்களை பொருளாதார ரீதியில் தனிமைப்படுத்தும் நடவடிக்கையின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்காக அனைத்துலக ரீதியில் நிதி திரட்டல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நிறைவேற்று உத்தரவின் 13224 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையிலேயே, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்காவில் உள்ள சொத்துக்களை முடக்குவதற்கு நிதியமைச்சு முடிவு செய்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.