Tuesday, November 20, 2007

16 வாக்குகளில் தப்பியது மகிந்த ராஜபக்ச அரசு

[செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2007] மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் 2008 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் 16 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டத்துக்கு எதிராக 102 வாக்குகள் பதிவாகி உள்ளன. ஆதரவாக 118 வாக்குகள் பதிவாகின. அரச தரப்பிற்கு ஆதரவாக அரச தரப்பில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வாக்களித்தன. வரவு-செலவுத்திட்ட வாக்களிப்பில் தமது பங்கு முக்கியமானது என்று பிரசாரப்படுத்திய ஜே.வி.பி.யினர் வாக்கெடுப்பு நடத்தப்படும் இறுதிக் கணம் வரை தமது முடிவை பகிரங்கப்படுத்தாமல் இருந்து எதிர்த்து வாக்களித்திருந்தனர். 37 ஆசனங்களைக்கொண்ட ஜே.வி.பி. எதிர்த்து வாக்களித்த போதும் ஆளும் தரப்பு வெற்றியீட்டிருக்கின்றது. அதேநேரம், ஜே.வி.பி.யுடன் முரண்பட்டுக்கொண்டிருந்த அக்கட்சியின் உறுப்பினர் நந்தன குணதிலக்கவும் சுதந்திரக் கட்சியின் விஜயதாச ராஜபக்சவும் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மேலக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்தோரும், மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூரியராச்சியும், உடுவே தம்மாலோக்க தேரர் ஆகியோர் வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கனகசபை மற்றும் ஈழவேந்தன் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை. ஈழவேந்தன் புலம்பெயர் நாடு ஒன்றில் தங்கியிருப்பதால் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்க முடியாமற் போய்விட்டதாக கூறப்படுகின்றது. அரச தரப்பு வெற்றி பெற்றதையடுத்து கொழும்பிலும் ஏனைய சில இடங்களிலும் சிங்கள மக்கள் வெடி கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். வரவு-செலவுத் திட்டத்தில் தோல்வியடைந்தமை குறித்து ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் ருக்மன் சேனநாயக்க கூறுகையில், டிசம்பர் 14 ஆம் நாள் நடைபெறும் வரவு-செலவுத்திட்டத்தின் மூன்றாம் நிலை வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் நாம் வெற்றி பெறுவோம். அன்றைய நாள் எமது துருப்புச் சீட்டைப் பயன்படுத்துவோம். அது வரையான காலப்பகுதியில் எதுவும் நடக்கலாம் என்றார். அதேவேளை வரவு-செலவுத் திட்டத்தில் வெற்றியீட்டியமை குறித்து ஜாதிக ஹெல உறுமய அமைச்சர் சம்பிக்க ரணவக்க கருத்து தெரிவிக்கையில், ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும், ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், ஜே.வி.பி.யினரை விட தேசப்பற்றுள்ளவர்களாக விளங்குகின்றமை இன்றைய வாக்கெடுப்பில் நிருபணமாகியிருக்கிறது. வாகரை மற்றும் தொப்பிக்கல மீது இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்திய போது அதனை வரவேற்ற ஜே.வி.பியினர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் இணைந்துள்ளனர் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.