Wednesday, October 03, 2007

சமஸ்டியா? ஒற்றையாட்சியா?: ரணில் கருத்து தெரிவிக்க மறுப்பு

[புதன்கிழமை, 3 ஒக்ரொபர் 2007]


இலங்கை இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையில் தீர்வா? அல்லது ஒற்றையாட்சி முறையில் தீர்வா? என்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதில் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளர் மங்கள சமரவீரவும் கொழும்பில் இன்று புதன்கிழமை கூட்டாக நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது:

மகிந்த அரசாங்கத்தைக் கவிழ்த்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எமது இந்த முயற்சிகளுக்கு மக்கள் பாரிய ஆதரவு வழங்குகின்றனர்.

கடந்த சில வாரங்களாக சந்தைகளில் பிரசாரம் செய்தோம். தற்போது சுவரொட்களை ஒட்டி வருகிறோம். மக்கள் இதற்கு தங்களது முழு ஆதரவையும் வழங்குகின்னறனர்.

நாட்டில் இன்று அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. ஆனால் புலிகளின் கப்பல்களை மூழ்கடித்த செய்திகளை மட்டுமே அரசாங்கம் பிரசாரப்படுத்தி வருகிறது. பொருட்களின் விலைகளை அதிகரிக்கும் போதுதான் இத்தகைய செய்திகள் வெளிவருகின்றன.

புலிகளுடன் செய்துகொண்ட தேர்தல் கால உடன்படிக்கை குறித்து அரசாங்கம் இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.

இது குறித்து நாடளாவிய ரீதியில் நடத்தவுள்ள ஐம்பது கூட்டங்களில் தெளிவுபடுத்துவோம். இலவசக் கல்வி நடைமுறையில் அரசாங்கம் கொண்டு வந்துள்ள மாற்றத்திற்கு எதிராக கையெழுத்து வேட்டைகளையும் நடத்தவிருக்கிறோம். இந்த கையெழுத்துக்களை அடக்கி மனு ஒன்றை தயாரித்து அதனை அனைத்துலக அரசுகளிடம் கையளிப்போம்.

மகிந்த ராஜபக்சவிடம் இருந்து புலிகள் நிதி பெறவில்லை என்று தமிழ்ச்செல்வன் அறிவித்துள்ளார். இது குறித்த உண்மைகளை நாளை நடைபெறும் எமது கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல அறிவிப்பார்.

இனப் பிரச்சினை தீர்விற்கு சமஸ்டியா ஒற்றையாட்சியா என்று வாதிட்டு காலத்தைக் கடத்த நாம் விரும்பவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி இவற்றில் எதனை ஆதரிக்கிறது என்று ஊடகங்கள் விசமப் பிரசாரம் செய்கின்றன. முதலில் ஊடகங்கள் பாண் விலை குறித்து செய்திகளை வெளியிட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி அந்த பாணை உட்கொண்ட பின்னர் சமஸ்டியையா ஒற்றையாட்சியையா ஆதரிக்கிறது என்று ஊடகங்களுக்கு கூறும்.

நாங்கள் கூறுவது ஊடகங்களில் வெளிவருவதில்லை. ஆனால் அதற்கான பதிலாக அரச தரப்பினர் கூறுவதனை ஊடகங்கள் வெளியிடுகின்றன. ஊடகங்களின் முன்னுள்ள இந்த பாரிய அச்சுறுத்தலை முதலில் களைய வேண்டும் என்றார் அவர்.

இந்த கூட்டத்தில் மங்கள சமரவீர தெரிவித்ததாவது:

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை எதிர்க்கும் அரச தரப்பில் உள்ள பலர் எம்முடன் பேச்சு நடத்தியுள்ளனர். அவர்கள் தேசிய அரசு ஒன்றை அமைப்பது குறித்து ஆராய்ந்துள்ளனர். எனவே அரசைக் கவிழ்ப்பது உறுதியாகி விட்டது.

தேசிய அரசாங்கம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளோம். நாம் அமைக்கும் தேசிய அரசில் 30 அமைச்சர்கள் மட்டுமே இருப்பர். அதன்மூலம் செலவுகளை கட்டுப்படுத்தி நாட்டை அபிவிருத்தியடையச் செய்வோம்.

எமது இந்த நடவடிக்கைக்கு ஏனைய கட்சிகளும் ஆதரவு வழங்க வேண்டும். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஜே.வி.பியும் எமக்கு ஆதரவு வழங்க வேண்டும்.

ஜே.வி.பி எமக்கு ஆதரவு வழங்கா விட்டால் நாட்டை அழிவுப்பாதையில் இருந்து காப்பாற்ற முடியாது போய்விடும். நாட்டை காப்பாற்ற வேண்டுமானால் போர் நிறுத்த உடன்படிக்கையை மறுசீரமைக்க வேண்டியது அவசியமாகும் என்றார் அவர்.

நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.