Tuesday, October 23, 2007

அனுராதபுரம் வான்படைத் தளத்திற்குள் புலிகள் ஊடுருவியது எப்படி?

[செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2007] அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்திற்குள் கரும்புலிகள் அணியினர் ஊடுருவியது எப்படி என்று அத்தாக்குதல் குறித்த விசாரணைகளை நடத்தும் பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்களை வெளியிட்டுள்ளனர். அத்தகவல்கள்: சிங்கள அலைவரிசையான "சிரச" தொலைக்காட்சியில் தாக்குதல் நிகழ்த்தப்படுவதற்கு முதல் நாள் இரவு 10:00 மணியளவில் பாடகர்களை தேர்ந்தெடுக்கும் "சிரச" சுப்பர் ஸ்ரார் நிகழ்ச்சி நேரடி ஒலிபரப்புச் செய்யப்பட்டது. வான்படைத் தளத்தைச் சூழ உள்ள காவல் நிலைகளில் தொலைக்காட்சி இல்லாததால் அங்கு பணியில் இருந்த அனைத்துப் படையினரும் அந்நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக வான் படைத்தளத்தின் பிரதான கட்டடத் தொகுதிக்குள் சென்றிருந்தனர். அதனால் காவல் நிலைகளில் படையினர் இருக்கவில்லை. இச்சந்தர்ப்பத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திய கரும்புலிகள் தாக்குதலை நடத்துவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே வான் படைத்தளத்தின் வெளிப்புறமாக இருந்த கம்பி வேலிகளை வெட்டி அதற்கு உடாகவே ஊடுருவியுள்ளனர். "சிரச" நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் தமக்குரிய காவல்நிலைகளுக்கு திரும்பும் முன்னரே கரும்புலிகள் அங்கு நிலையெடுத்து நின்றுவிட்டனர். தாக்குதலுக்கு முதல் நாள் மாலை வான் படைத் தளத்தில் மோட்டார் பந்தயம் ஒன்றும் நிகழ்ந்துள்ளது. அதனைத்தொடர்ந்து நிகழ்ச்சிகளும், விருந்தும் இடம்பெற்றன. இந்நிகழ்ச்சிகள் குறித்தும் விடுதலைப் புலிகளுக்கு வான் படைத்தளத்தில் இருந்தவர்கள் தகவல்களை வழங்கினரா என்றும் விசாரணைகள் நடைபெறுகின்றன என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.