[ஞாயிற்றுக்கிழமை, 04 நவம்பர் 2007]
சென்னையில் முதல்வர் கலைஞர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள கேள்வி பதில் வடிவிலான அறிக்கை:
கேள்வி: தமிழ்ச்செல்வன் மறைவுக்கு நீங்கள் மனிதாபிமானத்துடன் இரங்கல் தெரிவித்ததையொட்டி, ஜெயலலிதா அதற்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து உடனே ஆட்சியைக் கலைக்க வேண்டுமென்று கூறியிருக்கிறாரே?
பதில்: பாவம், ஆட்சியில் இல்லாத காரணத்தால் ஆத்திரத்தில் அல்லற்படுகிறார். எதிர்க்கட்சிக்காரர் ஒருவர் மறைந்தாலே இரங்கல் தெரிவிப்பது மனித நேயப் பண்பாடு என்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் தெரியும்.
அந்த அடிப்படையில்தான் அ.தி.மு.க.விலே இருந்த நாவலர் மறைந்த போது கூட, நான் தேடிச்சென்று அஞ்சலி செலுத்தி விட்டு வந்தேன். இலங்கையிலே கொல்லப்பட்டது ஒரு தமிழன். என் உடலில் ஓடுவது தமிழ் இரத்தம். அதனால்தான் நான் இரங்கல் தெரிவித்தேன்.
ஏன், ஜெயலலிதாவுடன் இன்றளவும் தோழமை கொண்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, ஜெயலலிதா இல்லத்திற்குச் சென்று வந்த ம.தி.மு.க. தலைவர் வைகோ, தமிழ்ச்செல்வன் மறைவுக்காக உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து கண்டிக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்தால் அதற்கு ஜெயலலிதா ஒப்புதல். அதே தமிழ்ச்செல்வன் மறைவுக்காக நான் அறிக்கை விடுத்தால் என்னுடைய ஆட்சியைக் கலைக்க வேண்டுமா? எப்படியாவது ஆட்சி கவிழ்க்கப்படாதா? தான் மீண்டும் ஆட்சிக்கு வந்து சுரண்ட முடியாதா என்று ஜெயலலிதா, தவியாய் தவிக்கிறார். என்ன செய்வது? ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் மக்கள் ஆதரவு வேண்டுமே? என்று கலைஞர் கருணாநிதி அதில் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஜெயலலிதா வெளியிட்டிருந்த அறிக்கை:
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு கருணாநிதி மறைமுகமாக ஆதரவு தருகிறார் என பலமுறை தெரிவித்தேன்.
இதை நிரூபிக்கும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் போர்த்தளபாடங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை புலிகளுக்கு கள்ளத்தனமாக அனுப்பிவைத்ததை காவல்துறையினர் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். ஆனால், அன்று மாலையே அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து முதல்வர் கருணாநிதி மெளனம் சாதித்தார்.
அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு கவிதை வடிவில் அவர் இரங்கல் தெரிவித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி.
1991 இல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணமும், இரகசிய காப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு முதல்வர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சார்ந்தவருக்கு ஆதரவாக கவிதை எழுதி புகழ்ந்துரைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்பதால் திமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும்
விடுதலைப் புலிகள் பிரமுகர் மரணத்துக்கு கவிதை எழுதும் கருணாநிதி, கடந்த 17 மாத ஆட்சியில் எந்த எந்த வகைகளில் இரகசியமாக விடுதலைப் புலிகளுக்கு உதவியுள்ளார் என்பதை கண்டறியும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.
இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிசன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மையக் கருத்து கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் என்று ஜெயலலிதா அதில் தெரிவித்திருந்தார்.
Sunday, November 04, 2007
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் ஏன்?: ஜெயலலிதாவுக்கு முதல்வர் கலைஞர் பதில்
Sunday, November 04, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.