Wednesday, October 03, 2007

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் வன்னிப் பயணத்திற்கு சிறிலங்கா அரசு தடை

[புதன்கிழமை, 3 ஒக்ரொபர் 2007] இலங்கைக்கு அடுத்த வார செல்லவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பர், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிக்குச் செல்வதற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் நிலமைகளை அறியும் பொருட்டு விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அரசியல்துறையைச் சேர்ந்தவர்களை சந்திக்கும் முகமாக லூய்ஸ் ஆர்பர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார். எனினும் லூய்ஸ் ஆர்பரின் வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன், அதற்கு பாதுகாப்பு காரணங்களை காட்டியுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை (10.10.07) இலங்கைக்கு செல்லவுள்ள லூய்ஸ் ஆர்பர் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, அரசியல் கட்சித் தலைவர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்திக்கவுள்ளதுடன், பயணத்தின் முடிவில் ஊடகவியலாளர்களையும் சந்திக்கவுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சந்திப்பு மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் லூய்ஸ் ஆர்பர் சந்திப்பார் எனத் தெரிகிறது. வடக்கு - கிழக்கு மாகாணங்களின் மனித உரிமைகள் தொடர்பான நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக இச்சந்திப்பு நடைபெறும் என்றும், எதிர்வரும் 11 ஆம் நாள் இச்சந்திப்பு நடைபெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன், கூட்டமைப்பின் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழு லூய்ஸ் ஆர்பரைச் சந்திக்கக்கூடும் எனத் தெரிகிறது. தமிழர் தாயகத்தில் காணாமற் போன, நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்ட, கடத்தப்பட்ட தமிழர்களினது பட்டியலை தாம் தயாரித்து வருவதாகவும், அதனை லூய்ஸ் ஆர்பரிடம் கையளிக்க உள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.