அரசாங்க அணியிலேயே நீடித்திருக்க எனக்கு 5 அமைச்சுக்களை வழங்குவதாக அரச தலைவர் மகிந்த ராஜபக்ச "பேரம்" பேசினார் என்று எதிரணிக்குத் தாவிய விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு வார ஏட்டுக்கு அவர் அளித்த நேர்காணல்:
நான் அரச தரப்பில் இருந்து வெளியேறியதற்கு உடனடியான காரணம் வரவு-செலவுத் திட்டம் சட்டபூர்வமற்றது என்பது தான். 2007 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அரசுக்கு 19 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் நாடாளுமன்றத்தில் அதற்கான எந்த காரணமும் கொண்டுவரப்படவில்லை.
இந்த வருடம் 50 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது இந்த ஆண்டின் மொத்த செலவீனத்தில் 5.47 விகிதமாகும். இந்த நிதி எதற்கு பயன்படப் போகின்றது என்பது தொடர்பாக யாருக்கும் எதுவும் தெரியாது. நாடாளுமன்றத்தினால் அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கே நிதியை செலவிடுதல் முறையானது. ஆனால் இது வெறுமையான காசோலையில் கையொப்பமிடுவது போன்றது. எனவே அது சட்டரீதியற்றது.
கடந்த வருடம் எனக்கு யாரும் ஆதரவு தர முன்வராததால் நான் அதனை எதிர்க்கவில்லை. தற்போதும் நான் தனியாக தான் போராடுகின்றேன். இந்த வருடம் நான் முதிர்ந்த அரசியல்வாதியாகி விட்டேன்.
நான் அரசை விட்டு வெளியேறுவதற்கு 7 காரணங்கள் உண்டு.
உடனடியான காரணமாக 5.7 பில்லியன் ரூபாய்கள் அரச தலைவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும்,
18 பில்லியன் ரூபாய்கள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிடலாம்.
இது 23 பில்லியன் ரூபாய்களை விட அதிகமாகும்.
ஆனால் இதற்கு 5 பில்லியன் ரூபாய்களே போதுமானது என நான் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தேன்.
எனது ஆதங்கம் என்னவெனில் 108 பேருக்கு 23.75 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 9 மில்லியன் சமுர்த்தி நிவாரணம் பெறுபவர்களுக்கு 9.6 பில்லியன் ரூபாய்களே ஒதுக்கப்பட்டுள்ளன.
நாம் ஏன் ஏழைகளுக்கு நன்மைகளை செய்யக்கூடாது? இந்த 108 அமைச்சர்களினால் நாட்டுக்கு என்ன பயன்?
இந்த அரசு ஊழல் மிக்கது. நான் நினைக்கிறேன் பொதுமக்களின் பணத்தில் 30-40 விகிதம் ஊழல்களுக்கு செலவாகின்றது. இந்த விகிதத்தை என்னால் நிரூபிக்க முடியாது. ஆனால் எனது முதாலவது "கோப்" அறிக்கையில் 26 நிறுவனங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுள்ளன. நாட்டில் 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இதில் நாம் 150 பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளோம்.
நாட்டின் வருமானம் 500 பில்லியன் ரூபாய்களே. ஊழல்களில் முன்னைய அரசிற்கும் இந்த அரசிற்கும் வேறுபாடுகள் கிடையாது.
ஊழல் புரிந்துள்ள இரு அமைச்சர்களும் வெளியேற்றப்பட வேண்டும். அவர்கள் ஊழல்கள் புரிந்தது உறுதியாகியுள்ளது.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதனை ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களின் சம்மதத்துடன் அறிக்கை ஊழல் பிரிவு ஆணையகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. நாடாளுமன்றமே இதனை ஏற்றுக்கொண்டுள்ள போது அரசு அவர்களை எவ்வாறு அமைச்சுப் பதவிகளில் தக்க வைத்திருக்கலாம்?
அரச தலைவருக்கும் அமைச்சர்களுக்கும் 5 பில்லியன் ரூபாய்கள் போதுமானது.
2004 ஆம் ஆண்டில் அரச தலைவருக்கான ஒதுக்கீடு 390 மில்லியன் (0.39 பில்லியன்) ரூபாய்களாகும். நாம் தற்போது 2007 ஆம் ஆண்டில் இருக்கின்றோம்.
இந்த அரசின் அதிகப்படியான ஒதுக்கீடுகள் அவர்களின் ஆடம்பரச் செலவுகளுக்கானதே.
அனைத்துக்கட்சிக் குழு செயற்திறன் அற்றது. அது சட்டபூர்வமான கட்டமைப்புக்கள் அற்றுப் பெயரளவில் தான் உள்ளது. அதனை கைவிடும்படி நான் கூறவில்லை. நாம் அனைத்துக்கட்சி குழு நிபுணர்களிடம் இருந்து கருத்துக்களையும், ஆலோசனைகளையும் பெறலாம். ஆனால் அவர்களின் தீர்வுத் திட்டங்களை நாடாளுமன்றம் அங்கீகரிக்காது விட்டால் அந்த திட்டங்கள் குப்பைத் தொட்டியில் தான் போடப்படும். எனவே அது ஒரு கருத்தற்றது.
வரவு-செலவுத் திட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட எனது தற்போதைய நடவடிக்கை பெறுமதி மிக்கது. இதனை நான் ஒரு மாதத்திற்கு முன்னர் மேற்கொண்டிருந்தால் அது பெறுமதியற்றதாகவே இருந்திருக்கும். யாரும் அதனைக் கருத்தில் எடுத்திருப்பார்களா?
வரவு-செலவுத் திட்ட காலம் என்பதனால் எனது கோரிக்கைகளை முக்கியமாக கருதுகின்றனர். அரசைக் கவிழ்ப்பது எனது நோக்கமாக இருந்திருந்தால் நான் அதற்காக நவம்பர் 19 ஆம் நாள் வரை காத்திருந்திருப்பேன். நான் அரசிற்கு விசுவாசம் அற்றவராக இருக்கவில்லை. அவர்கள் நடவடிக்கை எடுப்பதற்கு 6 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளேன்.
எனது கோரிக்கைகளை அரசு கருத்தில் எடுத்தால் நான் அரசில் மீண்டும் இணைவேன். நான் கட்சி தாவவில்லை. எதிர்த்தரப்பு ஆசனத்தில் அமர்ந்துள்ளேன் அவ்வளவு தான். தற்போதும் சுதந்திரக் கட்சி உறுப்பினராகவே உள்ளேன். எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனைத்தான் தெரிவிக்கின்றனர். ஆனால் பலர் பதவிக்காக அரசின் பக்கம் தாவியுள்ளனர். நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு எதிர்த்தரப்புக்கு வந்துள்ளேன்.
மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் அரசில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் நான் அப்படியல்ல. நான் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் என்னை நீக்கக்கூடும் என நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் அப்படியல்ல. அவர்கள் என்மீது ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஆனால் சட்டரீதியற்ற வரவு-செலவுத் திட்டத்திற்கு நான் எவ்வாறு வாக்களிப்பது என்பதே எனது வாதம். அப்படி வாக்களித்தால் நான் எனது உறுதிமொழிகளை மீறியவன் ஆகிவிடுவேன்.
நான் ஐ.தே.க.வில் சேரப்போவதில்லை. ஏன் நான் சேரவேண்டும்? அவர்கள் பதவிக்கு வந்தால் எனக்கு அதிகப்படியாக அமைச்சர் பதவி கிடைக்கலாம். அவர்கள் என்னை இந்த நாட்டின் தலைவராக்கப் போவதில்லை. தற்போதும் மகிந்த ராஜபக்ச எனக்கு 5 அமைச்சுப் பதவிகளைத் தர தயாராக உள்ளார். நான் வெளியேற முன்னர் என்னை அழைத்த மகிந்த ராஜபக்ச, எந்த அமைச்சர் பதவி வேண்டும் என கேட்டிருந்தார். நான் எதனையும் பெறப்போவதில்லை. சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் 2004 ஆம் ஆண்டு எனக்கு அமைச்சுப் பதவி தரப்பட்டது. ஆனால் நான் அதனை விரும்பவில்லை.
நான் சந்திரிகா குமாரதுங்கவின் விசுவாசி எனவும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்க்கப் போவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நான் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கலைத்து சந்திரிகா குமாரதுங்கவை மீண்டும் அரச தலைவராக்க முடியுமா?
எனினும் நான் தற்போதும் சந்திரிகா குமாரதுங்கவுக்கு விசுவாசமாகவே உள்ளேன். அவர் எனது நண்பர். மகிந்த ராஜபக்சவும் எனது நண்பர். அவர் எனது கிராமத்தில் இருந்து வந்தவர். எனவே மகிந்த ராஜபக்சவை விட சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு என்னால் என்ன செய்ய முடியும்?. நான் சந்திரிகா குமாரதுங்கவிற்கு சட்டபூர்வமான உதவிகளை வழங்கியிருந்தேன். ஆனால் மகிந்த ராஜபக்சவுக்கு 1981 ஆம் ஆண்டில் இருந்து எல்லாத் தேர்தல்களிலும் உதவி புரிந்து வந்துள்ளேன்.
எனினும் அவர் தற்போது எமது பேச்சைக் கேட்பதில்லை. அரசில் உள்ள பெரும்பாலான சுதந்திரகட்சி உறுப்பினர்களுக்கு பேசும் சுதந்திரம் கிடையாது. புதிதாக வந்தவர்களே அதிக பேச்சு சுதந்திரத்தை கொண்டுள்ளனர். நான் மட்டுமல்ல பெரும்பாலான உறுப்பினர்கள் இவ்வாறே உணர்கின்றனர்.
அரச தலைவர் என்னை நம்புவதில்லை. நான் அவரது ஆலோசகர். அவர் எனது கல்வி, சேவைகள், கட்சிக்கு செய்த பங்களிப்புக்களை கருத்தில் எடுக்கவேண்டும். நான் இல்லாது விட்டால் இந்த ஐக்கிய மக்கள் முன்னனி அரசு இருந்திருக்காது. அரசு தரப்பின் 108 பேரை 124 ஆக நானே மாற்றியிருந்தேன். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது அமைச்சரோ அதற்கான பங்களிப்பைச் செய்யவில்லை.
"கோப்" சபைக்கு எதிர்காலம் கிடையாது. அது விரைவில் செயலிழந்து விடும். எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எம்முடன் ஒத்துழைக்கப் போவதில்லை. எல்லாம் முடிந்து விட்டது.
ஐ.தே.கவின் ஜனநாயக குழு என்பவர்கள் யார்? என்னால் இதனை புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள் ஒரு குழுவினர். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஊழல் புரிந்தவர்கள். அவர்களை ஐ.தே.க கட்சியை விட்டு துரத்த எண்ணியிருந்தது. ஐ.தே.க படிப்படியாக அவர்களை துரத்தியிருந்தது. ஆனால் அவர்கள் தற்போது எமது அரசில் உள்ளனர். அவர்களை அரசில் இணைத்தது குறித்து எனது கட்சியை நான் வெறுக்கிறேன் என்றார் அவர்.
No comments:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.